நன்றி நேயர்களே!
இன்றைய நேரலை பக்கத்தில் இணைந்திருந்தமைக்கு நன்றி. தமிழ்நாடு, இந்தியா, இலங்கை மற்றும் உலகளாவிய முக்கிய நிகழ்வுகளைத் தொடர்ந்து உடனுக்குடன் தெரிந்துகொள்ள, பிபிசி தமிழின் பிற செய்திகளையும் பார்க்கவும். மீண்டும் சந்திப்போம்!
தமிழ்நாடு, இந்தியா, இலங்கை, உலகம் மற்றும் விளையாட்டு தொடர்பான சமீபத்திய நிகழ்வுகள் பற்றிய தகவல்களை இந்த பக்கத்தில் பார்க்கலாம்.
இன்றைய நேரலை பக்கத்தில் இணைந்திருந்தமைக்கு நன்றி. தமிழ்நாடு, இந்தியா, இலங்கை மற்றும் உலகளாவிய முக்கிய நிகழ்வுகளைத் தொடர்ந்து உடனுக்குடன் தெரிந்துகொள்ள, பிபிசி தமிழின் பிற செய்திகளையும் பார்க்கவும். மீண்டும் சந்திப்போம்!

பட மூலாதாரம், Reuters
இரானின் மினாபில் உள்ள பெண்கள் பள்ளி மீது நடத்தப்பட்ட தாக்குதல் பற்றி விசாரித்து வருவதாக அமெரிக்கா பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்சேத் தெரிவித்துள்ளார்.
இந்தத் தாக்குதலில் பல குழந்தைகள் உட்பட 153 பேர் கொல்லப்பட்டதாக இரான் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த பீட் ஹெக்சேத், "நாங்கள் அதைப்பற்றி விசாரித்து வருகிறோம் என்பதை மட்டுமே என்னால் தெரிவிக்க முடியும். நாங்கள் எப்போதும் பொதுமக்கள் இலக்குகளை குறிவைக்க மாட்டோம். இந்தச் சம்பவத்தை கவனித்து விசாரித்து வருகிறோம்." எனத் தெரிவித்தார்.
பள்ளியைத் தாக்கிய தளவாடம் யாருடையது என்கிற கேள்விக்கும், "நாங்கள் அதை விசாரித்து வருகிறோம்." என்று மட்டும் பதிலளித்தார்.

பட மூலாதாரம், Getty Images
தமிழ்நாட்டில் காலியாகும் மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தலில் அதிமுக சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் தம்பிதுரை போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 6 இடங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ள நிலையில் திமுக கூட்டணிக்கு 4 இடங்களும் அதிமுக கூட்டணிக்கு 2 இடங்களும் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
தற்போது 1 இடத்திற்கு அதிமுக சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்னொரு இடம் யாருக்கு வழங்கப்படும் என்பது விவாதப் பொருளாகியுள்ளது.
அதிமுக கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ், அன்புமணி ராமதாஸ் தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

பட மூலாதாரம், Getty Images
நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்தது.
ஈடன் கார்டனில் நடக்கும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. நியூசிலாந்து பௌலர்களின் சிறப்பான பந்துவீச்சின் காரணமாக தென்னாப்பிரிக்க அணி தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்தது. பிரெவிஸ் மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்து ஆடியதால் அந்த அணி பவர்பிளேவில் 2 விக்கெட்டுகளை இழந்து 48 ரன்கள் எடுத்தது.
பவர்பிளேவுக்குப் பிறகு நியூசிலாந்து ஸ்பின்னர்கள் மிகவும் சிக்கனமாகப் பந்துவீச, தென்னாப்பிரிக்காவுக்குப் பெரும் நெருக்கடி ஏற்பட்டது. ஒருகட்டத்தில் அந்த அணி 77/5 என்ற நிலைக்கு வந்தது.
ஆறாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த டிரிஸ்டன் ஸ்டப்ஸ், மார்கோ யான்சன் இருவரும் நல்லதொரு பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர். ஸ்டப்ஸ் நிதானமாக ஆட, யான்சன் அதிரடி காட்டினார். அதனால், அந்த அணி சரிவிலிருந்து மீண்டது. ஸ்டப்ஸ் 29 ரன்களில் அவுட் ஆனார். 30 பந்துகளில் 55 ரன்கள் எடுத்த யான்சன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இறுதியில் தென்னாப்பிரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து தரப்பில் மேட் ஹென்றி, கோல் மெக்கான்சீ, ரச்சின் ரவீந்திரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

பட மூலாதாரம், Getty Images
மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் 6 மாநிலங்களவை இடங்கள் காலியாகவுள்ள நிலையில், திமுக கூட்டணிக்கு 4 இடங்களும் அதிமுக கூட்டணிக்கு 2 இடங்களும் கிடைக்க உள்ளன.
இதில் திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 1 இடமும் காங்கிரஸ் கட்சிக்கு 1 இடமும் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள 2 இடங்களில் திமுக சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவாவும், திமுக செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரனும் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களில் திருச்சி சிவா ஏற்கெனவே மாநிலங்களவை உறுப்பினராக உள்ள நிலையில், கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் முதல் முறையாக போட்டியிட உள்ளார்.
மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் மார்ச் 16-ஆம் தேதி நடைபெற உள்ளது.

பட மூலாதாரம், DMK

திமுக - காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இன்று முடிவடைந்தது. சட்டப்பேரவைத் தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி 28 இடங்களிலும் மாநிலங்களவை தேர்தலில் ஒரு இடத்திலும் போட்டியிட உள்ளது.
ஏற்கெனவே பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற நிலையில் தொகுதி எண்ணிக்கையில் மாற்றுக் கருத்து நிலவியதால் இறுதி முடிவு எட்டப்படாமலே இருந்தது. காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் எம்பி ப.சிதம்பரம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்திருந்தனர்.
இன்று திமுக தலைமையிடமான அண்ணா அறிவாலயத்தில் தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் பேச்சுவார்த்தை குழு பொறுப்பாளரான கிரிஷ் சோடங்கரும் பங்கேற்றனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய செல்வப்பெருந்தகை, "இன்று தொகுதி உடன்படிக்கை ஏற்பட்டிருக்கிறது. அகில இந்திய காங்கிரஸ் கட்சி மாநிலங்களவை வேட்பாளர் யார் என்பதை அறிவிக்கும். தாமதம் என்பதே கிடையாது. நாங்கள் மனநிறைவோடு, மகிழ்ச்சியாக இருக்கிறோம்." என்றார்.
புதுச்சேரி சட்டப்பேரவை தொகுதி பங்கீடு தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த கிரிஷ் சோடங்கர், "தமிழ்நாடு ஏற்பாடுக்காக தான் புதுச்சேரி பேச்சுவார்த்தை காத்திருந்தது. ஏற்கெனவே ஒரு முறை பேச்சுவார்த்தை நடைபெற்றது, அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை நாளை தொடங்கும்." என்றார்.

பட மூலாதாரம், DMK

பட மூலாதாரம், Getty Images
லெபனானில் உள்ள லிடானி ஆற்றுக்கு தெற்குப் பகுதியில் வசிக்கும் மக்கள் உடனடியாக அந்தப் பகுதியிலிருந்து வெளியேறுமாறு இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் (ஐடிஎஃப்) தெரிவித்துள்ளன.
தெற்குப் பகுதியில் வசிக்கும் மக்கள் வடக்கு நோக்கி நகருமாறு ஐடிஎஃப் கூறியுள்ளது. "உங்களின் பாதுகாப்புக்காக நீங்கள் உங்களின் வீடுகளை விட்டு உடனடியாக வெளியேற வேண்டும்." எனவும் ஐடிஎஃப் தெரிவித்துள்ளது.
"ஹெஸ்பொல்லா சண்டையாளர்கள், நிலைகள் அல்லது ஆயுதங்களுக்கு அருகில் இருப்பவர்கள் தங்களின் உயிர்களை சிக்கலில் வைத்திருக்கிறார்கள்," என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹெஸ்பொல்லாவால் தனது ராணுவ நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் எந்த கட்டடமும் வீடும் சட்டப்பூர்வ இலக்குகள் என்றும் நடவடிக்கைக்கு உட்படுத்தப்படும் என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

பட மூலாதாரம், VANTOR
இரான் தனது எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் ஒன்றை மீண்டும் தாக்கியதாக, சௌதி அரேபியாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அந்நாட்டின் மிகப்பெரிய சுத்திகரிப்பு நிலையங்களில் ஒன்றான ராஸ் தனுரா தாக்குதலுக்கு இலக்கானதாக சௌதி அரேபியா கூறுகிறது.
முதல்கட்ட விசாரணையில் இந்தத் தாக்குதல் டிரோன் மூலமாக நடத்தப்பட்டது என்றும் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் பாதுகாப்பு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
இதற்கு முன்னரும் கூட இந்த சுத்திகரிப்பு நிலையம் இரானால் தாக்கப்பட்டது என, சௌதி அரேபியா குற்றம் சாட்டியிருந்தது. "தாக்க முயன்ற இரண்டு ட்ரோன்கள் அழிக்கப்பட்டது." என பாதுகாப்பு துறை செய்தித் தொடர்பாளர் அப்போது தெரிவித்திருந்தார்.

பட மூலாதாரம், Reuters
இரானிய அரசு ஊடகம் மற்றும் தெஹ்ரானில் உள்ள ஏஎஃப்பி செய்தி முகமையின் செய்தியாளர்களின்படி, இரானிய தலைநகரமான தெஹ்ரானின் கிழக்குப் பகுதியில் பெரும் வெடிப்பு சத்தம் கேட்டது.
பிபிசி உருது கூற்றின்படி, முன்னதாக இஸ்ரேலிய வான் படை தெஹ்ரானின் அரசு இலக்குகள் மீது ‘பெரியளவிலான தாக்குதல்களை’ நிகழ்த்தியதாக, இஸ்ரேலிய பாதுகாப்பு படைகள் தெரிவித்தன.
மேலும், இஸ்ரேல் மீண்டும் வான்வழி தாக்குதல்களை தொடங்கியுள்ள லெபனானிலிருந்து தாக்குதல் குறித்த புதிய படங்கள் பிபிசிக்கு கிடைக்கப் பெற்றுள்ளன.
இரான் ஆதரவு பெற்ற ஹெஸ்பொலா குழுவுடன் தொடர்புடைய நிலைகளை குறிவைப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. லெபனான் தலைநகரம் பெய்ரூட்டின் தெற்கு பகுதிகளில் வசிப்பவர்களை வெளியேறுமாறு இஸ்ரேல் ராணுவம் எச்சரித்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images
இரான் ஏவிய இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளால் தங்களுடைய நாடு இலக்கு வைக்கப்பட்டதாக கத்தார் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த இரண்டு ஏவுகணைகளில் ஒன்று கத்தார் வான் பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது என பாதுகாப்பு அமைச்சகம் கூறுகிறது.
இந்தப் பிராந்தியத்தின் மிகப்பெரிய ராணுவ தளமான அல் உதெய்த் விமானப்படை தளத்தை இரண்டாவது ஏவுகணை தாக்கியது.
இந்தத் தாக்குதலில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என கத்தார் தெரிவித்துள்ளது. ஆனால் அமெரிக்காவிடமிருந்து எந்தப் பதிலும் இல்லை.

பட மூலாதாரம், Getty Images
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஏமாற்றுவதாக குற்றம் சாட்டிய இரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, அணுசக்தி பேச்சுவார்த்தைகள் சொத்து பரிவர்த்தனைகள் போல நடத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
"கடினமாக அணுசக்தி விவாதங்கள் சொத்துக்கள் வாங்குவதும் விற்பதும் போல நடத்தப்படுவதும், பெரிய பொய்கள் உண்மையை மறைப்பதும், யதார்த்தத்துக்கு மிகவும் தொலைவில் உள்ள எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடியாது," என தனது எக்ஸ் தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த முடிவு பேச்சுவார்த்தை மேசையின் மீது கோபத்துடன் குண்டு வீசுவது போன்றது ஆகும் எனக் கூறும் அவர், டிரம்ப் ராஜதந்திரத்துக்கும் அவரைத் தேர்வு செய்த அமெரிக்கர்களுக்கும் துரோகம் இழைத்துள்ளார் என்றும் தெரிவித்தார்.
செவ்வாய்கிழமை அன்று இரான் பேச்சுவார்த்தை நடத்த விரும்பியதாகக் கூறிய டிரம்ப், அதற்கு 'மிகவும் தாமதமாகிவிட்டது' என்றும் தெரிவித்தார்.
டிரம்பின் கருத்தைத் தொடர்ந்து பேசிய இரானின் பாதுகாப்பு தலைவர் அலி லரிஜானி "நாங்கள் அமெரிக்கா உடன் பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம்." என்று கூறினார்.
இன்று இரவு வரை நேரலை செய்திகளை தொகுத்து வழங்குவது மோகன்.

பட மூலாதாரம், @DrTamilisai4BJP/X
‘திருச்சி மண்டல ரயில்வே அலுவலகத்தின் நுழைவு வாயிலுக்கு ‘கர்தவ்ய த்வார்’ என ஹிந்தியில் பெயரிடப்பட்டுள்ளது இந்தியைத் திணிக்கும் முயற்சி’ என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
“நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர், இந்தித் திணிப்பு வெறியில் எல்லை மீறிச் சென்று கொண்டிருக்கிறது பா.ஜ.க” என்றும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், “தமிழர்களின் சுயமரியாதையைச் சீண்டிப் பார்க்கும் இவர்களுக்குச் சரியான பாடம் புகட்ட வேண்டும்” என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
“உடனடியாக அங்கு சரியான தமிழ்ப் பெயர்கள் இடம்பெற வேண்டும். இல்லையென்றால் தமிழர்களின் சூட்டை ஒன்றிய பா.ஜ.க. அரசு உணர வேண்டி இருக்கும் என்று எச்சரிக்கை விடுக்கிறேன்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் இதுகுறித்து பாஜகவைச் சேர்ந்த தமிழிசை சௌந்தரராஜன் எதிர்வினையாற்றியுள்ளார்.
தமிழ் மொழியில் பெயர் பலகையை வைக்குமாறு ரயில்வே அதிகாரிகளுக்கு ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் வலியுறுத்த வேண்டுமென அவர் கோரிக்கை வைத்துள்ளார்.
“ஏனெனில், சில அதிகாரிகள் செய்த தவறுகள் காரணமாக மத்திய அரசு தமிழ்நாட்டில் இந்தியை திணிக்க முயற்சிப்பதாக தேவையற்ற முறையில் குற்றம் சாட்டப்படுகிறது” என்றும் அவர் தனது எக்ஸ் தள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
ஆடவர் டி20 உலகக்கோப்பையின் முதல் அரையிறுதிப் போட்டியில், தென்னாபிரிக்கா அணியும் நியூசிலாந்து அணியும் மோதுகின்றன.
கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று (மார்ச் 4) இரவு 7 மணிக்கு இந்தப் போட்டி தொடங்குகிறது. இந்தத் தொடரில் தோல்வியே சந்திக்காத ஒரே அணி தென்னாப்பிரிக்கா தான். தென்னாப்பிரிக்க அணி தாங்கள் விளையாடிய 7 போட்டிகளிலும் வெற்றி பெற்றிருக்கிறது.
டி20 கிரிக்கெட் வரலாற்றைப் பொறுத்தவரை நியூசிலாந்துக்கு எதிராகத் தென்னாப்பிரிக்க அணியே அதிக வெற்றிகளைப் பெற்றுள்ளது. இரு அணிகளும் மோதிய 19 போட்டிகளில் தென்னாப்பிரிக்க அணி 12 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது, நியூசிலாந்து அணி 7 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
நியூசிலாந்து அணி: ஜேம்ஸ் நீஷம், டெவன் கான்வே (விக்கெட் கீப்பர்), கோல் மெக்கோன்சி, டேரில் மிட்ஷெல், இஷ் சோதி, ஜேக்கப் டஃபி, மிட்செல் சான்ட்னர் (கேப்டன்), மார்க் சாப்மேன், மாட் ஹென்றி, லாக்கி பெர்குசன், கைல் ஜேமிசன், டிம் சீஃபர்ட் (விக்கெட் கீப்பர்), க்ளென் பிலிப்ஸ், ஃபின் ஆலன், ரச்சின் ரவீந்திரா.
தென்னாப்பிரிக்க அணி: டேவிட் மில்லர், குயின்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), கேசவ் மகாராஜ், ஜார்ஜ் லிண்டே, கார்பின் போஷ், ககிசோ ரபாடா, ஜேசன் ஸ்மித், அன்ரிச் நார்ட்ஜே, ஐடன் மார்க்ரம் (கேப்டன்), லுங்கி எங்கிடி, ரியான் ரிக்கல்டன் (விக்கெட் கீப்பர்), மார்கோ ஜான்சன், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டெவால்ட் ப்ரீவிஸ், குவேனா மபகா.
நாளை (மார்ச் 5) மும்பையின் வான்கடே மைதானத்தில், இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது அரையிறுதி போட்டி நடைபெறுகிறது.

பட மூலாதாரம், Getty Images
மேற்கு ஆசியா மற்றும் வளைகுடா பிராந்தியத்தின் தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, இந்திய வெளியுறவு அமைச்சகம் புதன்கிழமை (மார்ச் 4) டெல்லியில் ஒரு சிறப்பு கட்டுப்பாட்டு அறையை அமைத்துள்ளது.
இந்த கட்டுப்பாட்டு அறை காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்படும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மக்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
1800118797 (கட்டணமில்லா எண்)
+91 11 2301 2113
+91 11 2301 4104
+91 11 2301 7905
பிராந்தியத்தில் உள்ள இந்திய தூதரகங்களின் அவசர எண்கள்:
பஹ்ரைன்: +973 39418071
இரான்: +98 9128109115 / +98 912810910 / +98 912810910 / +98 932179359
இராக்: +964 771 651 1185 / +964 770444 4899
இஸ்ரேல்: +972 54 7520711 / +972 54 2428378
ஜோர்டான்: +962 770 422 276
குவைத்: +965 65501946
லெபனான்: +961 76860128
ஓமன்: +968 98282270 (வாட்ஸ்அப்) / 80071234
கத்தார்: +974 55647502
ரமல்லா (பாலத்தீனம்). +970 592916418
சௌதி அரேபியா (ரியாத்): +966 11 4884697 / 800 247 1234
சௌதி அரேபியா (ஜெட்டா): +966 126648660 / +966 12 2614093
ஐக்கிய அரபு எமிரேட்ஸ்: +971 543090571 (வாட்ஸ்அப்) / 800 46342

பட மூலாதாரம், Getty Images
நாட்டின் பாதுகாப்பு மற்றும் தனது குடிமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம் என சௌதி அரேபியா தெரிவித்துள்ளது.
சௌதி அமைச்சரவையை மேற்கோள் காட்டி ‘சௌதி பிரஸ் முகமை’ வெளியிட்டுள்ள அறிக்கையில், இரானிடமிருந்து வரக்கூடிய தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்க சௌதி அரேபியா தனது நட்பு நாடுகளுடன் துணை நிற்பதாகவும், தேவைப்பட்டால் அவர்களுக்கு உதவ தனது அனைத்துத் திறன்களையும் பயன்படுத்தத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
சௌதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் அமைந்துள்ள சிஐஏ தளம் ஒன்று, திங்கட்கிழமை (மார்ச் 2) டிரோன் தாக்குதலில் குறி வைக்கப்பட்டதாகக் கூறப்படும் நேரத்தில் இந்த அறிக்கை வந்துள்ளது.
ராய்ட்டர்ஸ் செய்தி முகமையின்படி, தூதரக வளாகத்தில் இரண்டு டிரோன்கள் மோதியதை அமெரிக்கா, சௌதி அரேபியா ஆகிய இரு நாடுகளும் உறுதிப்படுத்தியுள்ளன. இருப்பினும், சிஐஏ தளம்தான் இலக்கா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
தி வாஷிங்டன் போஸ்ட் செய்தியின்படி, இந்தத் தாக்குதலால் தூதரக கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததால் வளாகம் முழுவதும் புகை சூழ்ந்தது. தூதரக ஊழியர்கள் தற்போதைக்கு பாதுகாப்பான இடங்களில் தங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பிபிசி தமிழின் நேரலை பக்கத்திற்கு வரவேற்கிறோம். தமிழ்நாடு, இந்தியா, இலங்கை மற்றும் உலகளாவிய சமீபத்திய செய்திகள் முக்கிய நிகழ்வுகள் மற்றும் நேரடித் தகவல்களை உடனுக்குடன் இங்கே பெறலாம். இன்று (மார்ச் 4) மதியம் வரை செய்திகளை தொகுத்து வழங்குவது சிராஜ்.
இன்றைய நேரலை பக்கத்தில் இணைந்திருந்தமைக்கு நன்றி. தமிழ்நாடு, இந்தியா, இலங்கை மற்றும் உலகளாவிய முக்கிய நிகழ்வுகளைத் தொடர்ந்து உடனுக்குடன் தெரிந்துகொள்ள, பிபிசி தமிழின் பிற செய்திகளையும் பார்க்கவும். மீண்டும் சந்திப்போம்!

பட மூலாதாரம், Getty Images
இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் தாக்குதல்களுக்கு மத்தியில், இரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் 'தேசிய ஒற்றுமையே தனது நாட்டின் மிகப்பெரிய பலம்' என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த அசாதாரணமான சூழ்நிலையிலும் நாடு முழுவதும் அன்றாடச் செயல்பாடுகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இரான் அதிபர் பெசெஷ்கியன் தனது எக்ஸ் தளப் பதிவில், "நாங்கள் ஆளுநர்களுடன் நேரடித் தொடர்பில் இருக்கிறோம். அசாதாரணமான நிலைமையிலும், நாடு முடங்கிவிடவில்லை" என்று தெரிவித்துள்ளார்.
மேலும், "நாடு முழுவதும் பணிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. மாகாணங்களுக்குத் தேவையான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. உள்ளூர் சூழ்நிலைகளுக்கு ஏற்பவும் துரிதமாகவும் முடிவுகள் எடுக்கப்படுகின்றன. தேசிய ஒற்றுமையே எங்களது மிகப்பெரிய பலம்" என்றார்.
முன்னதாக, இரானில் அதிபர் அலுவலகத்தை இலக்கு வைத்துத் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பட மூலாதாரம், Getty Images
வளைகுடா நாடுகளில் பதற்றமான சூழ்நிலை நிலவிய சூழலில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி, மூன்று நாடுகளின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
அவர்களில் ஓ சுல்தான் ஹைதம் பின் தாரிக், குவைத் இளவரசர் ஷேக் சபா அல்-காலித் அல்-ஹமத் அல்-முபாரக் அல்-சபா மற்றும் கத்தார் அமீர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி ஆகியோர் அடங்குவர்.
இந்த தகவலை எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்ட பிரதமர் மோதி, மூன்று தலைவர்களுடனான உரையாடலின் போது, அந்தந்த நாடுகளில் நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து தனது கவலையைத் தெரிவித்தார். அத்துடன், அந்த நாடுகளில் வசிக்கும் இந்தியக் குடிமக்களின் பாதுகாப்பு குறித்தும் அவர் கலந்தாலோசித்தார்.