தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா இடையே ஆம்னி பேருந்து சேவை நிறுத்தம் ஏன்?
தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, கர்நாடகா இடையிலான ஆம்னி பேருந்து போக்குவரத்தை நிறுத்தியிருப்பதாக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கங்கள் கூட்டாக அறிவித்திருக்கின்றன.
பல மாநிலங்களிலும் கூடுதல் வரிகளையும் அபராதங்களையும் விதிப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
நவம்பர் ஏழாம் தேதி தமிழ்நாட்டிலிருந்து கேரளாவுக்குச் சென்ற ஆம்னி பேருந்துகளில் முப்பதுக்கும் மேற்பட்ட பேருந்துகள், கேரள மாநில போக்குவரத்துத் துறையினரால் நிறுத்தப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது. இதற்குப் பிறகு கர்நாடக மாநிலத்திலும் இதேபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. தமிழ்நாட்டிலிருந்து சென்ற 60க்கும் மேற்பட்ட பேருந்துகள் தடுத்து நிறுத்தப்பட்டு ஒரு பேருந்திற்கு 2.2 லட்ச ரூபாய் வரியும் அபராதமும் விதிக்கப்பட்டது.
இதையடுத்து, அன்றைய தினமே முதற்கட்டமாக தமிழ்நாட்டிலிருந்து கேரளாவுக்குச் செல்லக்கூடிய 100க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டன.
இந்தப் பிரச்னை தீர்க்கப்படாவிட்டால் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி இடையிலான ஆம்னி பேருந்து சேவைகள் திங்கட்கிழமை மாலை முதல் நிறுத்தப்படும் என இந்த மாநிலங்களைச் சேர்ந்த ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.
பட மூலாதாரம், Getty Images
பிரச்னையின் பின்னணி என்ன?
ஒரு மாநிலத்திலிருந்து பிற மாநிலங்களுக்கு இயக்கப்படும் ஆம்னி பேருந்துகள் நீண்ட காலமாக சுற்றுலாப் பயணிகளுக்கான உரிமங்களின் மூலமே இயக்கப்பட்டுவந்தன.
ஒரு மாநிலத்தில் பதிவுசெய்த பேருந்துகள், வேறொரு மாநிலத்திற்குச் செல்வதாக இருந்தால் அந்த மாநிலத்திற்கு மட்டும் உரிமம் எடுத்துக்கொண்டு தொடர்ந்து இயங்குவதை வழக்கமாக வைத்திருந்தன.
இந்த நிலையில், 2021ஆம் ஆண்டில் மத்திய அரசு இதுபோல ஒரு மாநிலத்தில் இருந்து இன்னொரு மாநிலத்திற்கு இயக்கப்படும் பேருந்துகளுக்கு என "ஒரு இந்தியா, ஒரே உரிமம்" என்ற திட்டத்தைக் கொண்டுவந்தது. அதன்படி அகில இந்திய அளவில் உரிமம் வழங்கப்பட்டது.
"அதாவது ஒரு வாகனத்தை வாங்கும்போது எந்த மாநிலத்தில் பதிவுசெய்கிறோமோ அங்கு முதன்மை வரியைச் செலுத்த வேண்டும். அதற்குப் பிறகு மத்திய அரசின் அகில இந்திய அளவிலான உரிமத்திற்காக 90,000 ரூபாய் செலுத்த வேண்டும். ஆனால், இதனை தமிழ்நாடு அரசு ஏற்கவில்லை. வெளிமாநில பேருந்துகள் தமிழகத்திற்கு வந்தால், அவர்கள் பெர்மிட் எடுக்க வலியுறுத்தப்பட்டனர். இந்தப் பிரச்னை நீண்ட காலமாக இருந்துவந்தது.
இந்த நிலையில்தான், கேரளாவும் கர்நாடகாவும் இதைச் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். கர்நாடக மாநிலத்தில் உரிமத் தொகை மட்டுமல்லாமல், அபராதத்தையும் சேர்த்து மொத்தமாக ஒரு பேருந்துக்கு 1.96 லட்ச ரூபாய் கட்டச் சொல்கிறார்கள். ஒரு காலாண்டிற்கு இந்தக் கட்டணத்தைக் கட்ட வேண்டும். இவ்வளவு பணத்தைக் கட்டி பேருந்துகளை இயக்க முடியாது. தமிழ்நாடு பிற மாநில பேருந்துகளை உரிமம் பெறச் சொன்னதால்தான் அந்த மாநிலங்கள் இங்கிருந்து செல்லும் பேருந்துகளிடம் உரிமக் கட்டணமும் அபராதமும் வசூலிக்கிறார்கள். ஆகவே, தமிழ்நாடு அரசு தனது நடவடிக்கையை நிறுத்த வேண்டும் எனக் கேட்டிருக்கிறோம். அதுவரை பேருந்துகள் வெளி மாநிலங்களுக்கு இயங்காது" என்கிறார் புதுச்சேரி பஸ் ஆப்பரேட்டர்ஸ் அசோசியேஷனின் தலைவரான மதன்.
புதுச்சேரியிலிருந்து தினமும் பிற மாநிலங்களுக்கு 130 ஆம்னி பேருந்துகள் செல்கின்றன. இவையனைத்தும் திங்கட்கிழமை மாலையுடன் நிறுத்தப்படும் என்கிறார் அவர்.
அதே நேரத்தில் தமிழ்நாட்டிலிருந்து பிற மாநிலங்களுக்கு சுமார் 600 ஆம்னி பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்தப் பேருந்துகளும் திங்கட்கிழமை மாலையுடன் நிறுத்தப்படும் என அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவரான ஏ. அன்பழகன் தெரிவித்தார்.
இந்த நிலையில், இது தொடர்பாக அரசுடன் பேச்சு வார்த்தைகள் நடந்துவருவதாக அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் மற்றும் இயக்குநர்கள் அசோசியேஷனின் தலைவர் ஜெயம் பாண்டியன் தெரிவித்திருக்கிறார்.
இந்த நிலையில், திங்கட்கிழமையன்று மாலையில் தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கருடன் இந்த விவகாரம் தொடர்பாக பேச்சு வார்த்தை நடைபெற்றது.அதில் முடிவுகள் ஏதும் எட்டப்படவில்லை.
"அமைச்சர் எங்கள் தரப்பைக் கேட்டுக்கொண்டார். நாளை போக்குவரத்துத் துறை ஆணையருடன் பேச்சு வார்த்தை நடத்தும்படி தெரிவித்திருக்கிறார். இதனால், ஏற்கனவே அறிவித்தபடி வெளிமாநிலங்களுக்குச் செல்லும் பேருந்துகள் இயங்காது" என பிபிசியிடம் தெரிவித்தார் ஏ. அன்பழகன்.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
முக்கிய செய்திகள்
சிறப்புச் செய்திகள்
மனதை தொட்டவை
தகவல் இல்லை