அமெரிக்காவுக்கு எதிராக இந்தியா, ரஷ்யா, சீனா கூட்டணி மீண்டும் உயிர் பெறுகிறதா?
பட மூலாதாரம், EPA
- எழுதியவர், அலெக்ஸி கல்மிகோவ்
- பதவி, பிபிசி நியூஸ் ரஷ்யன்
- வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
புவிசார் அரசியலில் ஒரு மாதம் என்பது மிக நீண்ட காலமாகும்.
விளாடிமிர் புதின் மீண்டும் சீனாவில் உள்ளார், ஆனால் இப்போது ஒரு வேறுபாடு உள்ளது. யுக்ரேன் படையெடுப்புக்கு பிறகு முதல் முறையாக, ரஷ்ய அதிபர் தனது முக்கிய கூட்டாளியை சந்திக்கிறார். மேற்கத்திய நாடுகளின் தடைகளால் தனிமைப்படுத்தப்பட்டு, சீன அதிபர் ஷி ஜின்பிங்கிற்கு பணிந்து போகும் நபராக இல்லாமல், உலகின் முன்னணி பொருளாதார மற்றும் ராணுவ சக்தியும், சீனாவின் முக்கிய போட்டியாளருமான அமெரிக்காவின் அதிபருடன் சமமாக பேசும் ஒரு உலகத் தலைவராக சந்திக்கிறார்.
டிரம்ப் ரஷ்ய அதிபரை அமெரிக்க மண்ணில் வரவேற்றார். யுக்ரேன் மீது குண்டு வீச வேண்டாம் என்ற டிரம்பின் கோரிக்கையையும், ரஷ்யாவுக்கு எதிராக புதிய தடைகள் விதிக்கப்படும் என்ற மிரட்டல்களை கைவிடவும் அவரை சம்மதிக்க வைத்த புதின் அலாஸ்காவிலிருந்து திரும்பியுள்ளார், அலாஸ்காவிலிருந்து வெற்றியுடன் திரும்பிய புதினுக்கு இந்த சீன பயணம் மற்றொரு வெற்றியாக இருக்கும்.
சீனாவில், புதினுக்கு சிறந்த வரவேற்பு இருக்கும் - ஒரு டஜனுக்கும் மேற்பட்ட பிராந்திய தலைவர்கள் சீன நகரமான தியான்ஜினில் இரண்டு நாள் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) உச்சி மாநாட்டிற்காக கூடினார்கள்.
மேற்கத்திய எதிர்ப்பு வார்த்தைகளுக்கு அந்நியரல்லாதவரான வடகொரிய தலைவர் கிம் ஜாங்-உன் மற்றும் சீனா மற்றும் அமெரிக்காவுடன் மிகவும் சிக்கலான உறவை கொண்டிருக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோதி ஆகியோரும் சீனாவில் உள்ளனர்.
ஆனால் இது வெறும் தொடக்கம்தான்.
புதன்கிழமை பெய்ஜிங்கில், பல தலைவர்கள், இரண்டாம் உலகப் போர் முடிவடைந்ததின் 80வது ஆண்டு விழாவைக் குறிக்கவும், "ஜப்பானிய ஆக்கிரமிப்புக்கு எதிரான சீன மக்களின் எதிர்ப்பு போரில் வெற்றி மற்றும் உலக ஃபாசிச எதிர்ப்பு போரில் பெற்ற வெற்றி"யை கொண்டாடவும் ஒரு அணிவகுப்பில் ஒன்றாக கலந்து கொள்வார்கள்.
எனவே, இந்த வாரம் சீனாவில் நடக்கும் நிகழ்வுகள் உலகளாவிய அமெரிக்க எதிர்ப்பு கூட்டணி வலுவடைவதன் சமிக்ஞையாக உள்ளதா?
உலக விவகாரங்களில் மேற்கத்திய செல்வாக்கை எதிர்கொள்ளும் நோக்கில் உருவான ரஷ்யா - இந்தியா - சீனா (ஆர்ஐசி - RIC) குழு கடந்த 5 ஆண்டுகளாக செயலற்ற நிலையில் இருந்தது. அமெரிக்க அதிபர் டிரம்பின் வரி யுத்தத்திற்கு மத்தியில் இந்தியா, ரஷ்யா, சீனா கூட்டணி மீண்டும் விழித்தெழுகிறதா?
டிரம்பால் புதினையும் ஜின்பிங்கையும் பிரிக்க முடியாது
ரஷ்யாவிற்கும் சீனாவிற்கும் இடையேயான "எல்லையற்ற நட்பு" மேலும் வலுவடைவதை மேற்குலகிற்கு காட்டவும், தங்களுக்கு இடையே பிளவை ஏற்படுத்தும் அமெரிக்காவின் முயற்சிகள் தோல்வியடையும் என்பதை நிரூபிப்பதற்காகவுமே புதினின் அசாதாரணமான நீண்ட சீனப் பயணம் திட்டமிடப்பட்டிருப்பதாக நிபுணர்கள் க்ருதுகின்றனர்.
டிரம்ப் யுக்ரேனை புதினிடம் ஒப்படைத்து, தடைகளை நீக்கினாலும், ரஷ்யா சீனாவை விட்டு விலகாது என்று அவர்கள் கூறுகின்றனர்.
1970களில், அப்போதைய அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் நிக்ஸனின் கீழ் அமெரிக்க வெளியுறவு செயலாளர் ஹென்றி கிஸ்ஸிஞ்சர் சோவியத் செல்வாக்கிலிருந்து சீனாவை வெளியே இழுக்க முடிந்ததை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். ஆனால் அப்போது சீனாவுக்கும், ரஷ்யாவுக்கும் இடையேயான உறவுகள் ஏற்கனவே பதற்றமாக இருந்தன. இப்போது நிலைமை வேறுபட்டது.
"சீனா மீது வர்த்தக அழுத்தத்தை அதிகரிப்பதன் மூலம், டிரம்ப் நிர்வாகம் ரஷ்ய - சீன கூட்டணியை மேலும் வலுப்படுத்துகிறது. இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகளை பலவீனப்படுத்த, கிஸ்ஸிஞ்சர் செய்ததை மீண்டும் நிகழ்த்தும் முயற்சிகள் உறுதியான பலன்களை அளிக்கவில்லை," என்று ஆசிய சமூக கொள்கை நிறுவனத்தில்(the Asia Society Policy Institute) சீன-ரஷ்ய உறவுகள் நிபுணராகவும், ரஷ்யா, தஜிகிஸ்தான் மற்றும் மால்டோவாவில் பிரெஞ்சு தூதராக பணியாற்றியவருமான பியர் ஆன்ட்ரியூ கூறுகிறார்.
"யுக்ரேன் போரை முடிவுக்கு கொண்டுவந்து ரஷ்யா மீதான சில தடைகளை நீக்குவதன் மூலம் ரஷ்யாவுக்கும் சீனாவுக்கும் இடையே பிளவை ஏற்படுத்துவதுதான் அமெரிக்காவின் உத்தியாக இருந்தால், இந்த கூட்டாண்மையின் ஆழத்தையும் நுட்பத்தையும் அமெரிக்கா குறைத்து மதிப்பிடுகிறது," என்று ஐரோப்பிய கொள்கை பகுப்பாய்வு மையத்திற்கு(Center for European Policy Analysis) எழுதிய ஒரு கட்டுரையில் பெயரிடப்படாத ரஷ்ய-சீன உறவுகள் நிபுணர் ஒருவர் எழுதுகிறார்.
பட மூலாதாரம், Reuters
ரஷ்ய ஆற்றல் வளங்களை வாங்கும் முக்கிய நபராகவும், மேற்கத்திய நிறுவனங்கள் வெளியேறிய பிறகு ரஷ்யாவிற்கு கார்கள் மற்றும் பிற பொருட்களின் முக்கிய சப்ளையராகவும் சீனா மாறியுள்ளது. ஆனால் யுக்ரேன் ஆக்கிரமிப்பு, ரஷ்ய-சீன நட்பின் கருத்தியல் பிணைப்புகளையும் வலுப்படுத்தியுள்ளது.
"இரு நாடுகளும் மேற்கத்திய தாராளவாதத்தை எதிர்க்கின்றன மற்றும் அமெரிக்காவின் 'ஆதிக்கத்திற்கு' சவால் விடுகின்றன. இரு நாடுகளும் அணு ஆயுத சக்திகளாகவும், ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினர்களாகவும் உள்ளன. அவற்றின் உத்தி நலன்கள் ஒத்துப்போகின்றன," என்று ஆன்ட்ரியூ விளக்குகிறார்.
"பொருளாதார ரீதியாக, அவை ஒன்றையொன்று பூர்த்தி செய்கின்றன. ரஷ்யா ஒரு மூலப்பொருள் சக்தியாகவும், சீனா ஒரு தொழில்துறை மற்றும் தொழில்நுட்ப சக்தியாகவும் உள்ளது," என்று அவர் எழுதியுள்ளார்.
ஆனால், அவர்களின் தலைவர்களுக்கு இடையேயான தனிப்பட்ட நல்ல உறவுகளே முக்கியமானவை என்று அவர் நம்புகிறார்.
புதினும் ஜின்பிங்கும் பல விஷயங்களில் ஒத்துப்போகின்றனர். அவர்கள் ஒரே வயதுடையவர்கள் (72), இருவரும் சோவியத் கால கம்யூனிசத்தின் கீழ் வளர்ந்தவர்கள், மற்றும் நீண்ட காலமாக அதிகாரத்தில் உள்ளனர். இருவரும் சர்வாதிகார அமைப்புகளை உருவாக்கியுள்ளனர் மற்றும் எதிர்ப்புகளை சகித்துக் கொள்பவர்களாக தெரியவில்லை.
2022 யுக்ரேன் படையெடுப்புக்கு முன்பு, புதின் ஜின்பிங்குடன் "எல்லையற்ற நட்பு மற்றும் தடையற்ற ஒத்துழைப்பு" பற்றிய ஒரு அறிக்கையில் கையெழுத்திட்டார். ஜின்பிங், புதினை "அன்பான நண்பர்" என்று அழைக்கிறார். அவர் மற்ற எந்த உலகத் தலைவரையும் விட புதினை 40 முறைக்கு மேல் சந்தித்துள்ளார்.
ஆனால் இந்த பயணம் தனித்துவமானது.
சீனாவும் புதினை நெருக்கமாக வைத்திருப்பதன் மூலம் பயனடைகிறது மற்றும் அவர் மீண்டும் மேற்கு நோக்கி திரும்புவதைத் தடுக்கிறது, ஆனால் ரஷ்யா வலுவடைவதையும் சீனா விரும்பவில்லை என்று வாஷிங்டனில் உள்ள புரூக்கிங்ஸ் நிறுவனத்தில் (Brookings Institution) சீன வெளியுறவுக் கொள்கை மற்றும் அமெரிக்க-சீன உறவுகள் நிபுணரான பாட்ரிசியா கிம் கூறுகிறார்.
"மேற்கத்திய நாடுகளுக்கு எதிராக நிற்கும் அளவுக்கு வலிமையான, ஆனால் சீனாவின் செல்வாக்கிற்கு உட்பட்டிருக்கும் அளவுக்கு பலவீனமான ஒரு ரஷ்யா என்பதுதான் சீனாவுக்கு சிறந்த முடிவாக இருக்கும்," என்று கிம் கூறுகிறார்.
"ரஷ்யா சீனாவுக்கு ஒரு பயனுள்ள கூட்டாளியாகும். இது உள்நாட்டிலும் மத்திய ஆசிய பிராந்தியம் முழுவதிலும் ஸ்திரத்தன்மையை பராமரிக்க ஜின்பிங்கிற்கு உதவுகிறது," என்று ஆன்ட்ரியூ விளக்குகிறார்.
"இது தெற்கு அரைக்கோளத்தில் இருந்து ஆதரவை திரட்டவும், மேற்கத்திய உலக ஒழுங்கு மாதிரிக்கு மாற்றாக ஒரு மாதிரியை மேம்படுத்தவும் சீனாவுக்கு உதவுகிறது."
மோதியின் வரவு
பட மூலாதாரம், Pablo Porciuncula/AFP via Getty Images
ஆர்ஐசி (RIC) மும்மூர்த்திகளில் மூன்றாவது உறுப்பினரான இந்தியாவுக்கு ரஷ்யா மற்றும் அமெரிக்காவுடனான உறவு புயல் போன்றதாக இருந்ததால், இந்த கூட்டணியின் மறுமலர்ச்சிக்கான எந்தவொரு நம்பிக்கையையும் கவிழ்க்கக் கூடும்.
ஜின்பிங்கும், நரேந்திர மோதியும் தியான்ஜினில் எஸ்சிஓவின் போது சந்தித்தது, ஏழு ஆண்டுகளில் மோதி முதல் முறையாக சீனாவுக்கு சென்றது ஆகிய இரண்டுமே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. 2020ஆம் ஆண்டு கால்வான் பள்ளத்தாக்கில் நடந்த எல்லை மோதல்களுக்குப் பிறகு இரு நாடுகளும் அரிதாகவே பேசியுள்ளன.
ஆனால் இந்தியாவின் பொருளாதாரத்தை சூழ்ந்துள்ள இருண்ட மேகங்கள் நிலைமைகளை மாற்றியுள்ளன. இந்தியா ரஷ்ய எண்ணெயை வாங்குவதை தொடர்ந்ததற்கு தண்டனையாக இந்திய பொருட்களுக்கு கடுமையான வரிகளை டிரம்ப் விதித்துள்ளார், இது இந்த முன்னாள் எதிரிகளை(இந்தியா - சீனா) நெருக்கமாக்கியுள்ளதாக தோன்றுறது.
சீனாவும் இந்தியாவும் பகைவர்களாக இல்லாமல் கூட்டாளிகளாக இருக்க வேண்டும் என்று ஜின்பிங், நரேந்திர மோதியிடம், கூறினார். அதே சமயம் இரு நாடுகளுக்கு இடையே இப்போது "அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையான சூழல்" இருப்பதாக நரேந்திர மோதி கூறினார்.
இரு நாடுகளும் மிக அதிக மக்கள்தொகை கொண்டவை மட்டுமல்லாமல், உலகின் மிகப்பெரிய பொருளாதாரங்களை கொண்டுள்ளன.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு எல்லை பிரச்னை காரணமாக நிறுத்தப்பட்ட இந்தியா-சீனா இடையேயான விமான சேவை மீண்டும் தொடங்கும் என நரேந்திர மோதி அறிவித்தார், ஆனால் இதற்கான கால வரம்பு நிர்ணயிக்கப்படவில்லை.
"இரு தரப்பினரும் நமது உறவை ஒரு உயர்ந்த உத்தி பார்வையிலிருந்து மற்றும் நீண்ட கால கண்ணோட்டத்தில் அணுகி கையாள வேண்டும்" என்றும், "இரு தரப்பினருக்கும் நண்பர்களாக இருப்பது சரியான தேர்வு" என்று ஜின்பிங் கூறினார்.
கூட்டணிகளின் எதிர்காலத்திற்கு இது என்ன செய்யும்?
ரஷ்யாவும் சீனாவும் பார்க்க விரும்புவதாக கூறியுள்ள ஆர்.ஐ.சி. கூட்டணி திறம்பட மறுமலர்ச்சி பெற்றால், அது பிரிக்ஸ் (2006இல் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா இணைந்து உருவாக்கியது) போன்ற பிற கூட்டணிகளுடன் இணைந்து அமெரிக்காவின் வளர்ந்து வரும் செல்வாக்கை எதிர்க்கலாம்.
இருப்பினும், டிரம்ப் வரிகளின் பொருளாதார நிஜங்களை மீறி, இந்தியா மிகவும் நுட்பமான சமநிலைபடுத்தலை மேற்கொள்ள வேண்டியுள்ளது. சீனாவுடனான ஆழமான நம்பிக்கை சார்ந்த பிரச்னைகளையும் இந்தியா எதிர்கொள்ள வேண்டும் .
இந்தியா ஒரு சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையை பின்பற்ற விரும்புவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். சீனாவுடனான எல்லை மோதல்களின் நினைவுகள் இன்னும் பசுமையாக உள்ளன. இந்தியாவின் பழைய எதிரியான பாகிஸ்தானுடனான சீனாவின் நெருக்கமான உறவு குறித்து இந்தியா கவலைப்படுகிறது.
இந்தியாவை அமெரிக்காவிற்கு நெருக்கமாக்கிய சிக்கலான பல தசாப்தங்களின் ராஜதந்திரத்தை ஒருவேளை கைவிட வேண்டியிருக்கும். அமெரிக்க எதிர்ப்பு கூட்டணியில் முழுமையாக இணைவதற்கு இது ஒரு நாடு செலுத்தும் மிக உயர்ந்த விலையாக இருக்கலாம்.
பட மூலாதாரம், Reuters
ஆனால் இந்த வாரத்தின் தோற்றங்கள் மறுக்க முடியாதவை.
பெய்ஜிங்கில் நடைபெறவுள்ள ராணுவ அணிவகுப்பில் புதின், கிம், இரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட இந்த நிகழ்வில் சீன ராணுவத்தின் தலைசிறந்த 45 படைப்பிரிவுகள் உட்பட ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தியானன்மென் சதுக்கத்தில் அணிவகுப்பு நடத்துவார்கள்.
"வரலாற்றில் முதல் முறையாக சீனா, ரஷ்யா, இரான் மற்றும் வடகொரியாவின் தலைவர்கள் ஒரே இடத்தில் செப்டம்பர் 3-ஆம் தேதி பெய்ஜிங்கில் நடைபெறும் ராணுவ அணிவகுப்பில் கூடுவார்கள்.
"இந்த கூட்டம் 'சர்வாதிகார அச்சின்' முதல் உச்சி மாநாடாக இருக்குமா?" என்று ஆசிய சமூக கொள்கை நிறுவனத்தில்(Asia Society Policy Institute) சீன நிபுணரான நீல் தாமஸ் கேட்கிறார்.
அதன் பங்கேற்பாளர்களுக்கு வெவ்வேறு இலக்குகள் உள்ளதாலும், அவர்கள் ஒருவரையொருவர் நம்பவில்லை என்பதாலும் இந்த ஒருங்கிணைப்பு நீண்ட காலம் நீடிக்க வாய்ப்பில்லை என்று அவர் கூறுகிறார்.
"ஆனால் புதின், பெஷெஷ்கியன் மற்றும் கிம்மின் பங்கேற்பு உலகின் முன்னணி சர்வாதிகார சக்தியாக சீனாவின் பங்கை அடிக்கோடிட்டு காட்டுகிறது," என்று அவர் முடிக்கிறார்.
எனவே, இந்த வாரம் சீனாவில் நடக்கும் நிகழ்வுகள், அமெரிக்காவை எதிர்ப்பதில் எஸ்சிஓ, ஆர்.ஐ.சி. மற்றும் பிரிக்ஸ் போன்ற கூட்டணிகளின் பங்கை காட்டுவதாக இல்லாமல், எதிர்காலத்தில் இத்தகைய கூட்டணிகளின் மையத்தில் சீனா இருக்கும் என்ற நிலையை உறுதிப்படுத்தும் சக்திவாய்ந்த காட்சிகளாக இருக்கலாம்.
பிபிசி குளோபல் ஜர்னலிசம் மற்றும் பிபிசி நியூஸ் கூடுதல் செய்தி சேகரிப்புடன்
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
முக்கிய செய்திகள்
சிறப்புச் செய்திகள்
மனதை தொட்டவை
தகவல் இல்லை