பிளஸ் 2 முடிவுகள்: தேர்வு நடந்திருந்தால் இவ்வளவு மதிப்பெண் வந்திருக்குமா?

பிளஸ் 2 முடிவு:

பட மூலாதாரம், Getty Images

தமிழ்நாட்டில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. ` பொதுத்தேர்வில் 600 மதிப்பெண்களை எடுத்த மாணவர்கள் யாரும் இல்லை' என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

கொரோனா இரண்டாம் அலை காரணமாக தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, மாணவர்களுக்கான மதிப்பெண்ணை கணக்கிடுவது தொடர்பாக வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டன. அந்த வரிசையில் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 50 சதவிகிதமும் பிளஸ் 1 வகுப்பில் 20 சதவிகிதம், பிளஸ் 2 வகுப்பில் செய்முறை, அகமதிப்பீடு ஆகியவற்றில் இருந்து 30 சதவிகிதம் என மதிப்பெண் தீர்மானிக்கப்பட்டது. இதனால், தங்களுக்கு எவ்வளவு மதிப்பெண் வரும் என்பதை மாணவர்களால் கணிக்க முடிந்தது.

இந்நிலையில், மதிப்பெண் கணக்கிடும் பணிகள் முடிவுற்று இணையத்தளத்தில் அவற்றின் விவரம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இன்று காலை http://tnresults.nic.in, http://tnresults.nic.in/, http://dge2.tn.nic.in, http://dge.tn.gov.in ஆகிய இணையத்தளங்களில் முடிவுகளை அறிந்து கொள்ளலாம் எனவும் அறிவிப்பு வெளியானது.

இந்தத் தளத்துக்குச் சென்று மாணவர்கள் தங்களது பதிவு எண், பிறந்த தேதி ஆகியவற்றைப் பதிவு செய்தால் எஸ்.எம்.எஸ் மூலமாக மதிப்பெண் அனுப்பப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதன்பிறகு 22 ஆம் தேதி காலையில் http://www.dge.tn.gov.in, http://www.dge.tn.nic.in என்ற இணையதளங்களில் மதிப்பெண் பட்டியலை தரவிறக்கம் செய்து கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பிளஸ் 2 தேர்வு முடிவுகளை வெளியிட்ட பிறகு பள்ளிக்கல்வித் துறை வளாகத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், `` பிளஸ் 2 மதிப்பெண்ணை கணக்கிட குழு ஒன்று அமைக்கப்பட்டது. அந்தக் குழுவினர் அளித்த அறிக்கை, முதலமைச்சரிடம் சமர்ப்பிக்கப்பட்டது. இதன் பின்னர், முதல்வரின் அறிவுறுத்தலின்படி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, 8 லட்சத்து 16, 473 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பிளஸ் 2 முடிவுகள்

பட மூலாதாரம், Getty Images

இதில் 550 முதல் 600 மதிப்பெண்களை எடுத்தவர்களின் எண்ணிக்கை மட்டும் 30 ஆயிரத்து 600 ஆக உள்ளது. அதேநேரம், 600 மதிப்பெண் எடுத்த மாணவர்கள் என்று யாரும் இல்லை. இதில் பள்ளிக்கு வராத 1,656 பேர் தேர்வு எழுதாதவர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். வகுப்புக்கே வராத 39,000 தனித்தேர்வர்களும் தேர்ச்சி பெறவில்லை. அறிவியல் பாடப்பிரிவில் 551-600 மதிப்பெண் என்ற விகிதத்தில் 30,060 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இவர்களுக்கு தேர்வு நடைபெற்று இருந்தால் 1,867 பேர் மட்டுமே 551-600 மதிப்பெண் பெற்றிருப்பார்கள்.

பிளஸ் 1 வகுப்பில் அரியர் வைத்த 33,557 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். வணிகவியல் பாடத்தில் 551-600 மதிப்பெண் பெற்றவர்கள் 8,909 பேர். இவர்களுக்குத் தேர்வு நடைபெற்றிருந்தால் 4,437 மட்டுமே 551-600 மதிப்பெண்களை பெற்றிருப்பார்கள்.

கலைப் பிரிவு பாடங்களில் 551-600 மதிப்பெண் பெற்றவர்கள் 35 பேர். தேர்வு நடந்திருந்தால். 5 பேர் மட்டுமே இந்த மதிப்பெண்கள் பெற்றிருப்பார்கள். தொழிற்கல்வி பாடங்களில் 136 பேர் 551-600 வரை மதிப்பெண் பெற்றுள்ளனர். தேர்வு நடந்திருந்தால் 50 பேர் 551-600 மதிப்பெண் பெற்றுள்ளனர். பொதுப்பாடப்பிரிவில் 7,64,593 பேரும் தொழிற் பாடப்பிரிவில் 51,880 பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர்," என்றார்.

பிளஸ் 2 முடிவு

பட மூலாதாரம், TWITTER

மேலும், ``இந்த மதிப்பெண்ணில் திருப்தி இல்லாதவர்களும் தனித்தேர்வர்களும் செப்டம்பர் அல்லது அக்டோபரில் தேர்வு எழுதலாம். அப்போதும் கொரோனா சூழலை கருத்தில் கொண்டே தேர்வு நடத்தப்படும். பிளஸ் 2 மதிப்பெண் முறையானது தசம எண்களில் வெளியிடப்பட்டுள்ளது. உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் குழப்பம் ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில் இவ்வாறு கணக்கிடப்பட்டுள்ளது" என்றார்.

எங்கே 15 லட்சம் மாணவர்கள்?

தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர், கடந்த ஆண்டு ஒன்றாம் வகுப்பில் இருந்து 12 ஆம் வகுப்பு வரையில் 15 லட்சம் மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் இருந்து விலகி தனியார் பள்ளியில் சேர்ந்திருப்பதாகவும் தெரிவித்தார். கொரோனா பேரிடரால் வருமானம் இழந்த பெற்றோர் பலரும் அரசுப் பள்ளிகளை நாடி வரும் சூழலில் அமைச்சர் வெளியிட்ட தகவல், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

புதுச்சேரி பிளஸ் 2 முடிவுகள்

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பிளஸ் 2 தேர்விற்கு விண்ணப்பித்த அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

பிளஸ் 2 முடிவுகள்

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 14,675 மாணவர்கள் பிளஸ் 2 பொது தேர்விற்கு விண்ணப்பித்து இருந்தனர். கொரோனா பெருந்தொற்று காரணமாக தமிழகத்தில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதால், தமிழக கல்வி வாரியத்தை பின்பற்றும் புதுச்சேரியிலும் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்க தமிழக அரசு குழு அமைத்து இன்று மதிப்பெண் பட்டியலை வெளியிட்டது. இதில், அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக தமிழக கல்வித்துறை அமைச்சர் அறிவித்தார்.

இந்த நிலையில் புதுச்சேரி மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியலை கல்வித்துறை வளாகத்தில் கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் வெளியிட்டார்.‌ அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் பிளஸ் 2 மாணவர்களின் மதிப்பெண் பட்டியல் இன்று தமிழ்நாடு கல்வி வாரியத்தால் வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக கொரோனா தொற்று சூழல் காரணமாக 2020-21 பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில் இன்று பிளஸ் 2 மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

புதுச்சேரியில் உள்ள 127 பள்ளிகளிலிருந்து 12,353 மாணவர்களுக்கும், காரைக்கால் மாவட்டத்தில் 23 பள்ளிகளிலிருந்து 2,321 மாணவர்களுக்கும் என மொத்தம் 14 ,674 மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியல் வெளியாகி உள்ளது. இதில் விண்ணப்பித்த அனைத்து மாணவர்களும் தேர்ச்சியென‌ அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக பாடத்திட்டத்தை புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பின்பற்றப்படுகிறது என்பதால் முடிவுகள் அனைத்தும் தமிழக அரசு வெளியிடப்படும் இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். கொரோனா காரணமாக பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்பட்டதால், பத்தாம் வகுப்பு(50%), பதினோராம் வகுப்பு(20%), 12ஆம் வகுப்பில்(30) எடுத்த சராசரி மதிப்பெண்கள் அடிப்படையில், கணக்கிடப்பட்டு பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :