8 பந்துகளில் 8 சிக்ஸர்: வெறும் 11 பந்துகளில் அரைசதம் அடித்து சாதனை - யார் இந்த ஆகாஷ் சௌத்ரி?

ஆகாஷ் சௌத்ரி

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, ரஞ்சி டிராஃபியில் மேகாலயாவுக்காக விளையாடுகிறார் ஆகாஷ் சௌத்ரி
வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

முதல் தர கிரிக்கெட் வரலாற்றில் அதிவேக அரைசதம் அடித்து மேகாலயா கிரிகெட் வீரர் ஆகாஷ் சௌத்ரி வரலாறு படைத்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை ஆடிய அந்த இன்னிங்ஸில் தொடர்ந்து 8 பந்துகளில் 8 சிக்ஸர்களை அவர் விளாசினார்.

முதல் தர கிரிக்கெட் வரலாற்றில் ஒரு ஓவரின் ஆறு பந்துகளிலும் சிக்ஸர் அடித்த மூன்றாவது வீரர் என்ற பெருமை பெற்றார் அவர்.

வேகப் பந்துவீச்சாளரான ஆகாஷ் சௌத்ரி, அருணாச்சல பிரதேச அணிக்கு எதிரான ரஞ்சிக் கோப்பை பிளேட் டிவிஷனின் குரூப் போட்டியில் இந்த சாதனையைப் படைத்தார். சூரத்தில் நடந்த இந்த ஆட்டத்தின் இரண்டாவது நாளில் மேகாலயா அணியின் ஸ்கோர் 576/6 என இருந்தபோது அவர் களமிறங்கினார்.

மேகாலயா அணி முதல் இன்னிங்ஸில் 628/6 என்ற ஸ்கோருடன் டிக்ளேர் செய்ய, தொடர்ந்து விளையாடிய அருணாச்சல பிரதேச அணி முதல் இன்னிங்ஸில் 73 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

ரவி சாஸ்திரி, கேரி சோபர்ஸ் சாதனை சமன்

ஆகாஷ் சௌத்ரிக்கு முன்னதாக முதல் தரப் போட்டிகளில் ஒரு ஓவரின் ஆறு பந்துகளிலும் சிக்ஸர் அடித்தவர்கள் வெஸ்ட் இண்டீஸின் கேரி சோபர்ஸ் மற்றும் இந்தியாவின் ரவி சாஸ்திரி ஆகிய இருவர் மட்டுமே. . தென்னாப்பிரிக்காவின் மைக் ப்ராக்டரும் தொடர்ச்சியாக 6 சிக்ஸர்கள் அடித்திருக்கிறார். ஆனால், இருவேறு ஓவர்களில் அவர் 6 சிக்ஸர்களை அடித்தார்.

தன் இன்னிங்ஸின் முதல் மூன்று பந்துகளில் ஆகாஷ் இரண்டு ரன் மட்டுமே எடுத்திருந்தார். அதன்பிறகு இடது கை ஸ்பின்னர் லிமார் தாபி வீசிய ஓவரில் 6 பந்துளிலுமே சிக்ஸர் அடித்தார் அவர்.

அடுத்த ஓவரில் ஆஃப் ஸ்பின்னர் டி.என்.ஆர்.மோஹித் பந்துவீச்சில், தான் சந்தித்த முதலிரு பந்துகளையும் சிக்ஸருக்கு அனுப்பி அவர் அரைசதம் கடந்தார். இதன்மூலம் 11 பந்துகளிலேயே அரைசதம் அடித்து அவர் சாதனை படைத்தார்.

இதற்கு முன், 'குறைந்த பந்துகளில் அரைசதம் அடித்த வீரர்' என்ற சாதனையை டெஸ்டர்ஷயர் அணியின் வெய்ன் வைட் வைத்திருந்தார். 2012-ஆம் ஆண்டு எஸக்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அவர் 12 பந்துகளில் அரைசதம் கடந்திருந்தார்.

9 நிமிடங்களில் அரைசதம்

இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ தரவுகளின்படி, நேர அடிப்படையில் முதல் தர கிரிக்கெட்டில் அதிவிரைவாக அடிக்கப்பட்ட அரைசதங்களின் பட்டியலில் இது இரண்டாவது இடம் பிடித்திருக்கிறது. ஆகாஷ் சௌத்ரி தன் அரைசதத்தை 9 நிமிடங்களில் அடித்திருக்கிறார்.

இந்த சாதனை கிளைவ் இன்மேன் வசம் இருப்பதாக இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ சொல்கிறது. 1965-ஆம் ஆண்டு லெஸ்டர்ஷயர் அணிக்காக ஆடிய அவர், நாட்டிங்ஹாம்ஷயருக்கு எதிராக 13 பந்துகளில் அரைசதம் அடித்திருக்கிறார். ஆனால், அது 8 நிமிடங்களிலேயே அடிக்கப்பட்டிருக்கிறது.

வலது கை மித வேகப்பந்துவீச்சாளரான ஆகாஷ் சௌத்ரி, வலது கை பேட்டர். அவர் 1999-ஆம் ஆண்டு நவம்பர் 28-ஆம் தேதி பிறந்தவர் என்று இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ குறிப்பிட்டிருக்கிறது.

அவர் 30 முதல் தரப் போட்டிகளில் (அருணாச்சல பிரதேசத்துக்கு எதிரான இந்தப் போட்டிக்கு முன்பு வரை) 14.37 என்ற சராசரியில் 503 ரன்கள் எடுத்திருந்தார்.

29.97 என்ற சராசரியில் 87 விக்கெட்டுகளையும் அவர் கைப்பற்றியிருக்கிறார்.

இவருக்கு முன்பாக, முதல் தரப் போட்டிகளில் அதிவேக அரைசதம் அடித்த இந்தியர் என்ற சாதனை பந்தீப் சிங் வசம் இருந்தது. 2015-ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் அணிக்காக ஆடிய அவர் திரிபுரா அணிக்கெதிராக 15 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

ஒரு ஓவரின் 6 பந்துகளிலும் சிக்ஸர் அடித்த சாதனையை முதன்முதலில் செய்தவர் கேரி சோபர்ஸ். 1968-ஆம் ஆண்டு நாட்டிங்ஹாம்ஷயர் மற்றும் கிலாமார்கன் அணிகள் மோதிய போட்டியில், மால்கம் நேஷ் பந்துவீச்சில் அந்தச் சாதனையை செய்தார் சோபர்ஸ்.

1984-85 ரஞ்சி சீசனில் பரோடாவுக்கு எதிரான போட்டியில் அன்றைய பாம்பே (இன்று மும்பை) அணிக்கு விளையாடிய ஆல்ரவுண்டர் ரவி சாஸ்திரி, திலக் ராஜ் வீசிய ஒரு ஓவரின் ஆறு பந்துகளிலும் சிக்ஸர் அடித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு