காந்தி ஜெயந்தி: உலகம் முழுவதும் காந்தி சிலைகளை உடைத்தவர்கள் யார் யார்?

காந்தியும் சிலையும்

பட மூலாதாரம், DANIEL OSEI TUFUOR

    • எழுதியவர், குமார் பிரசாந்த்
    • பதவி, காந்தி அமைதி அறக்கட்டளையின் தலைவர், பிபிசி ஹிந்திக்காக
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

(இன்று காந்தி பிறந்த நாளை ஒட்டி இந்த கட்டுரை வெளியிடப்படுகிறது. இதில் இடம் பெற்றுள்ளவை கட்டுரையாளரின் சொந்த கருத்துகள். இவை பிபிசி தமிழின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்)

இன்று மகாத்மா காந்தியின் பிறந்தநாள். காந்தி உலகம் முழுவதிலும் இருக்கிறார். குறைந்தபட்சம் சிலை வடிவில் அவர் உள்ளார். உலகில் சுமார் 70 நாடுகளில் காந்தியடிகள் சிலை நிறுவப்பட்டுள்ளது.

காந்தி 1917ல் இந்திய சமூக-அரசியல் வாழ்க்கையில் நுழைந்தார். பின்னர் சுமார் 31 ஆண்டுகள் இடைவிடாத போராட்ட வாழ்க்கையை வாழ்ந்தார்.

ஆனால் நாம் பார்க்க வேண்டிய இன்னும் ஒரு கணக்கீடு உள்ளது. எத்தனை நாடுகளில் காந்தி சிலை உடைக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது? இந்த எண்ணிக்கை பெரியது. காந்தியுடன் அதிகம் தொடர்புடைய சம்பாரனில், மோதிஹாரியின் சர்க்கா பூங்காவில் இருந்த காந்தியடிகளின் சிலை சமீபத்தில் உடைக்கப்பட்டது. உலகம் முழுவதும் இப்படிப்பட்ட சம்பாரன்கள் இருக்கின்றன.

அமெரிக்காவில் 'பிளாக் லைஃப் மேட்டர்ஸ்' இயக்கத்தின்போது காந்தி சிலை சேதப்படுத்தப்பட்டது. இதுபோன்ற சம்பவங்களால் கோபப்படவோ, வருத்தப்படவோ தேவையில்லை. நாம் கவலைப்பட வேண்டுமானால் நாம் அனைவரும் நம்மைப்பற்றியே கவலைப்பட வேண்டும்.

காந்தியும் சிலையும்

சவால் இல்லைன்றால் காந்தி இல்லை

60-70களில் நக்சலைட் இயக்கம் உச்சத்தில் இருந்தபோதும் காந்தி சிலைகளுக்கு எதிரான அலை இருந்தது. காந்தி சிலைகள் தாக்கப்பட்டன. அவை உடைக்கப்பட்டன, சிதைக்கப்பட்டன. அவதூறான வார்த்தைகளை எழுதி அவரை கேவலப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

அப்போது சீனத்தலைவர் மாவோவுக்கு ஆதரவாக அங்கும் இங்கும் கோஷங்கள் எழுதி ஒட்டப்பட்டன. சிலைகளுக்கு எதிரான போராட்டத்தின் இந்த ஆவேசமான கட்டத்தில், அப்போதைய பிகாரில் உள்ள ஜாம்ஷெட்பூரில் காந்தியின் சிலை சேதப்படுத்தப்பட்டது.

ஜெயபிரகாஷ் நாராயண் ஒரு முறை காந்தி ஆதரவாளர்களிடையே உரையாற்றும்போது, ​​"இவர்கள் காந்தியைப் பார்த்து பயப்படுகிறார்கள். அவருடைய சிலைகளை உடைக்க முயற்சிக்கிறார்கள், நான் அதை நம்பிக்கையுடன் பார்க்கிறேன்" என்று சொன்னார்.

"தங்களுக்கென பாதுகாப்பான உலகத்தை உருவாக்கிக் கொண்டு வாழத் தொடங்கியுள்ள காந்தியவாதிகளான நமக்கு இது நேரடி சவால். சவால் இல்லை என்றால் காந்தி அல்ல" என்று ஜேபி கூறியிருந்தார்.

அப்படிப்பட்ட உணர்வை ஜெயப்பிரகாஷ் உருவாக்கினார். அது ஒரு அலையாக மாறியது. இது வரலாற்றில் ஜெய்பிரகாஷ் இயக்கம் அல்லது 'சம்பூர்ண புரட்சி இயக்கம்' என்று அழைக்கப்படுகிறது.

இன்று இந்துத்துவம் என்ற பெயரில் காந்திக்கு எதிராக செயல்படும் மற்றொரு துருவம் எழுந்துள்ளது. நக்சலைட்டுகள் இன்றும் இருக்கிறார்கள். நக்சலைட் தாக்குதல்கள், கொலைகள் பற்றிய செய்திகளும் ஆங்காங்கே வந்து கொண்டுதான் இருக்கின்றன.

உலகம் முழுவதும் பெருகி வரும் குறுகிய மனப்பான்மை

உலகமெங்கும் இந்த நேரத்தில் குறுகியமனப்பான்மை பெருகியுள்ளது. இந்த குறுகிய மனப்பான்மை ஆட்சியின் ஆதரவுடன் மேலும் ஆக்ரோஷமாகவும் அழிவுகரமானதாகவும் மாறி வருகிறது. காந்தியை சுட்டதும் இதுதான். காந்தி துப்பாக்கி குண்டுகளால் இறந்துபோகவில்லை, அவர் மேலும் பரந்து விரிந்துவிட்டார்.

குறுகிய மனப்பான்மைகொண்ட வகுப்புவாதம் இப்படியொரு முடிவை எதிர்பார்க்கவில்லை. அவர்களின் மோசமான தன்மை மற்றும் தோல்வி தெளிவாகத்தெரியும் அந்த நினைவுகளை அவர்கள் துடைக்க விரும்புகிறார்கள். அப்போது காந்திக்கு எதிராக இடதுசாரிகள், தலைவர் மாவோவின் சின்னத்தை முன்னிறுத்தியதால், இந்துத்துவ ஆதரவாளர்கள் நாதுராம் கோட்சேயின் சின்னத்தை உருவாக்குவதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

எல்லோரும் தங்கள் சின்னத்தை நிறுவுகிறார்கள். ஆனால் நிற்க முடியாதவர் மற்றும் அதை அமைப்பதில் ஆர்வம் காட்டாதவர் யார் என்று பார்த்தால் அது ஜனநாயகத்தின் சாதாரண குடிமகன். அவருடைய அந்தஸ்தை உருவாக்குவதிலும் அதிகரிப்பதிலும் காந்தி தனது வாழ்நாள் முழுவதும் செலவிட்டார்.

காந்தி - பிறந்தநாள்

பட மூலாதாரம், Getty Images

மனித குலத்தின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் வன்முறை

காந்தி இன்று உயிருடன் இருந்திருந்தால் அவருக்கு 153 வயது ஆகியிருக்கும். இத்தனை வருடங்கள் மனிதன் எப்படி உயிர் வாழ்வான்? ஆனால் காந்தி வாழ்கிறார். அதனால்தான் நாம் அவரைப்பற்றி விவாதம் செய்கிறோம். அவரின் சிலைகளை சேதப்படுத்துவதன் மூலம் நம் கோபம் அல்லது எதிர்ப்பை வெளிப்படுத்துகிறோம்.

காந்தி ஒருபோதும் அதிகாரத்தில் இருக்கவில்லை. வியாபார உலகத்துடனும், அதன் சுரண்டல் மற்றும் அநீதியுடனும் அவருக்கு எந்த தொடர்பும் இல்லை. அவர் ஒருபோதும் ஒடுக்குமுறை மற்றும் அடிமைத்தனத்தை ஆதரிக்கவில்லை. மதம்-நிறம்-சாதி-பாலின பாகுபாடு போன்ற எந்த சிந்தனையையும் அவர் ஆதரிக்கவில்லை. தனது சொல்லிலும் செயலிலும் இவற்றை எதிர்த்தார். ஆனால் அவரது பாதையில் வன்முறை இல்லை.

மனிதனை ஒடுக்குவதற்கு மனிதனைக் காட்டிலும் அதிகமான சக்தியை பயன்படுத்துவதே வன்முறை. ஆயுதம், செல்வம், அதிகாரம், என்ணிக்கை, வெறி என்று அது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

காந்தி மனிதனுக்கு எதிராக இதுபோன்ற எந்த ஆயுதத்தையும் பயன்படுத்தத் தயாராக இல்லை. ஏனென்றால் வன்முறை மனிதனின், மனிதநேயத்தின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கிறது என்று அவர் கருதினார். மேலும் நாம் யாரை எதிர்க்கிறோமோ அவர் முன்பை விட தீவிர ஆபத்தானவராகவும் மாறிவிடுகிறார்.

வன்முறை நம் பலனற்ற கோபத்தின் அடையாளமாக உள்ளது. அதனால்தான் அது 'மலடு' என்று சொல்லப்படுகிறது.

காந்தி - பிறந்தநாள்

பட மூலாதாரம், DINODIA PHOTOS/ GETTY IMAGES

'சாத்தியம்' என்பதன் பெயர் காந்தி

அகிம்சை வழியில் சமூகம் தனது குறைபாடுகளையும் தீமைகளையும் எவ்வாறு எதிர்த்துப் போராட முடியும்? எவ்வாறு தனது சக்தியை உருவாக்க முடியும்? என்று விளக்கும் வரலாறு இல்லை. இதுவரை செய்யமுடிந்தது, காந்தியால் மட்டுமே செய்யப்பட்டது.

எனவே காந்தி என்பது ' சாத்தியம்' என்பதன் மறுபெயர். காந்திக்குப் பிறகும் இந்த சாத்தியத்தை ஆராய்ந்து நிரூபிப்பதில் சிலர் ஈடுபட்டுள்ளனர்.

அதனால்தான் நாம் காந்தி-வினோபா-ஜெயபிரகாஷ் முக்கோணத்தை வரைகிறோம். ஏனென்றால் அகிம்சை ஆராய்ச்சி எனும் திசையில் நான்காவது பெயர் இல்லை.

ஒவ்வொரு மனிதனுக்கும் இருப்பதைப் போல இவர்களுக்கும் சொந்த வரம்புகள் மற்றும் பலவீனங்கள் உள்ளன என்று நாம் கூறலாம். அப்படியானால் காந்திக்கும், அவரது திசையில் மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கும் ஏன் இவ்வளவு எதிர்ப்பு?

காந்தியின் மீது தீவிர இடதுசாரிகளுக்கும், தீவிர வலதுசாரிகளுக்கும் ஒரே போன்ற வெறுப்பு ஏன்? இந்த வெறுப்பு இன்று ஏற்பட்டது அல்ல. இது பல காலமாக நிலவுகிறது.

காந்தி தனது வாழ்க்கையின் தொடக்கத்திலிருந்து மூன்று தோட்டாக்களால் உயிரிழக்கும் வரை, இவர்களின் விருப்பு, வெறுப்புகளை தாங்க வேண்டியிருந்தது. அது ஏன்? இதற்கான காரணத்தைப் புரிந்துகொள்வது சிக்கலான அறிவியல் சமன்பாட்டைப் புரிந்துகொள்வதுபோல அத்தனை கடினமானது அல்ல.

எந்தவிதமான சமத்துவமின்மையையும், பாகுபாடுகளையும், சுரண்டல்-அடக்குமுறையையும் எந்த வாதத்தின் அடிப்படையிலும் காந்தி ஏற்கத் தயாராக இல்லை என்ற வகையில் அவர் மிகவும் ஆபத்தானவர். இவற்றை எதிர்ப்பதில் அவர் உயிரையும் துறக்கத் தயாராக இருந்தார்.

காந்தி - பிறந்தநாள்

பட மூலாதாரம், Getty Images

மறுபுறம் காந்தி எந்த விதமான பழிவாங்கலையோ, எதிர் தாக்குதலையோ ஏற்கத் தயாராக இல்லை. எதிரியை சமாளிக்க மனிதகுலம் அறிந்த, அங்கீகரித்த மற்றும் தொடர்ந்து பின்பற்றிய இரண்டு வழிகள், வன்முறை-எதிர்வன்முறை மற்றும் பழிவாங்கல் என்ற சக்திகளை அடிப்படையாகக்கொண்டவை.

நமது நாகரிகங்களின் முழு வரலாறும் இந்த சக்திகளின் ஆவணமாகும். இந்த தீய சுழற்சியில் இருந்து மனிதகுலத்தை விடுவிக்கக்கூடிய மூன்றாவது சக்தி இருக்கக்கூடும். அந்த திசையில் செல்லும் விடாப்பிடியான, துணிச்சலான முயற்சியை காந்தியிடம் மட்டுமே நாம் காண்கிறோம்.

காந்தி மீதான இடதுசாரிகளின் எதிர்ப்பு அல்லது வெறுப்பு இங்கு சிறிது குறைந்துள்ளது. காந்திக்கு எதிரான தலித் கட்சிகளின் குறைந்துவிட்டது. அதே சமயம் சில அனுதாபக் குரல்களும் ஒருங்கிணைப்புக் குரல்களும் ஆர்வமுள்ள தலித்துகள் மத்தியில் இருந்து எழத் தொடங்கியுள்ளன. ஆனால் காந்தியின் சிலைகள் உடைப்பு விஷயத்தில் அவர்கள் தரப்பில் இருந்து வலுவான எதிர்ப்பு எதுவும் இதுவரை வரவில்லை.

எதிர்ப்புக் குரல்களும் அனுதாபத்தைமட்டுமே வெளிப்படுத்துகின்றன. இதுபோன்ற சம்பவங்களுக்குப் பின்னால் திசை தெரியாத சமூகக் கலவரக்காரர்கள், குடிகாரர்கள், குற்றவாளிகள் போன்றவர்கள் இருக்கிறார்கள் என்பது உண்மைதான். ஆனால் காந்தியை எதிர்க்கும் அரசியல்-சமூக சக்திகளின் பங்கும் இதில் உள்ளது என்பதை மறுக்கமுடியாது.

காந்தி - பிறந்தநாள்

பட மூலாதாரம், Getty Images

காந்தி வழிபாடு ஆபத்தானது

உலகமெங்கும் சிலைகளை குறிவைக்கும் , அர்த்தமற்ற போக்கு காணப்படுகிறது. எனவே காந்தியின் மீது அன்பு கொண்டவர்கள் அவர் மீது கருணைகொண்டு அவரை மனக்கோவிலில் குடியமர்த்த வேண்டும். அவரது சிலைகளை உருவாக்க வேண்டாம். அவருடைய கொள்கைகளை பின்பற்றி உறுதியான வேலையைச் செய்வோம்.

காந்தி சமகாலத்தவர். இந்த விஷயம் பிரச்சனைகளைத் தீர்ப்பதன் மூலம் நிரூபிக்கப்பட வேண்டும். கோஷங்கள் பாடல்கள், சிலைகள் , விழாக்கள் மூலம் அல்ல.

காந்தியை விரும்புபவர்களுக்கும் அவர் மீது நம்பிக்கை உள்ளவர்களுக்கும் காந்தி ஒரே வழியைத்தான் காட்டியுள்ளார். காந்தியின் விழுமியங்களை நிறைவேற்றும் பணியை நேர்மையுடனும், ஆர்வத்துடனும் செய்யுங்கள். இதன் மூலம் உருவாக்கப்படும் அவரது பிம்பம், உடைத்தாலும் உடையாது.

கூடவே, "காந்தியை வழிபடுவது ஓர் ஆபத்தான செயல். அதில் தோல்விதான் கிடைக்கும்," என்று ஜெயப்பிரகாஷ் நாராயண் எச்சரித்ததை நினைவில் கொள்ளுங்கள்.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: