கரும்பு வெட்டும் பெண்களின் துயரம்: இளம் வயதிலேயே கருப்பையை அகற்றுவது ஏன்?

- எழுதியவர், பிரஜக்தா துலாப்
- பதவி, பிபிசி செய்தியாளர்
- வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்
கடந்த 10 ஆண்டுகளாக பீட் பகுதியில் உள்ள பெண்கள் தங்களின் கருப்பையை நீக்கிக்கொள்ளும் பிரச்னைதான் பேசுபொருளாக உள்ளது. கருப்பை நீக்க அறுவை சிகிச்சைக்கு அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளையும் மீறி அவ்வப்போது இதுபற்றி சில புள்ளிவிவரங்களும் அறிக்கைகளும் வெளியாகின்றன. இதில் மாவட்ட நிர்வாகத்தின் அறிக்கைகளும் அடங்கும்.
ஆனால் உண்மையில் பீட் பகுதியில் உள்ள பெண்களின் உடல்நலன் எப்படி உள்ளது? கரும்பு ஆலையில் வேலைசெய்யும் பெண்கள் ஏன் இன்னும் உடல்நலப் பிரச்னையை எதிர்கொள்கின்றனர்? இதைக் கண்டறிய பிபிசி மராத்தி களத்திற்கு சென்றது.
பீட் பகுதியைச் சேர்ந்த கவிதா மாதவிடாயின் போது கடுமையான ரத்தப்போக்கால் அவதிப்படுக் கொண்டிருந்தார். அவருக்கு உள்ளூர் அறுவை சிகிச்சை மருத்துவரிடம் இருந்து தனது கருப்பை நீக்குவதற்கான hysterectomy எனப்படும் அறுவை சிகிச்சை மேற்கொள்ள அனுமதி வேண்டும். அப்பகுதியில் பெண்களுக்கு கருப்பை நீக்க அறுவை சிகிச்சை செய்ய பல கட்டுப்பாடுகள் உள்ளன.
உயிருக்கு ஆபத்து வரலாம் என்ற சூழலில் மட்டுமே 40 வயதுக்கு குறைவான பெண்களுக்கு கருப்பை நீக்க அறுவை சிகிச்சை செய்ய சுகாதார நிர்வாகம் அனுமதித்துள்ளது. 2019ஆம் ஆண்டு முதல் இந்த கட்டுப்பாடுகள் உள்ளன.
தேவையற்ற கருப்பை நீக்கத்தை தவிர்க்க சுகாதாரத்துறை அமைச்சகமும் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
"கருப்பை நீக்கம் என்பது கடைசி தீர்வுதானே தவிர முதற்கட்ட சிகிச்சை அல்ல" என அமைச்சகம் தெளிவாக எடுத்துரைத்துள்ளது.
"தொலைதூர பகுதிகள், குறைந்த படிப்பறிவு மற்றும் பொருளாதாரத்தில் நலிவடைந்த பெண்கள் வசிக்கும் பகுதிகளில் இதுபோன்ற அறுவை சிகிச்சை செய்யப்படுவது அதிகம் உள்ளது" எனவும் கூறப்படுகின்றன.
ஆரம்பநிலை சுகாதாரத்தை வலுப்படுத்துதல், சிகிச்சைக்கான தேர்வுகள் அளிப்பது, மாவட்ட மற்றும் மாநில அளவில் கண்காணிப்பு குழு அமைத்தல், மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்ற வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.
நாட்டின் மற்ற பகுதிகளை விட கரும்பு ஆலை தொழிலாளர்கள் இருக்கும் இடமாக அறியப்படும் பீட் பகுதியில் அதிக கருப்பை நீக்க அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுவது தெரிந்ததும் இந்த வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டன. இதனால் தற்போது கருப்பை நீக்க அறுவை சிகிச்சைகள் தொடர்பாக தனியார் மருத்துவமனைகளும் வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட வேண்டியது கட்டாயம் ஆகும்.
2018ஆம் ஆண்டு முதலே பிபிசி மராத்தி இப்பிரச்னையை தொடர்ந்து கவனித்து வருகிறது.
40 - 50 கிலோ எடையை சுமக்கும் பெண்கள்

கவிதாவுக்கு 29 வயதாகிறது. நாங்கள் அவரை சந்திக்கும்போதுதான் அவர் கருப்பை நீக்கம் செய்திருந்தார். அக்டோபர் மாதத்தில் மீண்டும் கரும்பு அறுவடை செய்ய தயாராகிக் கொண்டிருந்தார்.
கடந்த 15 ஆண்டுகளாக கரும்பு அறுவடைக்காக கவிதா, அவ்வப்போது குடிபெயர்ந்துகொண்டே இருக்கிறார். தசராவிற்குப் பிறகு அவர் கர்நாடகாவுக்கு கரும்பு அறுவடைப் பணிக்கு செல்வார். பிப்ரவரி - மார்ச் மாதங்களில் தனது கிராமத்திற்கு திரும்புவார்.
தனக்கு 12 வயதில் திருமணமாகிவிட்டதாக கவிதா கூறுகிறார். படிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தபோதிலும் படிப்பை கைவிட வேண்டிய சூழல் ஏற்பட்டதாக கூறினார். அவரின் பெற்றோரும் கரும்பு வெட்டும் தொழிலாளர்களாக வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர்.
சிறுவயதிலேயே திருமணமான பிறகு தனது கணவருடன் சேர்ந்து கரும்பு வயல்களில் வேலை செய்யத் தொடங்கினார். தனக்கு 20 வயதாகும் முன்பே 2 குழந்தைகளுக்கு தாயாகியுள்ளார்.
வெளிநாட்டில் வயலில் இருந்தபோது முதல் குழந்தையை பெற்றெடுத்தார். சிறுவயதில் குழந்தை பெற்றுக்கொண்டதில் இருந்து, அடிக்கடி நோய்வாய்பட்டு வந்தார்.
இரவு நேரங்களில் கரும்புகளை ஒன்றுசேர்த்து கட்டி லாரிகளில் ஏற்றுவார்கள். ஒவ்வொரு பண்டலும் 30 - 50 கிலோ எடை இருக்கும். இதை சுமந்துகொண்டு கட்டைகளில் நடக்க வேண்டும்.
சிறுநீர்ப் பையில் ஏற்படும் நோய்..
அறுவை சிகிச்சைக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு வரை மாதவிடாய் மற்றும் கருப்பை தொடர்பான பிரச்னைக்கு சிகிச்சை பெற்று வந்தார்.
"நான் காசநோயால் பாதிக்கப்பட்டிருந்தேன். என் உடலில் பயங்கரமான வலி இருந்தது. ஒன்றரை ஆண்டுகளாக மருத்துவருக்கே நிறைய செலவு செய்தேன். என்னால் சாப்பிடக் கூட முடியாத அளவிற்கு என் வயிறு வலித்தது. நீண்ட நேரம் தூங்குவேன். ஆனால் எப்படியோ கரும்பு வெட்டும் வேலைக்கு எழுந்து செல்ல முடிந்தது" என்றார் அவர்.
"விடுப்பு எடுக்க வேண்டும் என நினைத்தாலும் அது முடியாது. அதற்கு அனுமதி கிடையாது"
"அதிக சுமைகளை தூக்கக் கூடாது என்றும் குனிந்து வேலை பார்க்கக் கூடாது என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தினார்கள். ஆனால் எனக்கு வேறு வழி இல்லை. வேலை செய்தாக வேண்டிய கட்டாயம். நான் சம்பளத்தை முன்கூட்டியே பெற்றிருந்தேன். அதனால் நான் வேலை செய்தாக வேண்டும்" என்றார்.
தொழிலாளர்கள் கரும்பு வெட்டச் செல்லும் முன்பே ஒப்பந்ததாரரிடம் சம்பளத்தை முன்கூட்டியே பெற்றுக்கொள்வார்கள். இந்த பணப் பரிமாற்றம் ஒப்பந்ததாரர் மற்றும் அறுவடை செய்பவர்களுக்கு இடையே நடக்கும்.
கடந்த 10 முதல் 12 ஆண்டுகளாக கவிதாவின் சோகக் கதை தொடர்கிறது.
"கரும்புகளை ஒன்றாக சேர்த்துக் கட்டி, லாரியில் ஏற்றி, அனைத்து வேலைகளையும் செய்ய வேண்டும். 40 கிலோ எடையை தூக்கிக் கொண்டு செல்லும்போதே நான் களைப்பாகி விடுவேன். நிறைய முறை மேலிருந்து கீழே விழுந்துள்ளேன்"
"நிறைய சமயங்களில் பயணத்தின் போது மயக்கடைந்ததால் நான் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளேன். கடினமான பளுவை தூக்கும்போது, அதிக ரத்தப்போக்கு ஏற்படும். ஒன்றரை ஆண்டுகளாக வாரத்திற்கு சுமார் 1,200 ரூபாய் மதிப்புள்ள மாத்திரைகளை சாப்பிட வேண்டியிருந்தது"
மருத்துவ செலவுக்காக மட்டும் ஆண்டுக்கு சுமார் 60,000 ரூபாய் செலவிட்டதாக அவர் கூறுகிறார். ஆனால் இந்த மருந்துகளை உட்கொண்ட போதும் தனக்கு ஓய்வெடுக்க நேரமில்லை என்றார்.
அவரின் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததை அடுத்து ஒரு தனியார் மருத்துவமனையே அவருக்கு கருப்பை நீக்க அறுவை சிகிச்சை மேற்கொள்ள அறிவுறுத்தியது.
இந்த சிறுவயதில் கருப்பையை நீக்க முடியாது என மற்றொரு தனியார் மருத்துவமனை மருத்துவர் கூறினார்.
"எனக்கு 29 வயதுதான் என்பதால் அனைவரும் பயந்தனர். பின் ஒரு தனியார் மருத்துவர் எனது கருப்பை, கருப்பாக மாறி பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினார். இது உயிருக்கே ஆபத்தாக மாறக்கூடும் எனவும் கூறினார். புற்றுநோய்க்கான அபாயம் இருப்பதாக அவர் கூறியதால் நான் மிகவும் பயந்துவிட்டேன்." எனக் கூறினார்.
ஆதாரில் 40 வயது..

"அறுவை சிகிச்சைக்கு எவ்வளவு செலவாகும் எனக் கேட்டேன். 30,000 ரூபாய் ஆகும் என்றார்."
உயிர் மீது ஏற்பட்ட பயத்தால் கவிதா தொடர்ந்து மருத்துவமனை சென்றுவந்தார்.
'நீங்கள் சொன்னால் நாங்கள் இப்போது அறுவை சிகிச்சை செய்வோம். ஆனால் உங்களுக்கு வயது குறைவாக உள்ளது. இதை மேற்கொள்ள எங்களுக்கு அனுமதி இல்லை' என அரசு மருத்துவமனை மருத்துவர்கள் கூறினார்கள்.
"அதன்பிறகு பீட் மாவட்டத்தில் எனது கருப்பையை நீக்க முன்வந்தனர். உங்களுக்கு அதிக பாதிப்பு இருக்கிறது என்றால் உங்கள் வயதை அதிகமாகக் காட்டி விடலாம் என்றனர். நானும் ஒப்புக்கொண்டேன். மற்றொரு ஆதார் அட்டையை எடுத்துக்கொண்டேன்" என்றார்.
தனக்கு 40 வயது இருப்பதைப் போல ஒரு ஆதார் அட்டையை ஏற்பாடு செய்தார் கவிதா. இந்த போலி ஆதார் அட்டையை பயன்படுத்தி ஒரு தனியார் மருத்துவமனையில் கருப்பை அறுவை சிகிச்சையை மேற்கொண்டார்.
போலி ஆதார் அட்டையை பயன்படுத்துவது இந்தியாவில் சட்டப்படி குற்றமாகும். இது சட்டத்திற்கு புறம்பானது என உங்களுக்கு தெரியுமா என அவரிடம் கேட்டபோது, "மருத்துவர் கூறியதைதான் நான் செய்தேன்" எனக் கூறினார்.
இது தொடர்பாக அறுவை சிகிச்சை செய்த மருத்துவரை தொடர்புகொள்ள பிபிசி மராத்தி முயன்றது. ஆனால் அவர் இதுகுறித்து பேச மறுத்துவிட்டார்.
கடுமையான விதிகள் உள்ளபோதும் தனியார் மருத்துவமனைகளில் இதுபோல விதிகளில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி எப்படி கருப்பை நீக்க அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது என்பதற்கு கவிதா ஓர் உதாரணம் ஆகும்.
இந்த பெண்கள் பெரும்பாலும் மார்ச் முதல் ஆகஸ்ட் மாதத்திற்கு இடைபட்ட காலத்தில்தான் அறுவை சிகிச்சை செய்துகொள்கின்றனர். ஏனெனில் அப்போதுதான் இவர்களின் வேலைக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்கும். தனது அறுவை சிகிச்சைக்காக கவிதா கடன் வாங்கினார். சம்பளத்தையும் முன்கூட்டியே பெற்றுக்கொண்டார்.
"இப்போது வாழவே கடினமாக உள்ளது. ஒப்பந்ததாரரிடம் இருந்து 2 லட்சம் கடன் வாங்கினேன். இப்போது நான் கடனை அடைக்க கிட்டதட்ட 3 ஆண்டுகள் சம்பளமே இல்லாமல் வேலை செய்ய வேண்டும்" என்கிறார்.

பட மூலாதாரம், Prajakta Dhulap/BBC
கரும்பு வெட்டும் பெண்கள் கருப்பையை நீக்குவது ஏன்?
பீட் மாவட்டத்தில் கரும்பு வெட்டும் வேலைக்குச் செல்லும் பெண்கள் கருப்பையை நீக்குவது 2018-ஆம் ஆண்டே மகாராஷ்டிர அரசியலில் எதிரொலித்தது. மகாராஷ்டிர நவநிர்மான் சேனா தலைவர் ராஜ் தாக்கரே உள்ளிட்டோர் இந்த பிரச்னைக்காக குரல் கொடுத்துள்ளனர். அப்போதே பிபிசி மராத்தி சார்பில் இதுதொடர்பாக விரிவாக கள ஆய்வு செய்யப்பட்டுள்ளது. அதில், பீட் மாவட்டத்தில் கரும்பும் வெட்டும் பணியை பிரதானமாக கொண்ட வஞ்சர்வாடி கிராமத்தில் அதிக அளவிலான பெண்கள் கருப்பை நீக்க அறுவை சிகிச்சை செய்திருந்தது தெரியவந்தது.
"வயல்களிலேயெ பெண்களும் தங்க வேண்டியுள்ளது. இரவில் அல்லது அதிகாலையில் கூட கரும்பு அறுவடை நடைபெறுகிறது. தூங்குவதற்கு நிலையான நேரம் கிடையாது. இதுபோன்ற சூழ்நிலையில், மாதவிடாய் தொடங்கும் போது, வாழ்க்கை துயரமாகிவிடும். அதனால்தான் பல பெண்கள் கரும்பு வெட்டும் வேலைக்குச் செல்லும் முன்பாக தங்கள் 'கருப்பைகளை' நீக்க அறுவை சிகிச்சை செய்து கொள்கிறார்கள்." என்று அந்த கிராம பெண்கள் கூறினர்.
அரசு சொல்வது என்ன?

பட மூலாதாரம், Getty Images
"கடந்த 5 ஆண்டுகளில் 211 பெண் தொழிலாளர்களுக்கு கருப்பை நீக்க அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 29ஆம் தேதி மாநிலங்களவையிலும் மகாராஷ்டிரா அரசு இதே தகவலை அளித்திருந்தது" என பீட் மாவட்ட நிர்வாகம் கூறுகிறது.
மஹிலா கிஷான் மஞ்ச்சை சேர்ந்த சமூக ஆர்வலர் சீமா குல்கர்னி இந்த எண்ணிக்கை உண்மை நிலையைக் காட்டிலும் குறைவு என்று கூறுகிறார்.
"2019 மற்றும் 2023ஆம் ஆண்டுகளில் 2 ஆய்வறிக்கைகளை வெளியிட்டோம். 300 பெண்களில் 8% பெண்கள் கருப்பை நீக்க அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளனர். 225 பெண்களை வைத்து ஆய்வு செய்தபோதும் அதே எண்ணிக்கை வருவது கண்டறியப்பட்டது. இதில் 33 பெண்கள் 2019ஆம் ஆண்டுக்குப் பிறகு அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளனர். அரசு குறிப்பிடும் எண்ணிக்கை மிகவும் குறைவு என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். உண்மையான எண்ணிக்கை வெளியே வந்தால்தான் இதற்கான தீர்வு கிடைக்கும்" என்றார் அவர்.
கடந்த 20 ஆண்டுகளாக கரும்பு அறுவடை செய்யும் தொழிலாளர்களின் உரிமைக்காக குரல் கொடுத்து வரும் மனிஷா டோக்லே நிர்வாகம் சீராகும் என நம்புகிறார்.
"புற்றுநோய் இல்லை எனக் கண்டறியப்பட்டதும் பெண்ணுக்கு உரிய சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்கப்பட வேண்டும். ஆனால் இதற்கு பதிலாக இடைத்தரகர்கள், ஊழியர்கள் மற்றும் மருத்துவமனைகள் ஆதார் அட்டையில் வயதை மாற்றி அறுவை சிகிச்சை செய்ய வைக்கின்றனர். இது மிகவும் கொடூரமானது" என்கிறார்.
மருந்துக்கான செலவை அரசு ஏற்குமா?

கருப்பை தொடர்பான பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ள பூர்ணிமா மஸ்கே தன்னால் இதற்கு மேல் மருத்துவ செலவுகளை கவனிக்க முடியாது எனக் கூறுகிறார்.
இவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவர் தனது கருப்பையை நீக்க விரும்பவில்லை. இவருக்கு 30 வயதாகிறது. "2 ஆண்டுகளுக்கு முன்பு பிரச்னை தொடங்கியது. மருத்துவ செலவே இதுவரை 2 லட்சம் ரூபாய் வரை செலவாகிவிட்டது." என்கிறார்.
"இரண்டு வாரங்களுக்கு எனது மருந்துகளுக்கு 2,500 ரூபாய் செலவாகிறது. ஒரு மாத்திரையே 150 - 200 ரூபாய் வரை ஆகிறது. நான் அரசு மருத்துவமனைக்கே சென்றாலும் மாத்திரைகளை நான் வெளியில் இருந்துதான் வாங்கியாக வேண்டும்" என்கிறார்.
அதிகரிக்கும் மருத்துவ செலவுகளை மஸ்கே குடும்பத்தால் சமாளிக்க முடியவில்லை. இந்த மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் எனக் கோரிக்கை வைக்கின்றார்.
மருந்துகள் பற்றி மாவட்ட ஆட்சியர் விவேக் ஜான்சனிடம் கேட்டோம். இந்த மருந்துகள் ஆரம்ப சுகாதார மையம் மற்றும் துணை சுகாதார மையங்களில் கிடைக்கும் என அவர் கூறினார்.
கரும்பு அறுவடை செய்யும் தொழிலாளர்களின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவர்களை பரிசோதித்து சுகாதார அட்டை வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக அவர் கூறினார்.
"இம்மாவட்டத்தில் புதிய சுகாதார திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதன் மூலம் இந்த குழுவில் இருந்து தேர்வு செய்யப்படும் பெண்ணுக்கு மருத்துவ பயிற்சி அளிக்கப்படும். தற்போது தகவல்களை சேகரித்து வருகிறோம். அதன்பிறகு எத்தனை பேரை தேர்தெடுப்பது என முடிவு செய்யப்படும்" எனக் கூறினார்.
"பெண்களின் கருப்பை தொடர்பான பிரச்னை உடல்நலம் சார்ந்த பிரச்னை மட்டுமல்ல இது தொழிலாளர் உரிமை சார்ந்ததும் கூட" என்கிறார் சீமா குல்கர்னி.

கரும்பு அறுவடை தொழிலாளர்களின் கோரிக்கைகள் என்ன?
- கரும்பு அறுவடை செய்யும் பெண்களை அரசு, சட்டப்பூர்வமாக ஊழியர்களாக அங்கீகரிக்க வேண்டும். அதுவரை அவர்களுக்கு சட்டப்பூர்வ விதிமுறைகளும் வசதிகளும் கிடைக்காது.
- கரும்பு அறுவடை செய்யும் பெண் தொழிலாளர்கள் ஒரு நாளைக்கு 17 - 18 மணி நேரம் வேலை செய்கிறார்கள். அவர்களுக்கான உரிய ஊதியம் தரப்பட வேண்டும்.
- பெண்கள் வேலை பார்ப்பதற்கான ஊதியம் அவர்களுக்கே நேரடியாக செல்ல வேண்டும். தற்போது அனைத்து பணப் பரிமாற்றங்களும் வீட்டின் ஆண்கள், இடைத்தரகர் மற்றும் சர்க்கரை ஆலை இடையில்தான் நடக்கின்றன.
- பணியிடத்தில் குடிநீர், கழிவறை, வழக்கமான மருத்துவ பரிசோதனை உள்ளிட்ட வசதிகள் தேவை.
- வேலை செய்யும் இடத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும். பாலியல் துன்புறுத்தல்கள், வன்கொடுமைகளும் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.
- அரசு மருத்துவமனைகளில் உரிய சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.
மகாராஷ்டிராவிலும் சரி அல்லது மற்ற மாநிலங்களிலும் சரி கவிதாவைப் போலவே பல பெண்களுக்கு சட்டவிரோதமாக கருப்பை நீக்க அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுவதாக சுகாதாரத்துறை வல்லுநர்கள் கூறுகின்றனர். இதுபோன்ற சட்டவிரோத அறுவை சிகிச்சைகளை தடுப்பதுதான் அரசுக்கு சவாலாக உள்ளது.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












