"ரஷ்ய எண்ணெய் தொடர்பாக பிரதமர் மோதி வாக்குறுதி" - டிரம்ப் கூறிய புதிய தகவல்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், டேனியல் கேய்
    • பதவி, வணிக செய்தியாளர்
  • வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

யுக்ரேனில் நடைபெறும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக, அமெரிக்கா ரஷ்யாவுக்கு எதிராக பொருளாதார அழுத்தம் கொடுக்க முயற்சிக்கிறது.

இந்நிலையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்த ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இந்தியா, "குறுகிய காலத்துக்குள்" ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்திவிடும் என மோதி தனக்கு உறுதிமொழி அளித்ததாகக் கூறிய டிரம்ப், இதை "ஒரு முக்கியமான முடிவு" என்று குறிப்பிட்டார்.

வாஷிங்டன் டிசியில் உள்ள இந்திய தூதரகத்தின் வெளியுறவுச் செய்தியாளர் இதைப் பற்றி கருத்து தெரிவிக்க மறுத்து விட்டார்.

அமெரிக்கா, இந்தியாவின் எண்ணெய் கொள்முதல் விவகாரத்தை வர்த்தகப் போரில் ஓர் ஆதாயமாக பயன்படுத்த முயன்றது. ஆனால் இந்தியா அதை எதிர்த்தது, இதனால் இரு நாடுகளுக்கிடையே ஒரு ராஜீயப் பிளவு ஏற்பட்டது.

எண்ணெயும், எரிவாயுவும் ரஷ்யா அதிகளவு ஏற்றுமதி செய்யும் பொருட்கள்.

ரஷ்யாவின் முக்கிய வாடிக்கையாளர்களாக, சீனா, இந்தியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் உள்ளன.

"இப்போது சீனாவையும் அதே மாதிரி செய்ய வைக்க வேண்டும்," என்று டிரம்ப் புதன்கிழமையன்று அதிபர் அலுவலகத்தில் கூறியுள்ளார்.

பட மூலாதாரம், Press Information Bureau (PIB)/Anadolu via Getty Images

படக்குறிப்பு, ரஷ்யாவுடனும் இந்தியா நல்ல உறவு நிலையைக் கொண்டுள்ளது

அமெரிக்கா, ரஷ்யாவின் எரிசக்தி வருமானத்தை குறைக்க முயல்கிறது.

அதற்காக, ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யும் சீனாவிடமும் மற்ற பிற நாடுகளிடமும், ரஷ்ய எண்ணெய் வாங்குவதை நிறுத்துமாறு வலியுறுத்துகிறது.

இந்தியா "உடனடியாக" எண்ணெய் வாங்குவதை நிறுத்த முடியாது என்று கூறிய டிரம்ப், இந்த மாற்றம், "மெதுவாக நடைபெறும் செயல்முறையாக இருக்கும், ஆனால் விரைவில் முடிவடையும்" என்று தெரிவித்தார்.

டிரம்ப் நிர்வாகம், இந்தியப் பொருட்களுக்கு 50% வரி விதித்துள்ளது. இது, ரஷ்யாவிலிருந்து எண்ணெய் மற்றும் ஆயுதங்கள் வாங்கியதற்காக இந்தியாவுக்கு விதிக்கப்பட்ட தண்டனை எனக் கூறினார் டிரம்ப் .

இந்த வரிகள் ஆகஸ்ட் மாதம் அமலுக்கு வந்தன. உலகிலேயே மிக அதிக வரிகளில் இதுவும் ஒன்று. ரஷ்யாவுடனான பரிவர்த்தனைகளுக்கு 25% அபராதம் விதிக்கப்படுகிறது, ஏனெனில் அவை யுக்ரேன் போருக்கான பொருளாதார ஆதாரமாக இருக்கின்றன.

இந்திய பிரதமர் நரேந்திர மோதி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் நல்லுறவைக் கொண்டிருந்தாலும், இந்தியா ரஷ்யா-யுக்ரேன் போரில் நடுநிலை வகிக்கிறது என்று கூறி, பல மாதங்களாக தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்து வருகிறார்.

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, பிப்ரவரியில் எடுக்கப்பட்ட புகைப்படம் - டிரம்புக்கும் மோதிக்கும் இடையே அந்நேரத்தில் வர்த்தக விவகாரத்தில் முரண்பாடு எழுந்தது.

யுக்ரேன் போரில் ரஷ்யா ஈடுபட்டதால் இந்தியா லாபம் அடைகிறது என்ற டிரம்ப் நிர்வாகத்தின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த இந்திய அதிகாரிகள், அமெரிக்காவும் ஐரோப்பாவும் ரஷ்யாவுடன் இன்னும் வர்த்தகத்தில் ஈடுபடுகின்றன என்பதை குறிப்பிட்டு , இது 'இரட்டை வேடம்' எனக் கூறியுள்ளனர்.

உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமான இந்தியா, தனது பொருளாதாரத்தை ஆதரிக்க, தொடர்ந்து தள்ளுபடி விலையில் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கி வருகிறது.

ரஷ்ய எண்ணெய் தொடர்பான சர்ச்சை, டிரம்புக்கும் மோதிக்கும் இடையிலான உறவில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், புதன்கிழமையன்று டிரம்ப், மோதியை "சிறந்த மனிதர்" என பாராட்டினார்.

மோதி, கடந்த வாரம் டிரம்புடன் பேசியதாகவும், "வர்த்தக பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதை அவர்கள் பரிசீலித்ததாகவும்" கூறியிருந்தார்.

இந்திய வெளியுறவு அமைச்சகம் விளக்கம்

இது தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில்,"மாறும் தன்மை கொண்ட எரிபொருள் சூழலில், இந்தியாவின் நுகர்வோர் நலனை பாதுகாப்பதே எங்களின் நிலையான முன்னுரிமை" என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை நிறைவு செய்யும் நோக்கிலேயே இந்தியாவின் இறக்குமதி கொள்கைகளும் வகுக்கப்பட்டுள்ளன எனவும் அந்த அறிக்கை கூறுகிறது.

மேலும், நிலையான எரிபொருள் விலை மற்றும் பாதுகாப்பான விநியோகம் ஆகியவை இந்தியாவின் எரிபொருள் கொள்கையின் இரட்டை இலக்குகள் எனவும், சந்தை நிலவரத்தை எதிர்கொள்ளும் வகையில் எரிபொருள் மூலங்களை விரிவு படுத்துவது தங்களின் நோக்கம் எனவும் அந்த அறிக்கை கூறுகிறது.

"அமெரிக்காவைப் பொறுத்தவரையிலும் நாங்கள் நீண்டகாலமாக எங்களின் எரிபொருள் கொள்முதலை விரிவுபடுத்த முயன்று வருகிறோம். கடந்த 10 ஆண்டுகளில் இது நிலையாக முன்னேறியுள்ளது. தற்போதைய அமெரிக்க நிர்வாகம் இந்தியாவுடன் எரிபொருள் ஒத்துழைப்பை அதிகப்படுத்த முயன்று வருகிறது, இதற்கான விவாதங்களும் நடந்து வருகின்றன" எனவும் அந்த அறிக்கை கூறுகிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு