வெளியாகிறது 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' - வடிவேலு ரசிகர்களின் ஆவலை இந்த படம் தீர்க்குமா?

பட மூலாதாரம், Naai Sekar Returns - Official Trailer
நீண்ட நாட்களுக்குப் பிறகு வடிவேலுவின் நடிப்பில் உருவாகியிருக்கும் 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' திரைப்படம் வரும் வெள்ளிக்கிழமையன்று வெளியாகிறது.
இந்தப் படம் அவரது ரசிகர்களின் விருப்பத்தை நிறைவேற்றுமா?2017ஆம் ஆண்டில் விஜய்யுடன் இணைந்து வடிவேலு நடித்த மெர்சல் திரைப்படம் வெளியானது.
இதற்குப் பிறகு ஐந்தாண்டுகளுக்கு அவர் நடித்து எந்தப் படமும் வெளியாகவில்லை.
இம்சை அரசன் இருபத்து மூன்றாம் புலிகேசியின் அடுத்த பாகமான இம்சை அரசன் இருபத்து நான்காம் புலிகேசி படத்தை சங்கர் தயாரித்து வடிவேலு நடிப்பதாக இருந்தது.
அந்தப் படத்திற்கான செட்கள் எல்லாம் அமைக்கப்பட்டுவிட்ட நிலையில், படத்தில் நடிக்க வடிவேலு மறுத்ததால், செட் அமைத்ததற்கான செலவைத் திருப்பித் தரும்படி சங்கர் கோரினார். அதை வடிவேலு ஏற்காததால், அவருக்கு 'ரெட் கார்ட்' விதிக்கப்பட்டது.
முடிவுக்கு வந்த பஞ்சாயத்து
சங்கரின் தயாரிப்பில் உருவாகவிருந்த திரைப்படம் முதல் காப்பி அடிப்படையில் லைகா நிறுவனத்திற்காகத்தான் தயாரிக்கப்பட இருந்தது.
ஆகவே, அதற்குப் பதிலாக லைகாவுக்கு ஒரு படத்தை நடித்துக்கொடுக்க முன்வந்தார் வடிவேலு. இதன் மூலம் நான்கு ஆண்டுகளாக இருந்த வடிவேலு மீதான ரெட் கார்ட் விவகாரம் ஒரு முடிவுக்கு வந்தது.
இந்த நிலையில், நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என்ற படத்தில் அவர் நடிப்பதாக செய்தி வெளியானபோது அவரது ரசிகர்கள் கொண்டாட்ட மனநிலைக்குப் போனார்கள்.
இதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன. ஒன்று, தலைநகரம் படத்தில் வடிவேலு ஏற்று நடித்திருந்த நாய் சேகர் கதாபாத்திரம் பெரும் பிரபலமான ஒன்று என்பதோடு, நினைத்தாலே சிரிப்பு ஏற்படுத்தும் வகையில் அதில் நகைச்சுவைக் காட்சிகள் இருந்தன.
இரண்டாவதாக, சுராஜுடன் வடிவேலு இணைந்த தலைநகரம், மருதமலை படங்களில் எல்லாம் அவரது காமெடி காட்சிகள் மிகச் சிறப்பாக அமைந்திருந்தன.
கத்தி சண்டை படத்தில்கூட, முந்தைய அளவுக்கு இல்லாவிட்டாலும் நகைச்சுவை சிறப்பாகவே இருந்தது.
ஆகவேதான், சுராஜும் வடிவேலுவும் இணையும் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. முதலில் இந்தப் படத்திற்கு நாய் சேகர் என்றுதான் பெயர் சூட்டப்பட்டிருந்தது.
ஆனால், ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் அதற்கு முன்பாகவே சதீஷை வைத்து நாய் சேகர் என்ற பெயரில் படத்தைத் துவங்கியிருந்தது.
பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகும், பெயரைத் தர ஏஜிஎஸ் விரும்பாத நிலையில், நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என இந்தப் படத்திற்குப் பெயர் சூட்டப்பட்டது.
இந்த படத்தில் வடிவேலுதான் கதாநாயகன். ஆனால், வடிவேலுவுடன் வழக்கமாக நடிக்கும் கூட்டணி இந்தப் படத்தில் இல்லை.
முனீஸ்காந்த், ரெடின் கிங்க்ஸ்லி, 'லொல்லு சபா' மாறன், 'லொல்லு சபா' சேஷு, 'கலக்கப்போவது யாரு' ராமர், 'குக் வித் கோமாளி' சிவாங்கி ஆகியோர் நடித்திருக்கின்றனர்.

பட மூலாதாரம், Naai Sekar Returns - Official Trailer
லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்திருக்கும் இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.இந்தப் படம் நாளை வெளியாகிவிருக்கும் நிலையில் இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது.
ஆனால், டீசரில் இருந்த காட்சிகள், அவரது முந்தைய படங்களோடு ஒப்பிட்டால் பெரிதாக சிரிப்பை ஏற்படுத்தாத வகையிலேயே இருந்தன.
இதற்கு முன்பும் கூட, இம்சை அரசன் இருபத்து மூன்றாம் புலிகேசி படத்தை விட்டுவிட்டால், வடிவேலு கதாநாயகனாக நடித்த இந்திர லோகத்தில் நா. அழகப்பன், தெனாலிராமன், எலி போன்ற திரைப்படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்பதோடு, ரசிகர்கள் எதிர்பார்த்த அளவுக்கு நகைச்சுவையும் இல்லை.
மேலும், இந்திரலோகத்தில் நா. அழகப்பன், தெனாலிராமன் ஆகிய படங்களில் நிறைய அறிவுரை சொல்லும் காட்சிகளும் இடம்பெற்றிருந்தன.
இந்த நிலையில், இந்தப் படத்தின் ட்ரெய்லர், டீசர் காட்சிகளும் ரசிகர்களிடம் கலவையான மனநிலையை ஏற்படுத்தியிருக்கின்றன.
இதையெல்லாம் தாண்டி முந்தைய போக்கை முறியடித்து, மீண்டும் ஒரு கலகலப்பான வடிவேலு திரைக்குத் திரும்ப வேண்டும் என்பதுதான் ரசிகர்களின் விருப்பம். இது நிறைவேறியதா என்பது நாளை தெரிந்துவிடும்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












