'ரஷ்ய போர் விமானங்களை இடைமறித்த நேட்டோ' - ஐரோப்பாவில் என்ன நடக்கிறது?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ஜாரோஸ்லாவ் லுகிவ்
- வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்
கடந்த வெள்ளிக்கிழமை ரஷ்ய போர் விமானங்கள் தங்களின் வான் எல்லைக்குள் ஊடுருவியதாகக் கூறும் எஸ்டோனியா, நேட்டோ உறுப்பினர்களுடன் அவசர ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
இந்த ஊடுருவலை "அதிர்ச்சிகரமானது" என எஸ்டோனிய வெளியுறவு அமைச்சகம் கண்டித்துள்ளது.
ரஷ்யாவின் மூன்று மிக்-31 போர் விமானங்கள் எஸ்டோனியா வான் பரப்புக்குள் அனுமதியின்றி நுழைந்து பின்லாந்து வளைகுடா மீது 12 நிமிடங்கள் வரை இருந்ததாக எஸ்டோனியா வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நேட்டோ படைகள் உடனடியாக எதிர்வினையாற்றி ரஷ்ய விமானங்களை இடைமறித்து திருப்பி அனுப்பியதாகக் கூறும் நேட்டோ செய்தித் தொடர்பாளர், "இது ரஷ்யாவின் அடாவடியான அணுகுமுறை மற்றும் நேட்டோவின் பதிலளிக்கும் திறனுக்கு மற்றுமொரு உதாரணம்." எனத் தெரிவித்துள்ளார்.
நேட்டோவின் கிழக்கு எல்லையில் பாதுகாப்பை வலுப்படுத்தும் நடவடிக்கையின் கீழ் இத்தாலி, பின்லாந்து மற்றும் சுவீடன் ஆகிய நாடுகள் தங்களின் விமானங்களை அனுப்பி வைத்தன. ஆனால் எஸ்டோனிய வான் பரப்புக்குள் அத்துமீறியதாக கூறப்படும் குற்றச்சாட்டை ரஷ்யா மறுத்துள்ளது.
ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் கூறுகையில், "போர் விமானங்கள் அனைத்தும் முன்னரே தீர்மானிக்கப்பட்ட வழித்தடத்தில் தான் பயணித்தன. சர்வதேச வான்பரப்பில், விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டும் மற்ற நாடுகளின் எல்லைகளை மீறாமலும் தான் இது மேற்கொள்ளப்பட்டது என கண்காணிப்பின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது." எனத் தெரிவித்துள்ளது.
இந்த போர் விமானங்கள் எஸ்டோனியாவுக்குச் சொந்தமான வைண்ட்லூ தீவிலிருந்து 3 கிமீ தொலைவில் சர்வதேச எல்லைக்குட்பட்ட பகுதியில்தான் பறந்தன என்றும் ரஷ்யா தெரிவித்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images
கடந்த வாரம் நேட்டோ உறுப்பினர்களான போலந்து மற்றும் ருமேனியா ஆகிய நாடுகள் தங்களின் வான்பரப்புக்குள் ரஷ்ய டிரோன்கள் அத்துமீறி நுழைந்ததாக கூறியதால் பதற்றம் அதிகரித்தது.
இதற்குப் பதிலடியாக, கிழக்குப் பகுதியில் பாதுகாப்பை வலுப்படுத்த போர் விமானங்கள் உள்ளிட்ட ராணுவ தளவாடங்களை கிழக்கு நோக்கி நகர்த்தப் போவதாக நேட்டோ தெரிவித்துள்ளது.
வெள்ளிக்கிழமை செய்தியாளர் சந்திப்பில் பேசிய எஸ்டோனியா பிரதமர் கிறிஸ்டன் மிக்கேல், நேட்டோவில் பிரிவு 4-ன் கீழ் அவசர ஆலோசனைக் கூட்டத்தை நடத்த கோரிக்கை வைத்துள்ளதாக தெரிவித்தார்.
"எந்த விதமாக மிரட்டலுக்கும் நேட்டோவின் பதிலடி ஒன்றுபட்டதாகவும் வலுவானதாகவும் இருக்க வேண்டும். தற்போதுள்ள சூழ்நிலை பற்றிய விழிப்புணர்வை உறுதி செய்து அடுத்தக்கட்ட கூட்டு நடவடிக்கைகள் பற்றி ஒப்புக்கொள்ள நமது கூட்டாளிகளுடன் ஆலோசிப்பது அவசியம் என நாங்கள் கருதுகிறோம்." என்றார் அவர்.
"நான் அதை விரும்பவில்லை. இது நடந்தால் பெரிய பிரச்னையாக மாறும்" என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
ரஷ்யாவுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் எஸ்டோனியா, இந்த ஆண்டு தனது வான்வெளியில் ரஷ்யா செய்த ஐந்தாவது அத்துமீறல் இது எனக் குற்றம்சாட்டியுள்ளது.
ரஷ்ய விமானங்கள் வடகிழக்கில் இருந்து எஸ்டோனிய வான்வெளிக்குள் நுழைந்தது.
முதலில் பின்லாந்து வளைகுடாவுக்கு மேல் பின்லாந்து ஜெட் விமானங்கள் அதை இடைமறித்தன என்றும் பின்னர், எஸ்டோனியாவை தளமாகக் கொண்ட இத்தாலிய எஃப்-35 போர் விமானங்கள் ரஷ்ய விமானங்களைப் பின்தொடந்து சென்று எஸ்டோனியா வான் எல்லைக்கு வெளியே அனுப்பி வைத்தன என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரஷ்ய ஜெட் விமானங்கள் எந்தவொரு பயணத் திட்டமும் இல்லாமல், டிரான்ஸ்பாண்டர்களை (transponders) அணைத்து, எஸ்டோனிய விமான கட்டுப்பாட்டுடன் வானொலி தொடர்பு இல்லாமல் இருந்தன என்று அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்தது.
ஆனால் இதற்கு ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது.
"இந்த ஜெட் விமானங்கள் சர்வதேச வான்வெளியில் விதிமுறைகளுக்கு இணங்க திட்டமிடப்பட்ட வழித்தடத்தில் பறந்தன. பிற நாடுகளின் எல்லைகளை மீறவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது" என்றும் அமைச்சகம் கூறியது.
எஸ்டோனியாவுக்குச் சொந்தமான வைண்ட்லூ தீவிலிருந்து குறைந்தது 3 கிலோமீட்டர் தொலைவில் பால்டிக் கடல் பகுதியில் தான் அவை பறந்தன என்றும் தெரிவித்தது.

2022ம் ஆண்டு பிப்ரவரியில் ரஷ்யா, யுக்ரேனில் முழுமையான படையெடுப்பைத் தொடங்கியது.
மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான முயற்சிகளை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்னெடுத்து வருகிறார். சமீபத்தில் அவர், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை அலாஸ்காவில் நடைபெறும் உச்சிமாநாட்டிற்கு அழைத்திருந்தார்.
ஆனால், புதினின் படைகள் போர் நிறுத்தத்திற்கான அழைப்புகளை நிராகரித்து, வான்வழித் தாக்குதல்களை அதிகரித்துள்ளன. தரை வழியாகவும் மெதுவாக முன்னேற்றம் காணப்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரஷ்யா யுக்ரேனில் திட்டமிட்டபடி போர் நடத்த முடியவில்லை என்பதை இந்த ஊடுருவல் காட்டுகிறது என்று எஸ்டோனிய பிரதமர் கூறினார்.
"நேட்டோ நாடுகள் தங்கள் சொந்த நிலப்பரப்புகளின் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்தும்படி கட்டாயப்படுத்துவதன் மூலம், யுக்ரேன் மீதான கவனத்தையும், உதவியையும் திசை திருப்புவதே ரஷ்யாவின் நோக்கம்," என்றும் அவர் குறிப்பிட்டார்.

பட மூலாதாரம், Getty Images
கடந்த வாரம், போலந்து ராணுவம் குறைந்தது மூன்று ரஷ்ய டிரோன்களைச் சுட்டு வீழ்த்தியதாக தெரிவித்தது. போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க், மொத்தம் 19 ட்ரோன்கள் போலந்து வான்வெளியில் நுழைந்ததாகக் கூறினார்.
இந்தச் சம்பவம் வேண்டுமென்றே செய்யப்படவில்லை என்று ரஷ்யா கூறியது. போலந்து நிலப்பரப்பில் உள்ள வசதிகளை குறிவைக்கும் "எந்தத் திட்டமும் இல்லை" என்றும் அதன் பாதுகாப்பு அமைச்சகம் விளக்கியது.
ரஷ்யாவின் நெருங்கிய கூட்டாளியான பெலாரஸ், வழிகாட்டும் கருவிகள் செயலிழந்ததால் டிரோன்கள் தவறுதலாக போலந்து வான்வெளிக்குள் நுழைந்தன எனக் கூறியது.
பல நாட்களுக்கு பிறகு, "டான்யூப் (நதியில்) நதிக்கரையில் உள்ள யுக்ரேனிய உள்கட்டமைப்புகளின் மீது ரஷ்யா நடத்திய வான் தாக்குதலுக்குப் பின்", ருமேனிய எல்லையை கண்காணித்துக் கொண்டிருந்த இரண்டு எப்ஃ - 16 (F-16) ஜெட் விமானங்கள் ஒரு ரஷ்ய டிரோனைக் கண்டதாக அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது.
பின்னர் அந்த டிரோன் ரேடாரிலிருந்து மறைந்ததாகவும் கூறப்பட்டது. இந்த விவகாரம் குறித்து ரஷ்யா எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
போலந்து மற்றும் ருமேனியாவில் நடந்த இந்த ரஷ்ய ஊடுருவல்களுக்கு எதிர்வினையாக, நேட்டோ தனது துருப்புகள் மற்றும் போர் விமானங்களை கிழக்கு நோக்கி நகர்த்துவதாக அறிவித்தது. கூட்டணியின் கிழக்குப் பகுதியை வலுப்படுத்தும் முயற்சியில் போலந்து வான்வெளி பாதுகாப்பு பணிகளில் பிரிட்டன் , பிரான்ஸ், ஜெர்மனி, டென்மார்க் ஆகிய நாடுகளின் போர் விமானங்கள் ஈடுபட்டுள்ளன.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












