காணொளி: வயிற்றில் கொழுப்பு இருந்தால் இத்தனை நோய்கள் வருமா?

காணொளிக் குறிப்பு, வயிற்றில் கொழுப்பு இருந்தால் இத்தனை நோய்கள் வருமா?
காணொளி: வயிற்றில் கொழுப்பு இருந்தால் இத்தனை நோய்கள் வருமா?

பலரும் தங்கள் வயிற்றுப் பகுதியை குறைக்க உடற்பயிற்சிக் கூடங்களை நாடுகின்றனர். ஆனால், சிலரோ அதற்கு பெரிதும் கவனம் செலுத்துவதில்லை.

வயிற்றுப் பகுதியில் உள்ள கொழுப்பு Belly Fat, Beer Fat என்றும் அழைக்கப்படுகிறது. தங்களின் உருவம் மற்றும் உடல் ஆரோக்கியம் குறித்து கவனம் கொள்ளும் இளைஞர்கள் இதுகுறித்து கவலை கொள்கின்றனர்.

வயிற்றுப்பகுதியில் அதிகரிக்கும் கொழுப்பின் காரணமாக, தங்களின் விருப்பத்துக்கேற்ற, சௌகரியமான உடைகளை அவர்களால் அணிய முடிவதில்லை.

பிரச்னை இதுமட்டுமல்ல, வயிற்றுப் பகுதியில் கொழுப்பு அதிகரித்தால், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, இதய நோய், கூடவே சில புற்றுநோய்களுக்கான ஆபத்துகளும் அதிகரிக்கின்றன.

ஹார்வர்டு பல்கலைக்கழக ஆய்வின்படி, வயிற்றுக் கொழுப்பு 'சைடோகைன்'(cytokine) என்ற புரதத்தை அதிகப்படுத்தி, உடலில் வீக்கத்தை ஏற்படுத்துகிறது.

மேலும், ஆஞ்சியோடென்சின் (angiotensin) எனப்படும் புரதமும் உற்பத்தியாகிறது. இதனால், ரத்த நாளங்கள் சுருங்குதல், உயர் ரத்த அழுத்தம் ஆகியவை ஏற்படுகின்றன.

டெல்லியில் உள்ள ஃபோர்ட்டிஸ் எஸ்கார்ட்ஸ் (Fortis Escorts) மருத்துவமனையின் மூத்த இதயவியல் மருத்துவர் ஷிவ் குமார் சௌத்ரி கூறுகையில், உடலின் மற்ற பாகங்களில் சேரும் கொழுப்பை விட, வயிற்றுப் பகுதியில் சேரும் கொழுப்பு மிகவும் ஆபத்தானது என்கிறார்.

மேலும் அவர், "வயிற்றுப் பகுதியில் உள்ள கொழுப்பில் இருந்து செல்கள் உடையும் போதோ அல்லது சிதையும்போது, அதிலிருந்து பலவிதமான நச்சுக்கூறுகள் வெளியாகின்றன. இந்த கூறுகள், இதய ரத்த நாளங்களில் வீக்கத்தை ஏற்படுத்துகின்றன. இதனால், இதய நோய்கள் ஏற்படும் ஆபத்து அதிகரிக்கிறது. உடலில் இன்சுலின் எதிர்ப்பையும் (insulin resistance) அதிகரிக்கிறது. இதன் காரணமாக, நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான ஆபத்தும் அதிகரிக்கிறது" என்று விளக்குகிறார்.

வயிற்றுப்பகுதியில் கொழுப்பு அதிகரிப்பதற்கு மரபியல் ரீதியான விஷயங்கள், ஹார்மோன் மாற்றங்கள், வயது, அதிக உடல் எடை மற்றும் மெனோபாஸ், தவறான உணவுப் பழக்கம் உள்ளிட்ட பல காரணங்கள் உள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

வயிற்றுப்பகுதி கொழுப்பை குறைக்க, சில விஷயங்களில் கவனம் செலுத்துவது அவசியம். அதில் முதல் விஷயம் இரவு உணவுக்கும் தூங்கும் நேரத்துக்குமான வித்தியாசம்.

தூங்குவதற்கு இரண்டு - மூன்று மணிநேரத்துக்கு முன்பாக எதையும் சாப்பிடக் கூடாது. நாள் முழுவதும் நீங்கள் சாப்பிடும் உணவின் கலோரிகள், அன்றைய நாளில் நீங்கள் செய்யும் வேலைகளுக்கான ஆற்றலாக பயன்படுகிறது.

ஆனால், இரவில் நீங்கள் உண்ணும் உணவை அவ்வாறு பயன்படுத்த முடியாது.எனவே, அது கொழுப்பாக சேர்ந்து, உடல் எடை அதிகரிக்கும்.

இரண்டாவது சரியான விகிதத்தில் உணவை உண்ணுவது. அதிகமான நார்ச்சத்து கொண்ட உணவுகளை எடுக்கும் போது, நீண்ட நேரத்துக்கு நீங்கள் பசியாக உணர மாட்டீர்கள்.

உணவில் நார்ச்சத்து இருந்தால், உணவு வயிற்றுப்பகுதியிலிருந்து குடலுக்கு நகரும் வேகம் குறையும். இதனால் நீண்ட நேரத்துக்கு வயிறு நிரம்பிய உணர்வுடனேயே நீங்கள் இருப்பீர்கள். உணவில் புரதச்சத்தை சேருங்கள். புரதமும் வயிற்றை நீண்ட நேரத்துக்கு நிரப்பும், இதனால் மீண்டும் மீண்டும் சாப்பிட வேண்டும் என்ற Carving குறையும்.

பசியை தூண்டும் கரெலின் (ghrelin) ஹார்மோன்அளவை இது குறைத்து, மீண்டும் உண்ண வேண்டும் என்ற எண்ணத்தைக் குறைக்கும்.

புரதம் உடலின் தசைகளுக்கு வலுவூட்டுகிறது. வளர்சிதை மாற்றத்தை வேகப்படுத்தி, கலோரிகளை எரிக்கும் திறனையும் அதிகரிக்கிறது.

புரதம் நிறைந்த முட்டை, பருப்பு, பால், சீஸ், தயிர், மீன், கோழி இறைச்சி மற்றும் சோயா போன்றவற்றை தினசரி உங்கள் உணவில் சேர்க்க வேண்டும்.

மூன்றாவது, மிகவும் பதப்படுத்தப்பட்ட மற்றும் சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட் உணவுகளை தவிருங்கள்.

கொஞ்சம் கூட நார்ச்சத்து இல்லாத மைதா பிரெட், சிப்ஸ் போன்றவை எளிதில் செரிமானமாகிவிடும், இதனால் உங்களின் ரத்த சர்க்கரை அளவு திடீரென அதிகரிக்கும்.

இவ்வளவு வேகமாக ரத்த சர்க்கரை அளவில் ஏற்ற இறக்கம் ஏற்படும்போது, பசி அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், உடல் எடை, டைப் 2 நீரிழிவு நோய் போன்றவற்றுக்கான ஆபத்தும் அதிகமாகிறது.

சர்க்கரை மற்றும் கலோரிகள் அதிகம் உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும். மது அருந்துதல், புகைப்பிடித்தலை குறைக்க வேண்டும்.

நான்காவது, போதுமான உறக்கம். போதுமான தூக்கம் மிக அவசியம். "போதிய தூக்கம் இல்லாதால் 'க்ரெலின்' ஹார்மோன் அதிகரித்து பசியை தூண்டும். மனஅழுத்தம் 'கார்ட்டிசால்' அளவை உயர்த்தி கொழுப்பு சேமிப்பை அதிகரிக்கும்."

இதேபோல், உடற்பயிற்சியும் அவசியம். உடற்பயிற்சிகள் மற்றும் ஏதாவது பயிற்சிகளின் மூலம் ஆக்டிவாக இருப்பதன் மூலம் உடலில் உள்ள கலோரிகள் எரிக்கப்படுகின்றன.

இது, குறிப்பாக வயிற்றுப்பகுதி கொழுப்பை குறைக்க உதவுகிறது. எனவே, "தினமும் நடை, ஓட்டம், சைக்கிள், நீச்சல், யோகா போன்றவை செய்து, கொழுப்பை எரித்து, இதய ஆரோக்கியத்தையும் வளர்சிதை மாற்றத்தையும் மேம்படுத்துங்கள்."

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு