இஸ்ரேல்-ஹமாஸ் ஒப்பந்தம்: உடன்பாடு எட்டப்பட்டதாக டிரம்ப் அறிவிப்பு

பட மூலாதாரம், Getty Images
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் "இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இரு தரப்பும் அமைதி திட்டத்தின் முதல் கட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளனர்" என்று அறிவித்தார்
"இதன் பொருள் பணயக்கைதிகள் அனைவரும் மிக விரைவில் விடுவிக்கப்படுவார்கள், மேலும் இஸ்ரேல் தங்கள் துருப்புக்களை ஒப்புக்கொண்ட எல்லை வரை திரும்பப் பெறும்" என்று ட்ரூத் சோஷியல் எனும் சமூக ஊடகத்தில் டிரம்ப் பதிவிட்டுள்ளார்.
வரவிருக்கும் நாட்களில் மத்திய கிழக்கிற்கு பயணம் செய்வது குறித்து டிரம்ப் பரிசீலித்து வருவதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
"இஸ்ரேலுக்கு சிறந்த நாள்" - நெதன்யாகு
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இந்த ஒப்பந்தத்தை "இஸ்ரேலுக்கு ஒரு சிறந்த நாள்" என்று கூறுகிறார்.
ஒப்பந்தத்தை அங்கீகரிக்கவும், "எங்கள் அன்பான பணயக்கைதிகள் அனைவரையும் வீட்டிற்கு அழைத்து வரவும்" நாளை இஸ்ரேல் அரசாங்கத்தை கூட்டுவேன் என்று நெதயன்யாகு தெரிவித்துள்ளார்.
"எங்கள் பணயக்கைதிகளை விடுவிக்கும் இந்த புனித பணிக்கு அணிதிரண்டதற்காக" இஸ்ரேலிய துருப்புக்கள் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அவரது குழுவினருக்கு அவர் நன்றி தெரிவிக்கிறார்.

பட மூலாதாரம், AFP
ஒப்பந்தத்தை உறுதி செய்த ஹமாஸ்
ஹமாஸ் இந்த ஒப்பந்தத்தை உறுதிப்படுத்தியுள்ளது மற்றும் இந்த ஒப்பந்தத்தை முழுமையாக பின்பற்ற இஸ்ரேலை கட்டாயப்படுத்துமாறு டிரம்ப் மற்றும் சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
7 அக்டோபர் 2023 ஹமாஸ் இஸ்ரேலில் நடத்திய தாக்குதலில் 1,200 பேர் கொல்லப்பட்டனர், மற்றும் 251 பேர் பிணைக் கைதிகளாக அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலளிக்கும் வகையில் இஸ்ரேல் காஸாவில் ஒரு ராணுவ நடவடிக்கையைத் தொடங்கி இரண்டு ஆண்டுகள், இரண்டு நாட்களான நிலையில் இந்த ஒப்பந்தம் முடிவாகியுள்ளது.
காஸாவில் இஸ்ரேலிய ராணுவ நடவடிக்கைகளில் 20,179 குழந்தைகள் உட்பட குறைந்தது 67,183 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகம் தெரிவிக்கிறது.

பிபிசியின் அமெரிக்க செய்தி கூட்டாளியான சிபிஎஸ்-ன் படி, ஹமாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த ஒப்பந்தம் "காஸா மீதான போரை முடிவுக்குக் கொண்டுவரும், ஆக்கிரமிப்புப் படைகள் முழுமையாக திரும்பப் பெறுவதை உறுதி செய்யும், மனிதாபிமான உதவிகளை அனுமதிக்கும், கைதிகள் பரிமாற்றத்தை செயல்படுத்தும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கத்தார், எகிப்து, துருக்கி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோரின் மத்தியஸ்த முயற்சிகளுக்கு ஹமாஸ் நன்றி தெரிவித்துள்ளது. "இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அரசாங்கம் ஒப்பந்தத்தின் விதிமுறைகளுக்கு முழுமையாக இணங்குவதை உறுதி செய்ய" டிரம்ப் மற்றும் பிற கட்சிகளுக்கு ஹமாஸ் அழைப்பு விடுக்கிறது.
காஸா மக்கள் "ஒப்பிடமுடியாத தைரியம், மரியாதை மற்றும் வீரத்தை வெளிப்படுத்தியுள்ளனர்" என்று ஹமாஸ் மேலும் கூறுகிறது.
"சுதந்திரம், மற்றும் சுயநிர்ணயம் அடையப்படும் வரை நாங்கள் எங்கள் மக்களின் தேசிய உரிமைகளை ஒருபோதும் கைவிடமாட்டோம்." என்றும் குறிப்பிட்டுள்ளது.
இஸ்ரேலும் ஹமாஸும் ஒருவருக்கொருவர் நேரடியாக பேசுவதில்லை - இந்த பேச்சுவார்த்தைகள் ட்ரம்பின் மத்திய கிழக்கு தூதர் ஸ்டீவ் விட்காஃப், ட்ரம்பின் மருமகன் ஜாரெட் குஷ்னர் மற்றும் எகிப்து, கத்தார், துருக்கியின் மத்தியஸ்தர்கள் ஆகியோரால் நடத்தப்பட்டன.
இந்த உடன்பாடு நீடித்தால், ட்ரம்ப் இதை அவரது இரண்டாவது பதவிக்காலத்தின் மகுடம் சூட்டும் வெளியுறவுக் கொள்கை சாதனையாக சுட்டிக்காட்டுவார் என்று வெள்ளை மாளிகையில் இருந்து பிபிசி நிருபர் பெர்ன் டெபுஸ்மேன் ஜூனியர் கூறுகிறார்.
காஸாவில் கொண்டாட்டம்
காஸாவில் உள்ள பாலத்தீனியர்கள் போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகளை விடுவிக்கும் ஒப்பந்தத்தின் செய்தியைக் கொண்டாடும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
பாலத்தீன பத்திரிகையாளர் சயீத் முகமது இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட இரவுநேர காட்சிகளில், டெய்ர் அல்-பாலா எனும் நகரில் உள்ள அல்-அக்சா மருத்துவமனைக்கு வெளியே ஆண்களும் பெண்களும் இசைக்கு நடனமாடுவதை காண முடிந்தது. அவர்கள் விசில் அடித்து, கைதட்டி "அல்லாஹு அக்பர்" ("கடவுளே பெரியவர்") என்று கோஷமிட்டனர்.
பத்திரிகையாளர் முகமது அல்-ஹடாட்டின் மற்றொரு வீடியோவில் காஸாவின் வேறு ஒரு பகுதியில் இளைஞர்கள் கூடி நடனமாடுவதை காண முடிந்தது.
பத்திரிகையாளர் முகமது அல்-ஹடாட்டின் மற்றொரு வீடியோவில் காஸாவின் வேறு ஒரு பகுதியில் இளைஞர்கள் கூடி நடனமாடுவதை காண முடிந்தது.
இஸ்ரேலிய பணயக்கைதிகளின் உறவினர்கள் இந்த ஒப்பந்தத்தை வரவேற்றுள்ளனர்.
எலி ஷராபியின் மனைவி மற்றும் குழந்தைகள் கொல்லப்பட்டனர், அவரது சகோதரர் யோசியின் உடல் ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ளது, "மிகுந்த மகிழ்ச்சி, அனைவரும் வீட்டிற்கு வருவதைப் பார்க்க காத்திருக்க முடியாது" என்று அவர் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.
பணயக்கைதியான நிம்ரோட் கோஹனின் தாயார் : "என் குழந்தை, நீ வீட்டிற்கு வர போகிறாய்." என்று பதிவிட்டிருந்தார்.

பட மூலாதாரம், Reuters
ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், இந்த ஒப்பந்தத்தை முழுமையாக செயல்படுத்துவதற்கும், காஸாவில் மனிதாபிமான உதவிகள் வழங்குவதை அதிகரிப்பதற்கும், ஐ.நா ஆதரவளிக்கும் என்று கூறியுள்ளார்.
இஸ்ரேலிய பணயக் கைதிகளை விடுவித்தல், நிரந்தர போர் நிறுத்தத்திற்கு கட்டுப்படுதல், உடனடியாக காஸாவிற்குள் மனிதாபிமான பொருட்களை அனுமதித்தல் உள்ளிட்ட உடன்பாட்டின் நிபந்தனைகளுக்கு கீழ்ப்படிய வேண்டும் என்றும் குட்டரெஸ் அனைத்து தரப்பினரையும் வலியுறுத்தினார்.
"துன்பம் முடிவுக்கு வர வேண்டும்," என்று குட்டரெஸ் கூறினார்.
"பாலத்தீன மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்து, இஸ்ரேலியர்கள் மற்றும் பாலத்தீனியர்கள் அமைதியுடனும் பாதுகாப்புடனும் வாழ உதவும் வகையில் இந்த முக்கியமான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அனைத்து தரப்பினரையும் நான் கேட்டுக்கொள்கிறேன்." என்றும் வலியுறுத்தினார்.
பிரிட்டன் பிரதமர் ஸ்டாமர் இந்த செய்தியை வரவேற்றார்: "இது உலகம் முழுவதும் உணரப்படும் ஆழ்ந்த நிம்மதியின் தருணம், குறிப்பாக பணயக்கைதிகள், அவர்களின் குடும்பங்கள் மற்றும் காஸாவின் பொதுமக்கள் அனைவருக்கும். கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர்கள் கற்பனை செய்ய முடியாத துன்பங்களை அனுபவித்துள்ளனர்." என்று கூறியுள்ளார்.
ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் இந்த ஒப்பந்தத்தை "அமைதியை நோக்கிய மிகவும் தேவையான நடவடிக்கை" என்று குறிப்பிட்டார், மேலும் "திட்டத்தின் விதிமுறைகளை மதிக்க" அனைத்து தரப்பினரையும் வலியுறுத்தினார்.
இந்திய பிரதமர் மோதியும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் ஆகியோரும் முதல் கட்ட ஒப்பந்தத்தை வரவேற்றனர்.
அடுத்து என்ன நடக்கும்?
இஸ்ரேல் அரசாங்கம் வியாழக்கிழமை இந்த ஒப்பந்தத்தின் மீது வாக்கெடுப்பு நடத்த உள்ளது.
அவர்கள் அதை முறையாக அங்கீகரித்தால், இஸ்ரேல் காஸாவில் இருந்து தனது துருப்புக்களை ஒப்புக்கொள்ளப்பட்ட நிலைக்கு திரும்பப் பெற வேண்டும் என்று வெள்ளை மாளிகையின் மூத்த அதிகாரி ஒருவர் பிபிசியின் அமெரிக்க கூட்டு நிறுவனமான சிபிஎஸ் நியூஸிடம் தெரிவித்தார். திரும்பப் பெறுதல் 24 மணி நேரத்திற்குள் நடக்கும் என்று அந்த அதிகாரி கூறினார்.
இது நடந்த பிறகு, 72 மணி நேர அவகாசம் தொடங்கும், அப்போது ஹமாஸ் உயிருடன் இருக்கும் பணயக்கைதிகளை விடுவிக்க வேண்டும்.
பணயக்கைதிகளின் விடுவிப்பு திங்களன்று தொடங்கும் என்று வெள்ளை மாளிகையின் மூத்த அதிகாரி கூறினார்.
இன்னும் தெளிவுப்படுத்தப்படாத விசயங்கள் எவை?
இதுவரை அறிவிக்கப்பட்டிருப்பது ட்ரம்பின் 20 அம்ச சமாதான திட்டத்தின் முதல் கட்டமாகும், அதை இஸ்ரேல் ஏற்றுக்கொண்டுள்ளது மற்றும் ஹமாஸ் ஓரளவு ஒப்புக் கொண்டுள்ளது.
இருப்பினும், இந்த அறிவிப்புகள் சில பிரச்னைகளை உள்ளடக்கவில்லை, இரு தரப்பினரும் அவை குறித்து ஒரு தீர்வை எட்டவில்லை.
குறிப்பிடத்தக்க வகையில், ஹமாஸின் ஆயுதக் குறைப்பைச் சுற்றி எந்த விவரங்களும் இல்லை - இது ட்ரம்பின் திட்டத்தின் ஒரு முக்கிய அம்சமாகும். ஹமாஸ் முன்னதாக தனது ஆயுதங்களை குறைக்க மறுத்துவிட்டது, ஒரு பாலத்தீனிய அரசு நிறுவப்பட்டால் மட்டுமே அவ்வாறு செய்யும் என்று கூறியது.
காஸாவின் எதிர்கால ஆட்சியும் இன்னும் தெளிவு கிடைக்காத ஒரு அம்சமாகும். ட்ரம்பின் 20 அம்ச திட்டம், ஹமாஸுக்கு காஸாவில் எதிர்கால பங்கு இருக்காது என்றும், பாலத்தீனிய அதிகார சபையிடம் ஒப்படைக்கப்படுவதற்கு முன்பு, அது தற்காலிகமாக ஒரு "தொழில்நுட்ப, அரசியல் சாரா பாலத்தீனிய குழுவால்" நிர்வகிக்கப்பட வேண்டும் என்றும் முன்மொழிகிறது.
நெதன்யாகு, ட்ரம்பின் திட்டத்தை ஏற்றுக்கொண்டாலும் கூட, கடந்த வாரம் பாலத்தீனிய அதிகார சபையின் ஈடுபாட்டுக்கு உடன்படாதது போல தோன்றியது.
நெதன்யாகுவின் ஆளும் கூட்டணிக்குள் உள்ள தீவிர தேசியவாதிகள் பலர் காஸாவில் யூத குடியேற்றங்களை புனரமைக்க விரும்புகிறார்கள், அவர்களும் இந்த அம்சத்தை எதிர்க்கக்கூடும்.
இதற்கு பதிலளித்த ஹமாஸ், காஸாவை நிர்வகிப்பதில் இன்னும் சில பங்கு இருக்கும் என்று எதிர்பார்ப்பதாக கூறியது.
கூடுதலாக, புதன்கிழமை இரவு நிலவரப்படி, காஸாவில் பணயக்கைதிகளுக்கு ஈடாக இஸ்ரேல் விடுவிக்க திட்டமிட்டுள்ள பாலத்தீனிய கைதிகளின் இறுதி பட்டியலை ஹமாஸ் இன்னும் பெறவில்லை என்று பாலத்தீனிய வட்டாரம் பிபிசியிடம் தெரிவித்தது.
2023 அக்டோபர் 7 க்குப் பிறகு இஸ்ரேல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 250 ஆயுள் தண்டனை கைதிகள் மற்றும் 1,700 காஸா மக்கள் விடுவிக்கப்படுவார்கள் என்று 20 அம்சத் திட்டம் கூறுகிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












