யான்சன் அதிரடி: நியூசிலாந்துக்கு எதிராக 169 ரன்கள் எடுத்தது தென்னாப்பிரிக்கா

பட மூலாதாரம், Getty Images
நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்தது.
ஈடன் கார்டனில் நடக்கும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. நியூசிலாந்து பௌலர்களின் சிறப்பான பந்துவீச்சின் காரணமாக தென்னாப்பிரிக்க அணி தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்தது. பிரெவிஸ் மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்து ஆடியதால் அந்த அணி பவர்பிளேவில் 2 விக்கெட்டுகளை இழந்து 48 ரன்கள் எடுத்தது.
பவர்பிளேவுக்குப் பிறகு நியூசிலாந்து ஸ்பின்னர்கள் மிகவும் சிக்கனமாகப் பந்துவீச, தென்னாப்பிரிக்காவுக்குப் பெரும் நெருக்கடி ஏற்பட்டது. ஒருகட்டத்தில் அந்த அணி 77/5 என்ற நிலைக்கு வந்தது.
ஆறாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த டிரிஸ்டன் ஸ்டப்ஸ், மார்கோ யான்சன் இருவரும் நல்லதொரு பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர். ஸ்டப்ஸ் நிதானமாக ஆட, யான்சன் அதிரடி காட்டினார். அதனால், அந்த அணி சரிவிலிருந்து மீண்டது. ஸ்டப்ஸ் 29 ரன்களில் அவுட் ஆனார். 30 பந்துகளில் 55 ரன்கள் எடுத்த யான்சன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இறுதியில் தென்னாப்பிரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து தரப்பில் மேட் ஹென்றி, கோல் மெக்கான்சீ, ரச்சின் ரவீந்திரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.



















