சமையல், பாரம்பரிய மருத்துவத்தில் சேர்க்கப்படும் பூண்டில் என்ன இருக்கிறது?
பூண்டு... சமையலிலும், மருத்துவத்திலும் ஒரு முக்கிய இடத்தை பெற்றுள்ளது.
சரி, இது எப்படி உலகம் முழுவதும் பரவியது? இதன் வரலாறு என்ன? பூண்டு உண்மையில் மனித உடலுக்கு நல்லதா? இந்த காணொளியில் தெரிந்துக்கொள்ளலாம்.
முதலில் மத்திய ஆசியாவில் தோன்றிய பூண்டு, மக்கள் இடம்பெயர்ந்தபோது, ஐரோப்பா, ஆப்ரிக்கா மற்றும் அமெரிக்காவுக்கு பரவியது.
இன்று உலகளவில் பூண்டை அதிகம் உற்பத்தி செய்யும் நாடாக சீனா உள்ளது.
பண்டைய மெசபடோமியா, எகிப்து, கிரீஸ், ரோம், சீனா, இந்தியா போன்ற பல நாகரிகங்களில் பூண்டு மிகவும் பிரபலமாக இருந்தது.
எகிப்தில், புகழ்பெற்ற துட்டன்காமூனின் கல்லறையில் பூண்டு கிடைத்தது, அவரைப் பாதுகாக்கும் சக்தி பூண்டுக்கு உண்டு என்றும் அவர்கள் நம்பினர்.
"உலகின் பழமையான சமையல் செய்முறை ஒரு மெசபடோமிய குழம்பு. அது 3,500 ஆண்டுகள் பழமையானது. அதில் இரண்டு பூண்டு பற்கள் பயன்படுத்தப்பட்டிருந்தன" என 'Garlic: An Edible Biography'என்ற புத்தகத்தின் ஆசிரியரான ராபின் செர்ரி (Robin Cherry) கூறுகிறார்.
பண்டைய கிரேக்க மருத்துவரும் தத்துவஞானியுமான ஹிப்போகிரட்டீஸ் தனது மருத்துவ சிகிச்சைகளில் பூண்டைப் பயன்படுத்தியதாக செர்ரி குறிப்பிடுகிறார். அரிஸ்டாட்டில், அரிஸ்டோபேன்ஸ் போன்ற பல சிந்தனையாளர்களும் எழுத்தாளர்களும் பூண்டின் மருத்துவ பயன்களைப் பற்றி குறிப்பிட்டுள்ளனர்.
ரோமானிய வீரர்கள் பூண்டு தங்களுக்கு தைரியமும் வலிமையும் தருவதாக நம்பினர். அவர்கள் யுத்தங்களில் வெற்றி பெற்று புதிய பகுதிகளைக் கைப்பற்றிய போது, பூண்டை ஐரோப்பா முழுவதும் பரவலாக்கினர்.
பூண்டு உணவாகவும் மருந்தாகவும் பயன்பட்டாலும், ஒரு காலத்தில் அது ஏழைகளால் மட்டுமே பயன்படுத்தப்பட்டது.
"அது ஏழைகள் உண்ணும் உணவாகவே கருதப்பட்டது." என்று கூறிய ராபின் செர்ரி (Robin Cherry), "எகிப்தில் பிரமிடுகள் கட்டிய அடிமைகளுக்கும், ரோமானிய மாலுமிகளுக்கும் வலிமை தருவதற்காக பூண்டை கொடுத்தனர். அது ஏழைகள் சாப்பிடும் உணவாகவே நீண்ட காலம் பார்க்கப்பட்டது." என்றும் விளக்குகிறார்.
ஆனால், ஐரோப்பாவில் கலை, அறிவியல் வளர்ந்த காலமான 14 முதல் 16-ஆம் நூற்றாண்டு வரையிலான மறுமலர்ச்சி காலத்தில் பூண்டின் மதிப்பு மாறியது.
"பிரான்சின் நான்காம் ஹென்றி பூண்டால் ஞானஸ்நானம் செய்யப்பட்டு, அதை அதிகம் உண்டார். இது பூண்டை பிரபலப்படுத்தியது. 19-ஆம் நூற்றாண்டில் பிரிட்டனிலும் பூண்டு பிரபலமானது," என்கிறார் செர்ரி.
உலகில் தற்போது 600-க்கும் மேற்பட்ட பூண்டு வகைகள் உள்ளன. உஸ்பெகிஸ்தான், ஜார்ஜியா போன்ற இடங்களில் விளையும் சில வகைகள் சமீபத்தில் தான் உலக சந்தையில் கிடைக்கத் தொடங்கியுள்ளன.
சமையலில் முக்கியப் பங்கு வகிப்பதைத் தாண்டி, பூண்டு சளியின் அறிகுறிகளைக் குறைக்கவும் பயன்படுகிறது. ரத்த அழுத்தம், கொழுப்பு, புற்றுநோய் ஆகியவற்றில் பூண்டின் தாக்கத்தை ஆய்வு செய்ய பல மருத்துவப் பரிசோதனைகள் நடந்துள்ளன. ஆனால் அதில் வெளியான முடிவுகள் மாறுபட்டதாக உள்ளன.
உதாரணமாக, இரானில் நடந்த சிறிய ஆய்வு, பூண்டு மற்றும் எலுமிச்சை சாறு ஆறு வாரங்களில் கொழுப்பையும் ரத்த அழுத்தத்தையும் குறைத்ததாகக் கூறுகிறது. ஆனால், ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் 200 நபர்களிடம் ஆறு மாதங்களுக்கு நடந்தப்பட்ட ஆய்வில் கொழுப்பு குறைவதற்கான குறிப்பிடத்தக்க மாற்றம் எதுவும் காணப்படவில்லை.
2014-இல் ஆஸ்திரேலியாவின் சிட்னி பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு, பூண்டு வலுவான நுண்ணுயிர், வைரஸ் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகளைக் கொண்டிருப்பதை உறுதிப்படுத்தியது.
"பூண்டில் அதிக அளவு பொட்டாசியம், பாஸ்பரஸ், துத்தநாகம், கந்தகம் ஆகியவை இருக்கின்றன. மெக்னீசியம், மாங்கனீசு, இரும்பு போன்றவை மிதமான அளவில் உள்ளன. உண்மையில் இது ஒரு அதிசய காய்கறி," என்கிறார் பிரிட்டிஷ் டயட்டெடிக் அசோசியேஷனின் செய்தித் தொடர்பாளரும் குழந்தை மருத்துவ உணவியல் நிபுணருமான பஹீ வான் டி போர்.
"பூண்டில் 'அல்லிசின்' என்ற கந்தகம் கூட்டு பொருள் உள்ளது. இதில், நம் குடல் மிகவும் விரும்பும் ப்ரீபயாடிக் நார்ச்சத்து நிறைந்துள்ளது. அதனால் குடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அதில் நுண்ணுயிர் எதிர்ப்பு தன்மையும் உள்ளது." என்றார்.
அதேபோல் பூண்டின் நார்ச்சத்து குடல் பாக்டீரியாவை வளர்க்க உதவுகிறது, மலச்சிக்கல், வயிறு வீக்கம் ஆகியவற்றையும் குறைக்கலாம் என்றும் அவர் கூறுகிறார்.
தினமும் ஒன்று அல்லது இரண்டு பூண்டு பற்களை பச்சையாக சாப்பிடுவது பாதுகாப்பானது.
ஆனால், American Family Physician என்ற மருத்துவ இதழில் வெளியாகியுள்ள அறிக்கையின்படி, பூண்டை அதிகமாக, குறிப்பாக வெறும் வயிற்றில் சாப்பிட்டால், வயிற்றுப் பிரச்னைகள், வாயு பிரச்னை மற்றும் குடலில் உள்ள நல்ல பாக்டீரியாவில் மாற்றம் ஏற்படலாம்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



