புதுவையில் புகார் செய்யவந்த பெண்ணிடம் ”ஆயில் மசாஜ் செய்யத் தெரியுமா?” என்று கேட்டாரா போலீஸ்காரர்?

பெண்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பெண்

புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியைச் சேர்ந்த தம்பதியர் தங்களது இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகின்றனர். உணவகம் ஒன்றில் கூலி வேலை செய்துவரும் கணவர் (வயது 36), தன்னை சந்தேகப்பட்டு அடித்துத் துன்புறுத்திவந்ததாக 31 வயது மனைவிக்கு புகார் இருந்தது.

ஒரு சமயத்தில் அதைத் தாங்கிக்கொள்ள முடியாமல் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சென்று தனது கணவர் தினம்தோறும் அடித்து கொடுமை செய்வதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படியும் புகார் அளித்துள்ளார் மனைவி. பின்னர் வழக்குரைஞருடன் மகளிர் காவல் நிலையம் சென்ற அப்பெண்ணின் கணவர் அங்குள்ள அதிகாரிகளிடம் சமரசம் பேசியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து அப்பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் கணவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக கணவருடன் அனுசரித்து வாழ வேண்டும் என்று அப்பெண்ணுக்கு காவல்துறையினர் அறிவுரை வழங்கினர். மேலும் இந்த பிரச்சனையை குடும்ப நல நீதிமன்றத்தை அணுகி தீர்த்துக்கொள்ளும்படியும் கூறி அனுப்பியுள்ளனர்.

அதன் பிறகு, கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி காலையில் கணவர் தன்னை கடுமையாக தாக்கியதாக அவசர உதவி எண் 100-ஐ தொடர்பு கொண்டு அழுதபடி புகார் அளித்துள்ளார் மனைவி. அதையடுத்து இந்த புகாரை விசாரிக்கும்படி லாஸ்பேட்டை காவல்துறைக்கு தகவல் வந்துள்ளது.

பின்னர், லாஸ்பேட்டை காவல் நிலையத்தைச் சேர்ந்த காவலர்கள் இருவர் அந்த பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் வீட்டுக்குச் சென்று அந்தப் பெண்ணையும், அவரது கணவரையும் காவல்நிலையத்திற்கு அழைத்தனர்.

இதையடுத்து காவல் நிலையம் சென்ற பெண்ணிடம் புகாரை வாங்காமல், மீண்டும் பெண்ணுக்கு அறிவுரை கூறி அனுப்பியுள்ளனர்.

இதன்பின்னர், வீட்டுக்கு வந்ததும் வழக்கம்போல கணவர் அந்த பெண்ணை கடுமையான வார்த்தைகளால் பேசி அடித்ததாகப் புகார் கூறப்படுகிறது. அன்றைய தினம் பிற்பகல் சுமார் ஒரு மணியளவில் அந்த பெண் தனியாகவே மீண்டும் லாஸ்பேட்டை காவல் நிலையத்திற்கு சென்று புகார் கொடுத்துள்ளார்.

பெண்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பெண்

அப்போது அங்கு பணியிலிருந்த தலைமைக் காவலர் ஒருவர், அந்த பெண்ணிடம் புகார் குறித்து முழுமையாக கேட்டறிந்த பின், அவரிடம் சம்பந்தமில்லாமல் தவறாகப் பேசியதாக புகார் கூறுகிறார் அந்தப் பெண்.

நடந்த விவகாரம் குறித்து அந்தப் பெண்ணிடம் கேட்டபோது "புகார் குறித்து விசாரித்த தலைமைக் காவலர், என்னிடம் என்ன படித்திருக்கிறாய்? எனக்குத் தெரிந்த வழக்கறிஞர் அலுவலகத்தில் வேலை உள்ளது. அதை உனக்கு வாங்கித் தருகிறேன். உன் குழந்தைகளை நான் படிக்க வைக்கிறேன். வழக்குரைஞரிடம் பேசி, விவாகரத்து வாங்கி தருகிறேன்.

இனி நாம் இருவரும் நண்பர்கள் என்று கூறியபடியே எனது கையை பிடித்தார். உடனே நான் எனது கையை எடுத்துக்கொண்டு, நானே பிரச்சனைக்கு தீர்வு தேடி இங்கே வந்தால் ஏன் இப்படி பேசுகிறீர்கள்? என்று கேட்டேன்.

பிறகு, உனக்கு ஆயில் மசாஜ் செய்யத் தெரியுமா? என்று கேட்டார், அதெல்லாம் எனக்குத் தெரியாது என்று நான் கூறவே, நான் கற்றுக்கொடுக்கிறேன் என்றார். அதையடுத்து எந்த உதவியாக இருந்தாலும் தன்னை அழைக்கும்படி கூறி, அவரது இரண்டு அலைபேசி எண்களை எழுதிக் கொடுத்தார்," என்கிறார் அந்த பெண்.

மறுநாள் காவல் நிலையத்தில் தலைமைக் காவலர் நடந்து கொண்ட சம்பவத்தை அந்த பெண் பக்கத்து வீட்டாரிடம் தெரிவித்துள்ளார். அந்த பெண்ணிற்கு ஏற்பட்ட பாதிப்பு பற்றி புதுச்சேரியுள்ள இறைவி பெண்கள் பாதுகாப்பு அமைப்பிடம் கூறப்பட்டது. அந்தக் காவலரை ஆதாரத்துடன் பிடிக்க நினைத்த பெண்கள் அமைப்பினர், அந்த பெண்ணை காவலருக்கு போன் செய்யும்படிக் கூறி அந்த உரையாடலைப் பதிவு செய்தனர்.

காவலர் தொப்பி
படக்குறிப்பு, காவலர் தொப்பி

அந்த உரையாடலில், விவாகரத்துக்காக வழக்கறிஞருக்கு கொடுக்க தன்னிடம் பணம் இல்லையென்று கூறியுள்ளார். அதற்கு, அதையெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன். அந்த வழக்குரைஞரை கொஞ்சம் கவனித்து அனுப்பிவிடுகிறாயா?" என்று கேட்டார்.

உரையாடலின்போது இப்படி தொடர்ந்து பல வார்த்தைகளைத் தவறான நோக்கத்தில் அந்த காவலர் பேசியதாக அப்பெண் தெரிவித்தார்.

பின்னர் ஆதாரங்களுடன் இறைவி அமைப்பினர் பாதிக்கப்பட்ட பெண்ணை அழைத்துக்கொண்டு காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்குச் சென்று உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புகார் அளித்தனர்.

இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் முன்னிலையில், குற்றம்சாட்டப்பட்ட தலைமை காவலரை அழைத்து விசாரணை நடத்தினர். இதற்கிடையில் இந்த விவகாரம் குறித்து குற்றம்சாட்டப்பட்ட காவலரின் எழுத்து மற்றும் தொலைபேசி உரையாடல் உட்பட அனைத்து ஆதாரங்களுடன் அடங்கிய புகார் மனு காவல்துறை உயர் அதிகாரிகளிடம் கொடுக்கப்பட்டது.

இந்த சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்ட லாஸ்பேட்டை காவல் நிலைய தலைமைக் காவலரை, ஆயுதப்படை காவல் பிரிவிற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உதவிய இறைவி பெண்கள் பாதுகாப்பு அமைப்பின் நிறுவனர் காயத்ரி ஸ்ரீகாந்தை பிபிசி தமிழ் தொடர்புகொண்டு பேசியது.

காயத்ரி ஸ்ரீகாந்த்
படக்குறிப்பு, காயத்ரி ஸ்ரீகாந்த்

"அனைத்து காவல் நிலையங்களிலும் பெண் காவலர்கள் இருக்கின்றனர். இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட நபர் பெண் என்பதால் புகாரை விசாரணை செய்தபோது பெண் காவலர் ஒருவர் உடனிருந்திருக்க வேண்டும். புகார் அளிக்க அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சென்றால், அங்கே கட்டப்பஞ்சாயத்து நடந்திருக்கிறது.

இதுபோன்ற பெண் வன்கொடுமை வழக்குகள் வந்தால், அதை நீர்த்துப்போகச் செய்யாமல் உடனடியாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண்களை பாதுகாப்பதில் காவல்துறையினர் அச்சுறுத்தலாக இருக்கக்கூடாது. மேலும் அனைத்து காவல் நிலையங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட வேண்டும்.

பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டு வேறு வழியில்லாமல் ஒரு பெண் காவல் நிலையத்திற்குப் புகார் அளிக்க வருகிறார். ஆனால் அந்த சூழ்நிலை சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு அந்த பெண்ணை பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும், உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் துன்புறுத்துவதாக நாங்கள் உணர்கிறோம். இதற்கு புதுச்சேரி அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுத்துத் தீர்வு காண வேண்டும்," என்கிறார் காயத்ரி ஸ்ரீகாந்த்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :