ஐபோன் 14 வாங்க கேரளாவில் இருந்து துபாய்க்கு பறந்த இளைஞர்

பட மூலாதாரம், DHEERAJ PALLIYIL
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் மாடல் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட கேரளாவை சேர்ந்த இளைஞர் ஒருவர், துபாய்க்கு சென்று அது இந்தியாவில் வெளியிடப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாகவே வாங்கிய நிகழ்வு, சமூக ஊடகங்களில் பேசுபொருளாகி உள்ளது.
கடந்த ஏழாம் தேதி அன்று ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஐபோன்கள், ஐவாட்ச், ஏர்பாட்ஸ் ஆகியவற்றை அறிமுகம் செய்தது. குறிப்பாக திறன்பேசி பயன்பாட்டாளர்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்த ஐபோன் 14, 14 ப்ளஸ், 14 ப்ரோ மற்றும் ஐபோன் 14 ப்ரோ மாக்ஸ் உள்ளிட்ட புதிய மாடல்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.
அவற்றில் 14 ப்ளஸ் மாடல் மட்டும் அக்டோபர் ஏழாம் தேதி வெளியாகும் என்றும், மற்ற மாடல்கள் செப்டம்பர் 16ஆம் தேதி முதல் விற்பனை வருமென அந்த நிறுவனம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், புதிய ஐபோனை உலகிலேயே முதலாவதாக வாங்குபவர்களில் ஒருவராக தான் இருக்க வேண்டும் என்ற நோக்கில், கேரளாவை சேர்ந்த தீரஜ் என்ற இளைஞர் துபாய்க்கு விமானம் மூலம் சென்று ஐபோன் 14 ப்ரோ மாக்ஸ் மொபைலை வாங்கியுள்ளார்.
கேரளாவில் இருந்து துபாய்க்கு சென்றுவர விமான டிக்கெட்டுக்கு 40,000 ரூபாய் செலவிட்ட அவர், ஐபோன் 14 ப்ரோ மாக்ஸ் மொபைலை வாங்க தனியே 1,29,000 ரூபாய் செலவு செய்துள்ளார்.
'ஐபோன் வாங்க துபாய் செல்வது இது நான்காவது முறை'

பட மூலாதாரம், Apple
திறன்பேசி பயன்பாட்டாளர்களால் உலகிலேயே அதிகம் விரும்பப்படும் திறன்பேசிகளில் ஒன்றாக ஐபோன் உள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தால் கடந்த 2007ஆம் ஆண்டு முதன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த திறன்பேசி அப்போது முதல் இப்போது வரை மொபைல் தொழில்நுட்ப உலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும், ஆப்பிள் நிறுவனத்தின் மிகப் பெரிய தொழில் வெற்றியின் மூலக்காரணமாகவும் இந்த ஐபோன் உள்ளது.
காலப்போக்கில் ஐபோனை வாங்க விரும்பும் சிலர், அதற்காக எல்லை மீறிய செயல்களில் ஈடுபட தொடங்கினர். அதே சமயத்தில், ஐபோனை வைத்திருப்பது சமூகத்தில் அந்தஸ்தை பெற்று தரும் என்ற மனநிலையும் மக்கள் மத்தியில் உண்டாக தொடங்கியது.
சிலர் இவை எல்லாவற்றையும் விஞ்சும் வகையில், ஐபோன் வாங்குவதற்காக தங்களது உடல் உறுப்புகளை விற்பனை செய்து, புதிய மாடல்கள் விற்பனைக்கு வரும் நாளுக்காக நூற்றுக்கணக்கான மணிநேரங்கள் ஆப்பிள் கடைகளின் முன்பு காத்திருந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.


ஐபோன் மீதான தீரஜின் ஆர்வமும் வித்தியாசமானதுதான். மற்றவர்களுக்கு முன்னதாக ஐபோனை வாங்க வேண்டுமென்று இவர் துபாய்க்கு செல்வது இது முதல் முறையல்ல, நான்காவது முறை.
முதல் முறையாக கடந்த 2017ஆம் ஆண்டு ஐபோன் 8 மாடல் வெளியானபோது துபாய்க்கு சென்ற தீரஜ், அதைத்தொடர்ந்து 2019 மற்றும் 2021ஆம் ஆண்டுகளிலும் ஐபோனை வாங்குவதற்காகவே துபாய்க்கு பயணித்துள்ளார்.
இது குறித்து பேசிய தீரஜ், தான் "காத்திருக்க விரும்பவில்லை" என்றும், "ஆப்பிள் ஸ்டோருக்கு வெளியே காத்திருந்து புதிய ஐபோனை பெறும் முதல் நபர்களில் ஒருவராக இருக்கும் உற்சாகத்தை விரும்புகிறேன்" என்றும் கூறுகிறார்.
புதிய ஐபோன்கள் வெளியான செப்டம்பர் 16ஆம் தேதியன்று துபாயில் உள்ள மால் ஒன்றிலுள்ள கடைக்குச் சென்று தீரஜ் அதை வாங்கியுள்ளார்.

பட மூலாதாரம், Apple
"இதற்கு முன்பெல்லாம், புதிய ஐபோன்கள் வெளிநாட்டில் விற்பனைக்கு வந்த 10-15 நாட்களுக்குப் பிறகே அது இந்தியாவில் கிடைக்கும். ஆனால், இந்த முறை, சில மணிநேர வித்தியாசத்திலேயே அதே நாளில் இந்தியாவில் ஐபோன்கள் விற்பனைக்கு வந்து விட்டன. ஆனால், துபாய்க்கு வந்து புதிய ஐபோனை வாங்குவது என்பது எனக்கு சடங்கு போல ஆகிவிட்டது" என்று அவர் கூறுகிறார்.
ஒளிப்பதிவாளரும் தொழிலதிபருமான தீரஜ், தான் எப்போதுமே தொழில்நுட்பத்தின் மீது ஆர்வம் கொண்டவராக இருந்து வருவதாகவும், 2011இல் இறந்த ஆப்பிள் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டீவ் ஜாப்ஸால் தான் பெரிதும் ஈர்க்கப்பட்டதாகவும் கூறுகிறார்.
"அவரது பணியை நினைவுகூர்வதற்கான எனது பாணி இது" என்கிறார் தீரஜ்.
இது குறித்து குடும்பத்தினர் என்ன கூறுகிறார்கள் என்று தீரஜிடம் கேட்டபோது, "முதலில் நான் எதற்காக இதை செய்கிறேன் என்பது அவர்களுக்கு புரியவில்லை. அதனால், ஆடம்பரப் பொருட்களுக்குப் பணத்தை வீணடிப்பதாக என்னைக் கிண்டல் செய்வார்கள். ஆனால், நானோ இது விலை உயர்ந்த பொருளை வாங்குவது பற்றியது மட்டுமல்ல என்பேன்" என்று கூறும் அவர், இப்போது தனக்கு குடும்பத்தினர் ஆதரவளிக்க தொடங்கி விட்டதாகவும் தெரிவித்தார்.
"இப்போதெல்லாம் புதிய ஐபோன்கள் விற்பனைக்கு வரும்போது அதுகுறித்து என்னிடம் அவர்கள் கூறுவதுடன், நான் எப்போது அதை வாங்குவதற்காக துபாய்க்கு செல்கிறேன் என்றும் குடும்பத்தினர் எதிர்பார்க்கத் தொடங்கி விட்டனர்," என்கிறார் தீரஜ்.

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












