காமனெயி மரணம் பாகிஸ்தான் உள்பட இஸ்லாமிய உலகில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும்?

காமனெயி மரணம், இரான் - அமெரிக்கா, இஸ்ரேல், இந்தியா, பாகிஸ்தான், இஸ்லாம், அரபு முஸ்லிம் நாடுகள்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், ரௌஹான் அகமது
    • பதவி, பிபிசி செய்தியாளர்
  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

அமெரிக்க மற்றும் இஸ்ரேலியத் தாக்குதல்களில் இரானின் உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி காமனெயி உயிரிழந்ததைத் தொடர்ந்து, இரானிய அதிபர் மசூத் பெசெஷ்கியன் விடுத்துள்ள செய்தியில், இந்த 'கொடூரமான குற்றத்திற்கு' தகுந்த பதில் அளிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

"எங்கள் முழு வலிமை மற்றும் உறுதியுடன், இஸ்லாமிய சமூகம் மற்றும் உலகின் சுதந்திர மக்களின் ஆதரவுடன், இந்த 'பயங்கரமான குற்றத்தைச்' செய்தவர்களை நாங்கள் வருந்தச் செய்வோம்."

அலி காமனெயி 37 ஆண்டுகளாக இஸ்லாமிய குடியரசை "மிகுந்த ஞானத்துடனும் தொலைநோக்குப் பார்வையுடனும் வழிநடத்தினார் என்றும், அவரது மறைவுக்குப் பிறகு இரான் ஒரு கடினமான காலத்தை கடந்து செல்லும்" என்றும் பெசெஷ்கியன் கூறினார்.

86 வயதான காமனெயி இரானின் உச்ச தலைவராக இருந்தபோதிலும், இரானுக்கு வெளியே பாகிஸ்தான், இந்தியா உட்பட உலகின் பல நாடுகளில் ஷியா சித்தாந்தத்தில் அவரைப் பின்பற்றுபவர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர்.

இந்தியாவின் ஷியா சமூகமும் அவரை தங்கள் உச்ச தலைவராகக் கருதுகிறது.

இராக், பாகிஸ்தான், சிரியா மற்றும் உலகெங்கிலும் உள்ள பிற இஸ்லாமிய நாடுகளில் நடைபெறும் பேரணிகளின் போது ஷியா இஸ்லாமியர்கள் காமனெயி படங்களை ஏந்தியிருப்பதை காண முடிகிறது.

ஞாயிற்றுக்கிழமை, பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடத்தும் நிலை உருவானது. போராட்டக்காரர்கள் வெளிப்புற பாதுகாப்பு வளையத்தை உடைத்து உள்ளே நுழைந்து சேதப்படுத்தினர். இந்தச் சம்பவத்தில் ஒன்பது பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கில்கிட்-பால்டிஸ்தானில் நடந்த போராட்டங்களின் போது ஐ.நா அலுவலகங்கள் மற்றும் இதர சொத்துக்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன.

உலகில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?

காமனெயி மரணம், இரான் - அமெரிக்கா, இஸ்ரேல், இந்தியா, பாகிஸ்தான், இஸ்லாம், அரபு முஸ்லிம் நாடுகள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஆயதுல்லா அலி காமெனெயி மரணத்தைத் தொடர்ந்து பாகிஸ்தானில் வன்முறை போராட்டங்கள் வெடித்தன.

இத்தகைய சூழ்நிலையில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதலில் காமெனியி மரணம் உலகளவில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற கேள்வி எழுகிறது.

கடந்த காலங்களில், இரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான பதற்றங்களின் போது மத்திய கிழக்கில் உள்ள ஹெஸ்பொலா, ஹூதி மற்றும் அதுபோன்ற குழுக்கள் இரானை ஆதரித்துள்ளன. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைகளால் இந்தக் குழுக்கள் பெரும் இழப்புகளைச் சந்தித்துள்ளன.

காமனெயி மரணத்திற்குப் பிறகு, அமெரிக்காவிற்கும் அதன் நட்பு நாடுகளுக்கும் நிச்சயமாக அச்சுறுத்தல்கள் எழக்கூடும் என்று அமெரிக்காவின் நியூ லைன்ஸ் இன்ஸ்டிடியூட் மூத்த இயக்குநரும், மத்திய கிழக்கு அரசியலை உன்னிப்பாக கவனிப்பவருமான முனைவர் கம்ரான் புகாரி கருதுகிறார்.

"இருப்பினும், இது புரட்சிகர காவல்படை மற்றும் அதன் குட்ஸ் படையின் தற்போதைய திறன்கள் என்ன என்பதையும், மற்ற நாடுகளில் உள்ள அவர்களின் பினாமி குழுக்களுக்கு எவ்வளவு வலிமை மிஞ்சியுள்ளது என்பதையும் பொறுத்தது" என்று அவர் பிபிசி உருதுவிடம் தெரிவித்தார்.

"சமீபத்திய மாதங்களில் இஸ்ரேல், ஹெஸ்பொலாவின் முழு மையத் தலைமையையும் அழித்ததையும், சிரியாவில் பஷர் அல்-அசாத் அரசாங்கத்தின் வீழ்ச்சியையும் நாம் கண்டோம், ஆனால் இரானால் அவர்களுக்கு உதவும் வகையில் எதையும் செய்ய முடியவில்லை."

அலி காமனெயி மரணம் உலகெங்கிலும் உள்ள ஷியா இஸ்லாமியர்களை நிச்சயமாக வருத்தமடையச் செய்யும் என்று அவர் நம்புகிறார்.

ஆனால் இராக், லெபனான் மற்றும் சிரியா போன்ற நாடுகளில், இரானிய உச்ச தலைவரை விட ஆயதுல்லா சிஸ்தானியை பின்பற்றுபவர்கள் அதிகமாக உள்ளனர்.

"மதத் தலைவர்கள் அரசியலில் ஈடுபடுவதை அவர்கள் விரும்புவதில்லை."

காமனெயி மரணம், இரான் - அமெரிக்கா, இஸ்ரேல், இந்தியா, பாகிஸ்தான், இஸ்லாம், அரபு முஸ்லிம் நாடுகள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஆயத்துல்லா அலி காமனெயி மரணத்தைத் தொடர்ந்து காஷ்மீரிலும் போராட்டங்கள் வெடித்தன.

மத்திய கிழக்கை உன்னிப்பாகக் கண்காணிக்கும் பிற ஆய்வாளர்களும் முனைவர் புகாரியின் கருத்தைப் போன்றே சிந்திக்கின்றனர்.

ஹீப்ரு பல்கலைக்கழகத்தின் ஆசிய ஆய்வுகள், இஸ்லாமிய மற்றும் மத்திய கிழக்கு ஆய்வுகளின் இணைப் பேராசிரியர் சைமன் வொல்ப்காங் ஃபக்ஸ் கூறுகையில், இந்தச் சூழ்நிலையில் ஹெஸ்பொலா அமைதியான பார்வையாளராக இருப்பதை நிறுத்த வாய்ப்புள்ளது என்கிறார்.

இராக்கிய ஆயுதக் குழுக்களும் இராக் அல்லது அதற்கு வெளியேயுள்ள அமெரிக்கப் படைகள் மீது தாக்குதல்களை நடத்தக்கூடும் என்றும் அவர் மேலும் கூறுகிறார்.

இருப்பினும், அக்டோபர் 2023-க்குப் பிறகு, ஹெஸ்பொலா உள்ளிட்ட பிற இரான் ஆதரவு பெற்ற குழுக்கள் பலவீனமடைந்துவிட்டதாகவும், இனி அவர்களால் அதிகாரச் சமநிலையைக் சீர்குலைக்க முடியாது என்றும் அவர் நம்புகிறார்.

"இஸ்லாமிய உலகின் சில பகுதியினர் காமனெயியின் ஏகாதிபத்திய எதிர்ப்பு நிலைப்பாட்டை நிச்சயமாக ஆதரிக்கின்றனர், ஆனால் காமனெயி மரணத்திற்காக அவர்கள் கண்ணீர் விடுவார்கள் என்று நான் நினைக்கவில்லை. குறிப்பாக சிரியா, லெபனான் மற்றும் வளைகுடா நாடுகளில் இரானியத் தலையீட்டின் விளைவுகளால் பாதிக்கப்பட்டவர்கள்"என்றும் அவர் குறிப்பிட்டார்.

காமனெயி மரணம் இரானிய அரசாங்கத்தின் மீது என்ன தாக்கத்தை ஏற்படுத்தும், அது நாட்டைத் தாண்டி விளைவுகளை ஏற்படுத்துமா?

காமனெயி மரணம் இரானின் தற்போதைய அரசாங்க அமைப்பை முழுமையாக வீழ்த்தாது, ஆனால் அது "இனி ஒருபோதும் முன்பைப் போல இருக்காது" என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

"ரஹ்பர்-இ-அலா (உச்ச தலைவர்) இந்த அமைப்பின் மைய அங்கமாக இருந்தார். அவர் பல ஆண்டுகளாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோதிலும், நாட்டின் விவகாரங்களை கையாள புரட்சிகர காவல்படை அல்லது இரானிய ராணுவத்தையே முற்றிலும் நம்பியிருந்தார்" என்று முனைவர் கம்ரான் புகாரி கூறுகிறார்.

புரட்சிகர காவல்படை கடந்த காலத்தை விட இப்போது பலவீனமாகவே இருக்கிறது என்று முனைவர் புகாரி கருதுகிறார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "காமனெயி மரணம் ஒரு சகாப்தத்தின் முடிவைக் குறிக்கிறது. தற்போதைய அமைப்பு இப்போதைக்கு முழுமையாகச் சரிந்துவிடாது, ஆனால் அதில் நிச்சயமாக மாற்றங்கள் இருக்கும்" என்கிறார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் , இரானில் தான் எத்தகைய அமைப்பைக் காண விரும்புகிறேன் என்பதை ஏற்கனவே தெரிவித்துள்ளார்.

இரானிய உச்ச தலைவரின் மரணத்தை அறிவித்த அவர், "புரட்சிகர காவல்படையின் பல்வேறு உறுப்பினர்கள் மற்றும் பிற பாதுகாப்பு மற்றும் காவல்துறையினர் இனி போரிட விரும்பவில்லை என்றும், எங்களிடம் மன்னிப்பு கோர விரும்புவதாகவும் நாங்கள் கேள்விப்படுகிறோம்" என்று கூறியிருந்தார்.

இரானிய பாதுகாப்புப் படைகள், 'தேசபக்தி கொண்ட மக்களுடன்' இணைந்து நாட்டை மீண்டும் மகத்துவத்திற்கு அழைத்துச் செல்லும் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்தார்.

காமனெயி தனது வாழ்நாள் முழுவதும் மேற்கத்திய நாடுகளை, குறிப்பாக அமெரிக்காவை எப்போதும் அவநம்பிக்கையுடனேயே பார்த்தார். அவருக்குப் பிறகு மாற்றம் வருவது நிச்சயம் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.

சைமன் வொல்ப்காங் ஃபக்ஸ் கூறுகையில், "காமனெயி தலைமையின் கீழ், இரானில் அர்த்தமுள்ள சீர்திருத்தங்கள் அல்லது அமெரிக்காவுடனான மேம்பட்ட உறவுகளுக்கான வாய்ப்புகள் இல்லை. ஆனால் எதிர்காலத்தில், இரானின் புதிய உச்ச தலைவர் இரானின் பாதையை மாற்றுவதற்கான சுதந்திரத்தைப் பெறுவார்" என்றார்.

காமனெயி மரணம், இரான் - அமெரிக்கா, இஸ்ரேல், இந்தியா, பாகிஸ்தான், இஸ்லாம், அரபு முஸ்லிம் நாடுகள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஆயத்துல்லா அலி காமெனியி மரணத்திற்கு பதிலடி கொடுக்கப்படும் என்று இரான் கூறுகிறது.

இரான் ஆட்சி முறையில் என்ன மாற்றங்கள் வரும் என்பதற்கு காலம் தான் பதில் சொல்லும், ஆனால் காமனெயி மரணம் நிச்சயமாக பல நாடுகளுக்கு சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும்.

"இஸ்லாமியப் புரட்சியின் தீவிர சித்தாந்தங்களைப் பற்றி நீங்கள் ஆராயும் போது, 'விலாயத்-இ-ஃபகிஹ்' ( இஸ்லாமிய மதத் தலைமையின் பாதுகாப்பு) என்பதை உங்களால் புறக்கணிக்க முடியாது," என்று உலகெங்கிலும் உள்ள இரான் ஆதரவுக் குழுக்களைப் பற்றி ஆராய்ச்சி செய்யும் பிலிப் ஸ்மித் கூறுகிறார்.

"இந்தச் சித்தாந்தம் மதம், அரசியல் மற்றும் சமூகம் சார்ந்தது."

"இந்தக் கொள்கைகள் சமூகத் தளங்கள் உட்பட பல முனைகளில் மக்களைத் திரட்ட முடியும் என்பதை புரட்சிகர காவல்படையினர் அறிவார்கள்."

பிலிப் கூற்றுப்படி, "பிரச்னை என்னவென்றால், காமனெயி ஒட்டுமொத்த இஸ்லாமிய உம்மாவிற்கும் (சமூகம்) தலைவராக இருக்க விரும்பினார், ஆனால் அவர் ஒரு உண்மையான ஆயதுல்லா அல்ல, அவர் ஆயதுல்லா சிஸ்தானியை விடக் குறைந்த அந்தஸ்தையே கொண்டிருந்தார்."

அதனால்தான் கொமேனியின் மரணத்திற்குப் பிறகு, இரானிய அரசியலமைப்பு திருத்தப்பட்டு, 'ரஹ்பர்' (தலைவர்) பதவிக்கு 'மார்ஜா' (அதிகாரம்) பெற்றிருக்க வேண்டும் என்ற நிபந்தனை நீக்கப்பட்டது.

இங்கு 'விலாயத்-இ-ஃபகிஹ்' என்பதைப் புரிந்துகொள்வது அவசியமானது.

காமனெயி, ஆயதுல்லா ருஹொல்லா கொமேனியின் சீடராக இருந்தார். கொமேனியின் கீழ், உலமாக்கள் இமாம்-இ-ஜமானாவின் பிரதிநிதிகளாகவும், இஸ்லாமிய நீதித்துறை மற்றும் கல்வியில் நிபுணர்களாகவும் கருதப்பட்டு, அரசியல் அதிகாரத்தின் ஆதாரமாகப் பார்க்கப்பட்டனர்.

பொதுவாக, ஷியா மத மற்றும் அரசியல் சிந்தனையானது, இமாம்-இ-ஜமானா மறைந்திருந்த காலத்தில் நிறுவப்பட்ட அரசு அதிகாரத்தை ஒரு வலுக்கட்டாயமான ஆக்கிரமிப்பாகக் கருதியது.

இதற்கு நேர்மாறாக, ஆயதுல்லா கொமேனி, இமாம்-இ-ஜமானா தோன்றும் வரை அரசாங்கம் அல்லது அரசியல் அதிகாரத்தை அந்நியப்படுத்த முடியாது என்று வலியுறுத்தினார்.

அவரது கூற்றுப்படி, அறிஞர்களும் முஜ்தாஹித்களும் (புதிய சூழ்நிலைகளில் இஸ்லாத்தின்படி முடிவெடுப்பவர்கள்) முன்வந்து அதிகாரத்தைக் கைப்பற்றி சமூகத்தைச் சீர்திருத்த வேண்டிய அவசியம் இருந்தது.

இரான் இந்த 'விலாயத்-இ-ஃபகிஹ்' கொள்கையை மக்களைத் திரட்டும் ஒரு கருவியாகப் பயன்படுத்தியதுடன், அதைத் தனது எல்லைகளுக்கு அப்பாற்பட்ட அரசியலுக்காகவும் பயன்படுத்தியது என்று பிலிப் கூறுகிறார்.

காமனெயி மரணம், இரான் - அமெரிக்கா, இஸ்ரேல், இந்தியா, பாகிஸ்தான், இஸ்லாம், அரபு முஸ்லிம் நாடுகள்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

பிலிப் கூற்றுப்படி, "இதைப் பயன்படுத்தி, அவர்கள் லெபனானில் ஹெஸ்பொலாவை உருவாக்கினர், இதன் கீழ் இராக்கில் 'கதாயிப் சையித் அல்-ஷுஹதா' போன்ற குழுக்களும், அதேபோல் பாகிஸ்தானில் 'லஷ்கர்-இ-ஜைனபியூன்' போன்ற குழுக்களும் உள்ளன."

உலகெங்கிலும் உள்ள அனைத்து ஷியாக்களின் ஆன்மீகத் தலைவராக காமனெயி இல்லாவிட்டாலும், அவரது மரணம் அவரது ஆதரவாளர்களின் வாழ்க்கையில் நிச்சயமாக தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை மறுக்க முடியாது.

பேராசிரியர் சைமன் வொல்ப்காங் ஃபக்ஸ் கூறுகையில், "பாகிஸ்தான், இந்தியா, இராக் மற்றும் லெபனானில் உள்ள மக்கள் அவரது வாழ்நாளில் அவரது மதப் போதனைகளைப் பின்பற்றாவிட்டாலும், இந்தப் பகுதிகளில் உள்ள அவரது ஆதரவாளர்களிடையே அவர் ஒரு பெருமை மற்றும் வலிமையின் அடையாளமாக நினைவு கூரப்படுவார்" என்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு