காந்தியின் 'விருப்பப் பாடல்' குடியரசு தின நிகழ்ச்சியிலிருந்து நீக்கம் - நாளிதழ் செய்திகள்

மகாத்மா காந்தி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மகாத்மா காந்தி

(இன்று 23.01.2022 ஞாயிற்றுக்கிழமை இந்திய நாளிதழ்களில் வெளியான சில செய்திகளை தொகுத்தளிக்கிறோம்)

குடியரசு தின கொண்டாட்டங்களின் நிறைவாக நடைபெறும் பாதுகாப்புப் படைகள் பாசறைக்குத் திரும்பும் நிகழ்ச்சியின் போது இசைக்கப்படும் மகாத்மா காந்தியின் விருப்பத்துக்குரிய பாடல் நீக்கப்பட்டு, அதற்கு பதிலாக 'சாரே ஜஹான் சே அச்சா ஹிந்துஸ்தான் ஹமாரா' பாடல் இசைக்கப்படவுள்ளதாக தினமணியில் செய்தி வெளியாகியுள்ளது.

ஆண்டுதோறும் ஜனவரி 26-ஆம் தேதி முதல் 4 நாள்களுக்கு குடியரசு தின கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன. இதையொட்டி நாடு முழுவதிலும் இருந்து பாதுகாப்புப் படைகள் டெல்லிக்கு வருவது வழக்கம். ஜனவரி 29-ஆம் தேதி குடியரசு தின கொண்டாட்டங்கள் நிறைவடையும். அன்றைய தினம் முப்படைகளின் தலைவரான குடியரசுத் தலைவா் டெல்லிக்கு வந்த பாதுகாப்புப் படைகளை தங்கள் முகாம்களுக்கு திருப்பி அனுப்பி வைப்பாா். இதுவே பாதுகாப்புப் படைகள் பாசறைக்குத் திரும்பும் நிகழ்ச்சி என்றழைக்கப்படுகிறது.

டெல்லி விஜய் செளக்கில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியின் இறுதியில் மகாத்மா காந்தியின் விருப்பத்துக்குரிய 'என்னுடன் இருங்கள்' என்கிற பாடல் இசைக்கப்படுவது வழக்கம். பிரிட்டனில் பிறந்த ஹென்றி ஃபிரான்சிஸ் லைட் என்ற கவிஞரால் 1847-ஆம் ஆண்டு எழுதப்பட்ட இந்த கிறிஸ்துவ பாடல், 1950-ஆம் ஆண்டு முதலே குடியரசு தின நிகழ்ச்சியில் இடம்பெற்று வந்தது.

இந்நிலையில், இவ்வாண்டு பாசறைக்குத் திரும்பும் நிகழ்ச்சியில் அந்தப் பாடல் நீக்கப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக கவிஞா் முகமது இக்பால் எழுதிய 'சாரே ஜஹான் சே அச்சா ஹிந்துஸ்தான் ஹமாரா' பாடல் இசைக்கப்படவுள்ளது என இந்திய ராணுவம் தெரிவித்துள்ளதாக அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேரறிவாளனுக்கு 9-வது முறையாக பரோல் நீட்டித்து தமிழக அரசு உத்தரவு

பேரறிவாளன்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பேரறிவாளன்

பேரறிவாளனுக்கு ஒன்பதாவது முறையாக பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளதாக இந்து தமிழ் திசையில் செய்தி வெளியாகியுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன் 30 ஆண்டுகளுக்கு மேலாகசிறை தண்டனை அனுபவித்து வருகிறார். சிறுநீரகத் தொற்று உள்ளிட்ட உடல்நலக் குறைவு காரணமாக அவருக்கு பரோல் வழங்குமாறு அவரது தாய் அற்புதம்மாள் கடந்த மே மாதம் முதல்வர் ஸ்டாலினுக்கு மனு அனுப்பினார். முதல்வர் இதை பரிசீலித்து,பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல் வழங்கி உத்தரவிட்டார்.

பேரறிவாளன் கடந்த மே 28-ம் தேதி ஜோலார்பேட்டையில் உள்ள தனது வீட்டுக்கு பரோலில் சென்றார். பின்னர், மருத்துவர்களின் ஆலோசனைப்படி, வேலூர், விழுப்புரம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட இடங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார். அவ்வப்போது விடுக்கப்பட்ட கோரிக்கையின் பேரில், அவருக்கு எட்டு முறை பரோல் நீட்டிக்கப்பட்டது.

அவரது பரோல் நாளையுடன் (ஜன.24) முடிவடையும் நிலையில், 9-வது முறையாக மேலும் 30 நாட்கள் பரோல் வழங்கி அரசு நேற்று உத்தரவிட்டுள்ளதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தகவல் உரிமை சட்டத்தை வலிமையாக அமல்படுத்தக்கோரி வழக்கு; மத்திய அரசு பதிலளிக்க கோரி உச்ச நீதிமன்றம் உத்தரவு

இந்திய உச்ச நீதிமன்றம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்திய உச்ச நீதிமன்றம்

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் பிரிவு 4-ஐ திறம்பட செயல்படுத்தி சட்டத்தை வலிமையாக அமல்படுத்தக்கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் மத்திய அரசு பதிலளிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தினத்தந்தியில் செய்தி வெளியாகியுள்ளது.

காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கடந்த 2005-ம் ஆண்டு தகவல் அறியும் உரிமை சட்டத்தை அமல்படுத்தியது. இந்த சட்டத்தின் 4-வது பிரிவின்படி அரசு அதிகாரிகள், தங்கள் செயல்பாடுகள் குறித்து தாங்களாகவே தகவல்களை வெளியிட வேண்டும் என்பது விதியாகும்.

இதைப்போல மேலும் பல்வேறு முக்கிய அம்சங்கள் இந்த பிரிவில் அடங்கி இருக்கிறது.ஆனால் இந்த விதி சரியாக பின்பற்றப்படுவதில்லை ன்றுன கூறப்படுகிறது.

எனவே இந்த பிரிவை திறம்பட செயல்படுத்தி, தகவல் அறியும் உரிமை சட்டத்தை வலிமையாக அமல்படுத்த மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் 4-வது பிரிவுதான் அதன் ஆன்மா எனவும், அதை வலிமையாக செயல்படுத்தாமல் இந்த சட்டம் வெறும் அலங்கார சட்டமாகவே இருக்கும் எனவும் அந்த வழக்கில் கூறப்பட்டு உள்ளது.

கே.சி.ஜெயின் என்பவர் தொடர்ந்த இந்த வழக்கை நீதிபதிகள் எஸ்.கே.கவுல், எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று (வெள்ளிக்கிழமை) விசாரித்தது. இதில் மேற்படி மனுவுக்கு பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: