சில்கூர் கோவில் : கருட பிரசாதம் சாப்பிட்டால் குழந்தை பிறக்குமா? கூட்ட நெரிசலால் ஸ்தம்பித்த சாலைகள்

சில்கூர் பாலாஜி கோவில்

பட மூலாதாரம், K. SANTHOSH

படக்குறிப்பு, சில்கூர் கோவிலில் குவியும் பக்தர்கள்
    • எழுதியவர், அமரேந்திர யர்லகத்தா
    • பதவி, பிபிசி செய்தித்தொடர்பாளர்

ஹைதராபாத்தின் புறநகர் பகுதியில் இருக்கும் சில்கூர் கிராமத்தில் விடியற்காலை முதலே ஆயிரக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. ஹைதராபாத்-பிஜப்பூர் சாலை, வாகனங்களால் நிரம்பி வழிந்தது.

"கருட பிரசாதம் சாப்பிட்டால் குழந்தை பிறக்கும்" என்ற நீண்ட கால பிரசாரமே இந்த கட்டுக்கடங்காத கூட்டத்திற்கு காரணம். சில்கூர் கிராமத்தில் உள்ள பாலாஜி கோவிலில் வழங்கப்படும் கருட பிரசாதத்தை பெற ஒவ்வொரு ஆண்டும் சில்கூருக்கு ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கம். இந்த ஆண்டும் அங்கு பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.

ஏப்ரல் 19-ஆம் தேதி காலை எட்டு மணிக்கே சில்கூர் செல்லும் சாலைகள் அனைத்தும் நிரம்பி வழிந்தன. போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர்.

கருட பிரசாதம் சாப்பிட்டால் குழந்தைகள் பிறக்கும் என்ற பரப்புரையின் பின்னணி என்ன?

இதுபற்றி கோவில் நிர்வாகிகள், மருத்துவர்கள், `ஜன விஞ்ஞான வேதிகா’ பிரதிநிதிகள் சொல்வது என்ன?

சில்கூர் பாலாஜி கோவில்

பட மூலாதாரம், K. SANTHOSH

படக்குறிப்பு, சில்கூர் கோவிலில் காத்திருக்கும் பொதுமக்கள்

உண்மையில் அங்கு நடப்பது என்ன?

சில்கூர் பாலாஜி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் பிரம்மோற்சவம் நடைபெறும். இந்த பிரம்மோற்சவம் ஸ்ரீராம நவமிக்கு பிறகு இரண்டு நாட்களில் தொடங்குகிறது. அதாவது தெலுங்கு மாதங்களின் படி சைத்ரா மாத ஏகாதசி அன்று இந்த நிகழ்வு நடக்கும். இந்நிகழ்வின் முதல் நாள் கருட்மந்துனி பூஜை செய்யப்படுகிறது. கொடியேற்றும் நிகழ்ச்சியும் நடைபெறும்.

இந்த வழிபாட்டின் போது, கருட பகவானுக்கு ஒரு பெரிய பாத்திரத்தில் நைவேத்தியம் படைக்கப்படுகிறது. அதன் பிறகு அந்த பிரசாதம் இங்கு வரும் பக்தர்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.

இந்த கருட பிரசாத விநியோகம் பல ஆண்டுகளாக நடைபெற்று வருவதாக கோவில் பூசாரிகள் கூறுகின்றனர். பிரசாதம் சாப்பிட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று கோவிலின் தலைமை அர்ச்சகர் ரங்கராஜன் தொடர்ந்து கூறி வருகிறார். கருடருக்கு பிரசாதம் படைத்த பிறகு, தத்தோஜனம் (தயிர் சாதம்) போன்ற அந்த பிரசாதத்தை பக்தர்களுக்கு வழங்குகிறார்கள். குறிப்பாக பெண்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது.

இதை சாப்பிட்டால் குழந்தை பிறக்கும் என்று கோயில் அர்ச்சகர்கள் மைக்குகளில் விளம்பரம் செய்கிறார்கள். இந்த பிரசாதத்தை பெண்கள் மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும், அதிலும் குழந்தை இல்லாதவர்கள் சாப்பிட வேண்டும் என்பது இவர்களது கூற்று. இந்த பிரசாதத்தை சாப்பிட ஆண்டுதோறும் 5,000 முதல் 8,000 பேர் சில்கூர் கோவிலுக்கு வருவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. ஒவ்வொருவருக்கும் சிறிதளவு பிரசாதம் வழங்கப்படுகிறது.

சில்கூர் பாலாஜி கோவில்

பட மூலாதாரம், K. SANTHOSH

படக்குறிப்பு, சாமி பிரசாத்தை வாங்க கூடும் கூட்டம்.

இம்முறை என்ன நடந்தது?

சிலுக்கூர் பாலாஜி கோவில் நிர்வாகம் இந்த ஆண்டு யுகாதி பண்டிகையையொட்டி பிரம்மோற்சவம் தொடர்பான போஸ்டர் ஒன்றை வெளியிட்டது. அன்று முதல் கோவில் பூசாரிகள், நிகழ்வின் முதல் நாள் கருட பிரசாதம் வழங்கப்படும் என்று சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்தனர்.

இது பேஸ்புக், எக்ஸ் தளம், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் ஆகியவற்றில் வீடியோக்கள் மற்றும் செய்தி துணுக்குகளாக பகிரப்பட்டன. பத்திரிகைகளிலும் விளம்பரங்கள் கொடுக்கப்பட்டன. இதன் காரணமாக குழந்தை பேறுக்காக காத்திருக்கும் ஆயிரக்கணக்கான தம்பதிகள் அங்கு குவிந்தனர்.

ஹைதராபாத் மட்டுமின்றி, தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களின் பல மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் குவிந்துள்ளனர். இவர்களைத் தவிர, பிரம்மோற்சவத்தில் பங்கேற்க வரும் பக்தர்களும் அங்கு குவிந்தனர். அவர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் சிலுக்கூர் கோவிலுக்கு வந்ததால், சாலைகளில் கூட்டம் அலைமோதியது.

சிலுக்கூரில் இருந்து லங்கார் ஹவுஸ், நாணல் நகர், மெஹிதி பட்டினம், கச்சிபௌலி வரையிலான அனைத்து சாலைகளும் போக்குவரத்து நெரிசலில் திண்டாடி விட்டது. மேலும், வெயில் அதிகமாக இருந்ததால், தண்டூர், விகாராபாத், கோடங்கல் செல்லும் வாகன ஓட்டிகள், பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். மாலை வரை போக்குவரத்து நெரிசல் நீடித்தது.

சில்கூர் பாலாஜி கோவில்

பட மூலாதாரம், RANGAREDDY.TELANGANA.GOV.IN

படக்குறிப்பு, சில்கூர் பாலாஜி கோவில்.

'இம்முறை பல மடங்கு அதிகமான பக்தர்கள் வந்தனர்'

"குழந்தைப் பேறுக்காக காத்திருக்கும் பக்தர்களுக்கு கருட பிரசாதம் வழங்கி வருகிறோம். ஆனால் இம்முறை நாங்கள் எதிர்பார்த்ததை விட ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்தனர். இருப்பினும், பெரும்பாலானோருக்கு பிரசாதம் வழங்கினோம். பலருக்கு பிரசாதம் வழங்க முடியவில்லை."

"ஒவ்வொரு முறையும் மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு பிரசாதம் கொடுக்கப்படும். இந்த முறை அப்படி கொடுக்கவில்லை. வெள்ளிக்கிழமையே பிரசாதம் கொடுப்பதை நிறுத்திவிட்டோம்” என்று சிலுக்கூர் பாலாஜி கோவிலின் தலைமை அர்ச்சகர் சி.எஸ்.ரங்கராஜன் தெரிவித்தார்.

ஆயிரக்கணக்கான பக்தர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய ஏன் முன்னேற்பாடு செய்யவில்லை என்ற கேள்விக்கு அவர் பதில் அளிக்கவில்லை.

‘‘எங்கள் கணிப்பின்படி, காலை 10:30 மணிக்குள்ளாகவே 60,000 பக்தர்கள் வந்துவிட்டார்கள். பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் அங்கு குவிந்ததும் சில்கூர் கோயில் ரோடு வாகனங்களால் நிரம்பி வழிந்தது. இவ்வளவு பேர் வருவார்கள் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இதனால், போக்குவரத்து ஸ்தம்பித்தது,'' என, மீனாபாத் வட்டத்தின் இன்ஸ்பெக்டர் பவன்குமார் ரெட்டி தெரிவித்தார்.

சில்கூர் பாலாஜி கோவில்
படக்குறிப்பு, சில்கூர் பகுதியில் ஏற்பட்ட கடும் போக்குவரத்து நெரிசல்

நாங்கள் யாரையும் குறை கூறவில்லை, ஆனால் சூழ்நிலைகள் அப்படி அமைந்துவிட்டது : ஜன விஞ்ஞான வேதிகா

"பிரசாதம் சாப்பிட்டால் குழந்தை பிறக்கும் என்ற கூற்றை மக்கள் இன்னுமா நம்புகின்றனர், நான் மக்களைக் குறை கூறவில்லை, ஆனால் அவர்கள் இந்த நிலைக்கு ஆளாக்கப்பட்டது எண்ணி வருத்தமாக உள்ளது” என்று `ஜன விஞ்ஞான வேதிகா அமைப்பின் (ஜே.வி.வி.) தெலுங்கானா மாநில தலைவர் கோயா வெங்கடேஸ்வர ராவ் கூறினார்.

இது தொடர்பாக அவர் பிபிசியிடம் பேசுகையில்,“ஒரு காலத்தில் மரங்களையும் கடவுளையும் மூடநம்பிக்கையுடன் வணங்கி வந்தோம். அன்றைய காலகட்டத்தில் விஞ்ஞானம் வளரவில்லை. எனவே அன்றைய நம்பிக்கைகளை குறை சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஆனால், இப்போது விஞ்ஞானம் வளர்ந்து விட்ட நிலையில், கரு உருவாகும் செயல் முறையை அறிந்த பிறகும் மக்கள் இப்படி மூடநம்பிக்கைகளை கொண்டிருப்பதை என்ன சொல்ல முடியும்? இது நாட்டின் அறிவியல் வறட்சி என்றே கூற வேண்டும்,'' என்றார்.

"இதுபோன்ற விஷயங்களை நம்புபவர்களில் படிப்பறிவு உள்ளவர்களும், சாப்ட்வேர் வேலை செய்பவர்களும் அடக்கம், ஆனால் இந்த நம்பிக்கையின் உண்மைத்தன்மையை அவர்கள் அறியவில்லை’’ என்று வெங்கடேஸ்வர ராவ் கூறினார்.

“நமது அறிவியலுக்கு 400 வருட வரலாறு உண்டு. ஆனால் மூட நம்பிக்கைகள் பல்லாயிரம் ஆண்டுகளாக இருந்து வருகின்றன. இதன் காரணமாக அறிவியலை விட மூடநம்பிக்கையே மேலோங்கி நிற்கிறது. நமது சமூகத்தில் இன்னும் போதிய விழிப்புணர்வு ஏற்படவில்லை” என்றார் அவர்.

சில்கூர் பாலாஜி கோவில்

பட மூலாதாரம், RANGAREDDY.TELANGANA.GOV.IN

படக்குறிப்பு, "சில்கூர் பாலாஜி கோவிலுக்கு வந்தால் உடனே விசா கிடைத்துவிடும் என்று பலரும் நம்புகின்றனர்."

விசா வழங்கும் கடவுள் என்று கூறப்படுவது ஏன்?

இந்த கருட பிரசாத விவகாரத்தால், தற்போது சிலுக்குரி பாலாஜி கோவில் குறித்து பெரும் விவாதம் எழுந்துள்ளது. சில்கூர் பாலாஜி கோயில் ஹைதராபாத்தில் உள்ள மெஹ்திப்பட்டினத்திலிருந்து சுமார் 20 கிமீ தொலைவில் உள்ளது. ஹைதராபாத்-பிஜாப்பூர் நெடுஞ்சாலை வழியாக இந்தக் கோவிலுக்கு செல்ல வேண்டும் .

'சில்கூர் பாலாஜி' பெரும்பாலும் பக்தர்களால் 'விசா கடவுள்' என்றே அழைக்கப்படுகிறார். வெளிநாடு செல்ல நினைப்பவர்கள் சில்கூர் பாலாஜி கோவிலுக்கு ஒருமுறை சென்று வந்தால் விசா கிடைத்து விடும் என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் காணப்படுகிறது.

பக்தர்கள் தங்களது விருப்பங்களை நிறைவேற்றும் முன் 11 முறை கோயிலை சுற்றி வருவது வழக்கம். அந்த விருப்பம் நிறைவேறினால் கோயிலை 108 முறை வலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்த வேண்டும் என்பது அவர்ளது நம்பிக்கை.

இங்கு மூல கடவுளை பாலாஜி என்று அழைத்து வழிப்படுகின்றனர். இங்குள்ள மற்றொரு கடவுளுக்கு ராஜ்யலட்சுமி என்று பெயர். பொதுவாக கோவில்களில் உண்டியல்கள் காணப்படுவது வழக்கம். ஆனால் சில்கூர் பாலாஜி கோவிலில் உண்டியல் கிடையாது. பக்தர்கள் காணிக்கை செலுத்த தேவையில்லை. ஆனால் இங்கு வரும் பக்தர்கள் இடத்தில் கோயில் சார்பில் வெளியிடப்படும் சமயப் பத்திரிகையை வாங்க கோயில் பூசாரிகள் பிரச்சாரம் செய்கின்றனர்.

இந்த கோவில் மிகவும் பிரபலமடைந்து விட்டது, இருப்பினும் மாநில அரசின் கோயில் நிர்வாக அமைச்சகத்தின் கீழ் இயங்கவில்லை. கடந்த காலங்களில் கோவில் அறக்கட்டளையினருக்கும், அரசு கோயில் நிர்வாகிகளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

உயர்நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்குகள் விசாரிக்கப்பட்டன. நீதிமன்ற தீர்ப்பின்படி, கோயில் நிர்வாகம் அறக்கட்டளையிடம் ஒப்படைக்கப்பட்டது. தற்போது, தலைமை அர்ச்சகராக சி.எஸ்.ரங்கராஜன் உள்ளார்.

கோவில் எப்போது கட்டப்பட்டது என்ற கேள்விக்கு, 'சிலுகுரு க்ஷேத்ர சரித்திரம்’ என்ற நூலின் அடிப்படையில், இக்கோவில் 1067-ம் ஆண்டு கட்டப்பட்டதாக சொல்கின்றனர்.

சில்கூர் பாலாஜி கோவில்

பட மூலாதாரம், FITOPARDO/GETTYIMAGES

படக்குறிப்பு, 2019-20 ஆம் ஆண்டு ஆய்வு தரவுகளின்படி, ஒவ்வொரு 1,000 பேரிலும் 18.7 சதவீதம் பேர் திருமணமாகி ஐந்து ஆண்டுகளாகியும் குழந்தையின்மையால் பாதிக்கப்படுகின்றனர்.

அதிகரித்து வரும் குழந்தையின்மை பிரச்னை

கருட பிரசாதம் பெற ஆயிரக்கணக்கான மக்கள் திரண்ட சம்பவம், குழந்தையின்மை பிரச்னை பற்றிய விவாதத்தையும் உருவாக்கியுள்ளது.

பல்வேறு காரணங்களால் குழந்தை இல்லாத தம்பதிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. 2019-20 ஆம் ஆண்டில் 5-ஆவது தேசிய குடும்ப சுகாதார ஆய்வறிக்கையின் மாதிரிகளை ஆராய்ச்சியாளர்கள் வருண் அகர்வால், ஆர். சாய்மாதுரி மற்றும் ஷிர்சேந்து சவுத்ரி ஆகியோர் ஆய்வு செய்தனர்.

தேசிய மருத்துவ நூலகம், 4,91,484 மலட்டுத் தன்மையுள்ள பெண்களிடம் நடத்தப்பட்ட ஆய்வு பற்றிய ஒரு கட்டுரை வெளியிட்டுள்ளது. அவர்களில் ஒவ்வொரு 1,000 பேரிலும் 18.7 சதவீதம் பேர் திருமணமாகி ஐந்து ஆண்டுகளாகியும் குழந்தையின்மையால் பாதிக்கப்படுகின்றனர்.

ஒவ்வொரு ஆயிரம் பெண்களிலும் 42.9 சதவீதம் பேருக்கு திருமணமாகி ஒரு வருடத்திற்குள் குழந்தை இல்லாமை பிரச்சனை இருப்பதாக ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது. திருமணமாகி இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு 30.7% பேரும், மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு 24.1 % பேரும், நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு 20.7 % பேரும் குழந்தையின்மை பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

திருமணமாகி ஐந்தாண்டுகள் ஆன பிறகும், தெலங்கானாவில் ஆயிரம் பெண்களில் 25.7 சதவீதமும், ஆந்திராவில் 24.4 சதவீத பெண்களும் குழந்தையின்மை பிரச்னையை எதிர்கொள்கின்றனர்.

"கருவுறுதல் விகிதம் குறைவதற்குப் பல காரணங்கள் உள்ளன. பெண்களிடம் அதிகரித்து வரும் பிசிஓடி (பாலிசிஸ்டிக் ஓவேரியன் நோய்) பிரச்னைகளே இதற்கு முக்கியக் காரணம். ஆண்களின் விந்தணு எண்ணிக்கை குறைவதும் முக்கிய காரணம். மன அழுத்தம், வாழ்க்கை முறை மாற்றம், சரியாக ஆரோக்கியமாக சாப்பிடாதது, மது அருந்துவது என பல்வேறு காரணங்கள் குழந்தையின்மை பிரச்னைக்கு வழிவகுக்கும்'' என்கிறார் குண்டூரைச் சேர்ந்த மகளிர் மருத்துவ நிபுணர்.

“பிரசாதம் சாப்பிட்டால் குழந்தை பிறக்கும் என்பது அறிவியல் பூர்வமாக உண்மையில்லை. அறிவியலுக்கு முற்றிலும் எதிரானது தான். அதே சமயம் இது மக்களின் நம்பிக்கை சார்ந்தது” என்கிறார் பெயர் குறிப்பிட விரும்பாத மகப்பேறு மருத்துவர்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)