டிரம்பின் வரி யுத்தத்திற்கு நடுவே சீனாவில் புதின், மோதி - என்ன நடக்கிறது?
- எழுதியவர், லாரா பிக்கர் & ஸ்டீஃபன் மென்டொனல்
- பதவி, சீன செய்தியாளர்கள்
- வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

பட மூலாதாரம், Getty Images
அமெரிக்காவின் வரி யுத்தத்திற்கு நடுவே புதினும் மோதியும் ஷாங்காய் ஒத்துழைப்பு நாடுகள் உச்சிமாநாட்டில் பங்கேற்க சீனா சென்றுள்ளனர்.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியும் ஷாங்காய் ஒத்துழைப்பு நாடுகள் மாநாட்டில் (SCO) பங்கேற்க சீனா சென்றுள்ளனர். இந்த பிராந்திய பாதுகாப்பு உச்சிமாநாட்டில் 20க்கும் மேற்பட்ட தலைவர்களுடன் அவர்கள் இணைந்துள்ளனர்.
இரண்டாம் உலகப் போர் முடிவடைந்து 80 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில் பெய்ஜிங்கில் நடைபெறும் ஒரு பெரிய இராணுவ அணிவகுப்புக்கு சில நாட்களுக்கு முன்பு தியான்ஜின் துறைமுகத்தில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) மாநாடு நடக்கிறது.
ஏழு ஆண்டுகளில் முதல் முறையாக சீனா சென்றுள்ள மோதி, எஸ்சிஓ உச்சிமாநாட்டிற்கு முன்னதாக சீன அதிபர் ஜின்பிங்குடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தியா தனது அண்டை நாடுகளுடனான உறவுகளை மேம்படுத்த ஆர்வமாக இருப்பதாக மோதி கூறினார்.
இந்தியா தொடர்ந்து ரஷ்ய கச்சா எண்ணெயை வாங்கியதற்கு தண்டனையாக இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்கா அதிக வரிகளை விதித்துள்ளது. யுக்ரேன் போர் தொடர்பாக புதின் மேலும் பொருளாதாரத் தடைகளை சந்திக்க நேரிடலாம் என்ற அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் இந்த கூட்டம் நடக்கிறது.

பட மூலாதாரம், Narendra Modi/YT
"பரஸ்பர நம்பிக்கை, கண்ணியம் ஆகியவற்றின் அடிப்படையில் எங்கள் உறவுகளை முன்னெடுத்துச் செல்ல" இந்தியா உறுதியளித்துள்ளதாக ஜின்பிங்கிடம் மோதி கூறினார்.
மோதி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட ஒரு வீடியோவில், "இரு நாடுகளையும் சேர்ந்த 2.8 பில்லியன் மக்களின் நலன்கள் எங்கள் ஒத்துழைப்புடன் இணைக்கப்பட்டுள்ளன. இது முழு மனிதகுலத்தின் நன்மைக்கும் வழிவகுக்கும்" என்று ஜின்பிங்கிடம் மோதி கூறினார்.
பாகிஸ்தான், இரான் மற்றும் பெலாரஸ் உள்பட ஷாங்காய் ஒத்துழைப்பு நாடுகள் (SCO) அமைப்பில் உள்ள 10 உறுப்பு நாடுகளும், 16 பார்வையாளர் அந்தஸ்து பெற்ற நாடுகளும் உள்ளன.
இந்த உச்சிமாநாடு, அதில் பங்கேற்கும் தலைவர்களுக்கு பொதுவான குறைகளையும் பரஸ்பர நலன் தரும் விஷயங்களையும் பகிர ஒரு வாய்ப்பாக அமையும். இந்த ஆண்டு கூட்டத்தில் அமெரிக்காவுடனான வர்த்தகப் போர் முக்கியமாக விவாதிக்கப்படலாம்.
கடந்த வாரம் இந்தியா மீது 50 சதவீத வரிகளை விதிக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் எடுத்த முடிவு, 2020 ஆம் ஆண்டில் இமயமலையில் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட ஒரு கொடிய மோதலின் காரணமாக விரிசலடைந்த இந்தியா - சீனா உறவை மேம்படுத்த உதவியதாகத் தெரிகிறது.

எஸ்சிஓ அமைப்பு உருவாக்கப்பட்டது ஏன்?
நேட்டோ போன்ற மேற்கத்திய கூட்டணிகளின் செல்வாக்கைக் கட்டுப்படுத்தும் ஒரு எதிர் நடவடிக்கையாக, 2001 ஆம் ஆண்டு சீனா, ரஷ்யா மற்றும் நான்கு மத்திய ஆசிய நாடுகளால் ஷாங்காய் ஒத்துழைப்பு நாடுகள் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. எஸ்.சி.ஓ. அமைப்பு நிறுவப்பட்ட பிறகு, இந்த ஆண்டு நடைபெறும் கூட்டமே மிகப்பெரியதாகும்.
தியான்ஜின் நகரில் எஸ்சிஓ உச்சிமாநாடு ஒரு முக்கிய நிகழ்வாக மாறியுள்ளது. இந்த வடக்கு துறைமுக நகரம் முழுவதும் எஸ்சிஓ பற்றி விளம்பர பதாகைகள் மற்றும் விளம்பர பலகைகள் உள்ளன.
எஸ்சிஓ கூட்டம் நடைபெறும் இடத்தல் காட்டப்படும் வண்ணமயமான ஒளிக்காட்சியைக் காண இரவு நேரத்தல் பல்லாயிரக்கணக்கான உள்ளூர் பார்வையாளர்கள் திரள்கின்றனர்.
தெருக்களில் மக்கள் நடமாடவே கஷ்டப்படும் அளவுக்கு அதிக கூட்ட நெரிசல் உள்ளது. குறிப்பாக வரலாற்று சிறப்புமிக்க ஜீஃபாங் பாலத்தில் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியில் மிக அதிக நெரிசல் காணப்படுகிறது. .
உலகத் தலைவர்களின் மோட்டார் வாகன அணிவகுப்பு விரைவாகக் கடந்து செல்ல வசதியாக ஆங்காங்கே தடைகள் போடப்பட்டிருப்பதால், சில நேரங்களில் பாதசாரிகள் காத்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
நகர மையப் பகுதியில் டாக்சிகள் மற்றும் பிற வாடகை கார் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. ஆனாலும், ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டத்தின் ஒரு அங்கமாக இருக்க விரும்பும் மக்கள் கூட்டத்தின் உற்சாகத்தை அது குறைக்கவில்லை.
இருப்பினும், தியான்ஜினின் 1.3 கோடிக்கும் அதிகமான மக்கள் முடிந்தவரை வெளியே நடமாடுவதைத் தவிர்க்கவும், அத்தியாவசிய பொருட்களை வாங்க அருகிலுள்ள கடைகளை பயன்படுத்தவும் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
இரண்டாம் உலகப் போர் முடிவடைந்து 80 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கும் பிரமாண்டமான இராணுவ அணிவகுப்புக்கு சில நாட்களுக்கு முன்பு இந்த எஸ்சிஓ உச்சிமாநாடு நடைபெறுகிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












