குஜராத் வழியே தமிழகத்திற்கு கடத்த முயன்ற ரூ.1,800 கோடி போதைப்பொருள் சிக்கியது எப்படி? இன்றைய டாப் 5 செய்திகள்

பாகிஸ்தான், இந்தியா, தமிழ்நாடு, செய்திகள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப் படம்
வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

இன்றைய (15/04/2025) நாளிதழ்கள் மற்றும் இணையதளங்களில் வெளிவந்துள்ள முக்கியச் செய்திகள் சில இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.

பாகிஸ்தானில் இருந்து குஜராத் வழியாக தமிழ்நாட்டுக்கு கடத்தி வர இருந்த ரூ.1,800 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் சிக்கியதாகவும், கடலுக்குள் வீசப்பட்ட அவற்றை கடலோர காவல் படை மற்றும் பயங்கரவாத தடுப்பு பிரிவு (ஏடிஎஸ்) அதிகாரிகள் மீட்டனர் என்றும் தினத்தந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

"குஜராத்தை ஒட்டிய அரபிக் கடலில் சர்வதேச கடல்சார் எல்லை கோடு அருகே பாகிஸ்தான் கடத்தல்காரர்கள் போதைப் பொருட்களுடன் வருவதாக உளவுத்துறை தகவல் அளித்தது.

அதன் அடிப்படையில், அந்த பகுதியில் கடலோர காவல்படையும், குஜராத் பயங்கரவாத தடுப்பு பிரிவும் இணைந்து கப்பலில் நள்ளிரவில் ரோந்து பணியில் ஈடுபட்டன. கடத்தல்காரர்கள் படகு நடமாடுவதாக தகவல் கிடைத்த பகுதியை நோக்கி கப்பல் விரைந்தது. அதே சமயத்தில், அந்த கப்பல் வருவதை படகில் வந்த கடத்தல்காரர்கள் கவனித்து விட்டனர். உடனே அவர்கள் படகில் இருந்த போதைப் பொருள் மூட்டைகளை கடலுக்குள் வீசிவிட்டு, சர்வதேச கடல் எல்லையை நோக்கி விரைந்தனர்.

இதை கவனித்து விட்ட கடலோர காவல்படையினர், கப்பலில் இருந்த படகை கடலில் இறக்கி, அதன் மூலம் கடத்தல்காரர்களை துரத்தினர். ஆனால், கடத்தல்காரர்கள் சர்வதேச கடல் எல்லைக்கு அப்பால் சென்று தப்பிவிட்டனர்." என்று அந்த செய்தி கூறுகிறது.

இதையடுத்து கடலில் வீசப்பட்ட சரக்கை கடலோர காவல் படை வீரர்கள் மீட்டு போர்பந்தர் கடற்கரைக்கு கொண்டு வந்தனர். பிறகு அதில் 300 கிலோவுக்கு மேல் போதைப் பொருள் இருப்பது தெரியவந்தது. இது மெத்தம்பேட்டமைன் என்று தினத்தந்தியின் செய்தி கூறுகிறது.

விசாரணையில் அந்த போதைப்பொருட்கள் தமிழ்நாட்டுக்கு கடத்துவதற்காக மற்றொரு படகில் சேர்க்கும் பொருட்டு கொண்டு வந்தது தெரியவந்துள்ளது என்றும் அந்தச் செய்தி தெரிவிக்கிறது.

வங்கக் கடலில் 61 நாள் மீன்பிடி தடைக்காலம் தொடங்கியது

பாகிஸ்தான், இந்தியா, தமிழ்நாடு, செய்திகள்
படக்குறிப்பு, கோப்புப் படம்

வங்கக் கடலில் விசைப் படகுகள் மூலம் மீன்பிடிக்க ஆண்டுதோறும் விதிக்கப்படும் 61 நாள்கள் தடைக்காலம் திங்கள்கிழமை (ஏப்ரல் 14) நள்ளிரவு முதல் தொடங்கியது என்று தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

கோடை காலமான ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் வங்கக் கடல் பகுதிகளில் மீன்கள் இனப்பெருக்கம் செய்யும் காலம் என்பதால் விசைப்படகுகள் மூலம் மீன் பிடித்தால் மீன் குஞ்சுகளும் வலையில் சிக்கி அழிந்துவிடும். இதனால், மீன்வளம் குறையும் எனக் கருதி வங்கக் கடல் பகுதியில் ஆண்டுதோறும் கோடை காலத்தில் குறிப்பிட்ட நாள்களுக்கு விசைப்படகுகள் மூலம் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில் நிகழாண்டில் திங்கள்கிழமை (ஏப்.14) நள்ளிரவு முதல் ஜூன் 14-ஆம் தேதி வரை 61 நாள்களுக்கு மின்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நாள்களில் விசைப்படகுகள் மீன் பிடிக்க கடலுக்குச் செல்ல அனுமதி கிடையாது என்று அந்தச் செய்தி கூறுகிறது.

இதுகுறித்து சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுக உதவி இயக்குநர் பா.திருநாகேஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்த ஆண்டு செவ்வாய்க்கிழமை(ஏப்.15) அதிகாலை முதல் எந்த ஒரு விசைப்படகும் மீன் பிடிப்பதற்காக கடலுக்குச் செல்ல அனுமதி இல்லை. ஆனால், 20 குதிரை சக்திக்கு குறைவான பைபர் படகுகள், கட்டுமரங்களில் மீன்பிடிக்க எவ்வித தடையும் இல்லை.

சென்னை காசிமேடு துறைமுகத்தில் மட்டும் சுமார் 1,100 விசைப்படகுகளும், தமிழகம் முழுவதும் மொத்தமுள்ள 4,500 விசைப் படகுகளில் கன்னியாகுமரி முதல் நிரோடி வரையிலான அரபிக் கடலோரப் பகுதிகள் நீங்கலாக 4,000 விசைப்படகுகளும் இயங்காது. இந்தத் தடைக்காலம் வரும் ஜூன் 14-ஆம் தேதி முடிவுக்கு வரும்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தடைக்காலத்தில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்ட மீனவர்கள், சார்பு தொழிலாளர்களுக்கு தமிழக அரசு சார்பில் குடும்பம் ஒன்றுக்கு தலா ரூ. 8,000 உதவித் தொகை வழங்கப்படுகிறது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தற்போது இத்தடைகாலம் தொடங்கியுள்ளதால் மீன்களுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டு விலையும் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று தினமணியின் செய்தி கூறுகிறது.

சென்னையில் 5 வயது சிறுமியை கடித்த வளா்ப்பு நாய்

பாகிஸ்தான், இந்தியா, தமிழ்நாடு, செய்திகள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப் படம்

சென்னை சைதாப்பேட்டையில் 5 வயது சிறுமியை வளர்ப்பு நாய் ஒன்று 7 இடங்களில் கடித்து குதறியதாகவும், இதுகுறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர் என்றும் தினத்தந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அந்தச் செய்தியின்படி, சென்னை சைதாப்பேட்டை, ஜோதியம்மாள் நகர் பகுதியை சேர்ந்தவர் புனிதா (வயது 30). கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு 5 வயதில் ஜனனி என்ற மகளும், 8 வயதில் ஒரு மகனும் உள்ளனர். நேற்று முன்தினம் மாலை புனிதா, தனது மகளுடன் அதே பகுதியில் உள்ள தனது மாமியார் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த பகுதியில் உள்ள மாலா என்பவரின் வளர்ப்பு நாய், சிறுமியை கடிக்க பாய்ந்தது.

இதனால் பயந்துபோன சிறுமி, நாயிடம் இருந்து தப்பிப்பதற்காக வேகமாக ஓடியதாகத் தெரிகிறது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த சிறுமி ஜனனியை, வளப்பு நாய் 7 இடங்களில் கடித்து குதறியது. இதில் அவரின் வலது கை மற்றும் வலது கால் தொடையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அதிர்ச்சி அடைந்த புனிதா, கத்தி கூச்சலிட்டார். அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து நாயை துரத்திவிட்டு சிறுமியை மீட்டனர் என தினத்தந்தியின் செய்தி தெரிவிக்கிறது.

பின்னர், சிகிச்சைக்காக எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றும், இந்த சம்பவம் குறித்து, சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் சைதாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, நாயின் உரிமையாளரிடம் விசாரித்து வருகின்றனர் என்றும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் சட்​ட​விரோத​மாக தங்​கி​யிருந்த 15 வெளி​நாட்​டினர்- நாடு கடத்​த உத்தரவு

பாகிஸ்தான், இந்தியா, தமிழ்நாடு, செய்திகள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப் படம்

இந்​தி​யா​வில் சட்​ட​விரோத​மாக தங்​கி​யிருந்த 15 வெளி​நாட்​டினரை நாடு கடத்த அதி​காரி​கள் நடவடிக்கை மேற்​கொண்டுள்​ளனர் என 'இந்து தமிழ் திசை' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து நேற்று (ஏப்ரல் 14) பேசிய அதி​காரி ஒரு​வர், "டெல்​லி​யில் மோகன் கார்​டன், உத்​தம் நகர் பகு​தி​களில் போலீ​ஸார் மேற்​கொண்ட அதிரடி சோதனை​யில் விசா காலத்​துக்கு பிறகும் இந்​தி​யா​வில் தங்கியிருந்த 15 வெளி​நாட்​டினர் சிக்​கினர். இவர்​களில் 12 பேர் நைஜீரியாவை​யும் இரு​வர் வங்​கதேசத்​தை​யும் ஒரு​வர் ஐவரி கோஸ்ட் நாட்​டை​யும் சேர்ந்​தவர்​கள்.

சரி​பார்ப்​புக்கு பிறகு இவர்​களை நாடு கடத்த வெளி​நாட்​டினருக்​கான பிராந்​திய பதிவு அதி​காரி உத்​தர​விட்​டார். இதையடுத்து அவர்கள் நாடு கடத்​தப்​படு​வதற்​காக தடுப்​புக் காவல் மையத்​துக்கு அனுப்​பி வைக்கப்பட்டனர்." என்று தெரிவித்ததாக 'இந்து தமிழ் திசை' நாளிதழின் செய்தி கூறுகிறது.

'இலங்கையில் டீசல், அனல் மின் நிலைய மாபியாக்களுக்கு முன்னுரிமை'- சஜித் குற்றச்சாட்டு

பாகிஸ்தான், இந்தியா, தமிழ்நாடு, செய்திகள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வேலைத்திட்டம் அரசாங்கத்திடம் இல்லாவிட்டாலும், நாட்டின் மின்சார உற்பத்தியில் டீசல் மின் உற்பத்தி நிலையம் மற்றும் அனல் மின் நிலைய மாபியாக்களுக்கு முன்னுரிமை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் தெரிவித்தார் என வீரகேசரி இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு, நீர்கொழும்பு தேர்தல் தொகுதிக்குட்பட்ட பல்லன்சேன பிரதேச மக்களை தெளிவூட்டும் வகையில் நடைபெற்ற வட்டார மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தனது உரையில், "காற்று, சூரிய ஒளி மற்றும் நீர் ஆகியவற்றைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் விலை குறைவாக இருந்தாலும், புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு அரசு கட்டுப்பாடுகளை விதித்து, டீசல் மற்றும் அனல் மின்சாரம் பயன்பெறும் திட்டத்தை முன்னெடுத்துள்ளது. சதிகாரர்களால் மின்சாரத்துறை கையகப்படுத்தப்பட்டுள்ளது. மின்சாரத்தை அதிக விலைக்கு பாவனையாளர்களுக்கு வழங்கும் மாபியாக்களிடம் மின்சாரத்துறை கையளிக்கப்பட்டுள்ளது.

புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு முன்னுரிமை வழங்குவோம் என மேடைக்கு மேடை பிரஸ்தாபித்த அரசாங்கம் தற்போது எரிபொருள் மற்றும் அனல் மின் நிலைய மாபியாக்களின் அடிமைகளாக மாறியுள்ளது. அரசாங்கம் இவ்வாறு செயற்பட்டாலும் ஐக்கிய மக்கள் சக்தி புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கும்." எனக் கூறியதாக வீரகேசரியின் செய்தி தெரிவிக்கிறது.

தொடர்ந்து பேசிய அவர், "இன்று நாட்டு மக்கள் மிகுந்த சிரமத்திலும் துன்பத்திலும் வாழ்ந்து வருகின்றனர். வருமான மூலங்கள் வீழ்ச்சியடைந்து, வாழ்வாதாரங்கள் வீழ்ச்சியடைந்து, வருமானம் கூட குறைந்துள்ள இவ்வேளையில், பொருட்களின் விலைகளும், வாழ்க்கைச் செலவுகளும் வேகமாக அதிகரித்து வருகின்றன. வறுமைக் கோட்டிற்கு கீழே வாழும் மக்கள் தமது பிள்ளைகளுக்கு கல்வியை வழங்கக்கூட முடியாத நிலை உருவாகி வருகிறது. வறுமையை அதிகரிக்கச் செய்து, நிவாரணங்களை குறைக்கும் நடவடிக்கையையே தற்போதைய அரசாங்கம் செய்து வருகிறது. ஆகவே இந்த அரசாங்கம் மக்களை தொடர்ச்சியாக ஏமாற்றியே வருகிறது." என்று கூறினார்.

"தெளிவான அதிகாரம் கிடைத்தும் மக்களுக்கு செய்தது ஒன்றுமில்லை. திறம்பட ஆட்சி நிர்வாகத்தை முன்னெடுக்கவே மக்கள் தெளிவான அதிகாரத்தை வழங்கினர். ஆனால் அரசாங்கமானது இன்னும் கடந்த காலத்தின் மீது பழியைப் போட்டு தமது இயலாமையை மறைத்து, மக்களை ஏமாற்றி வருகிறது. எனவே எதிர்வரும் தேர்தலில் இந்த அரசாங்கத்திற்கு ஜனநாயக ரீதியாக சரியான பாடம் புகட்ட வேண்டும்" என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் தெரிவித்ததாக வீரகேசரியின் செய்தி கூறுகிறது.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு