''நெஞ்சம் மறப்பதில்லை... '' : பி.சுசீலாவின் பிரபலமான 15 பாடல்கள்

பாடகி சுசிலா, பி.சுசிலா
    • எழுதியவர், சேவியர் செல்வகுமார்
    • பதவி, பிபிசி தமிழ்
  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

இசையரசி, இசைப்பேரரசி, தென்னிந்தியாவின் இசைக்குயில், கான கோகிலா, கான சரஸ்வதி...இப்படி பல்வேறு அரசுகளும், அமைப்புகளும் கொடுத்த பல்வேறு பட்டங்களாலும் பாராட்டுப் பெற்றுள்ள மூத்த பாடகி, பி.சுசீலாவின் 90 வது பிறந்தநாள் நவம்பர் 13ம் தேதி.

ஆந்திராவின் விஜயநகரத்தைப் பூர்வீகமாகக் கொண்ட புலப்பாக்க சுசீலா, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, சிங்களம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளிலும் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார்.

தமிழில் எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினிகணேசன், ஜெய்சங்கர் என்று பிரபல நடிகர்கள் அனைவருடைய படங்களிலும் டி.எம்.செளந்தரராஜனுடன் இணைந்தும், தனியாகவும் அதிகமான பாடல்களைப் பாடியது பி.சுசீலாதான்.

கே.வி.மகாதேவன், எம்.எஸ்.விஸ்வநாதன், ராமமூர்த்தி, கோவர்த்தனம், வி.குமார் என பல்வேறு இசையமைப்பாளர்களின் பாடல்களைப் பாடியுள்ள சுசீலா, இளையராஜாவின் இசையிலும் பல மெகா ஹிட் பாடல்களைப் பாடியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், 'கண்ணுக்கு மை அழகு கவிதைக்கு பொய்யழகு' பாடல் வரையிலும் பாடியுள்ளார்.

பல்வேறு இசையமைப்பாளர்கள் இசையில் பி.சுசீலா பாடியுள்ள ஆயிரக்கணக்கான தமிழ்ப்பாடல்கள், லட்சக்கணக்கான தமிழ் ரசிகர்களைக் கவர்ந்துள்ளன.

பிபிசி தமிழிடம் பேசிய மேடைக்கச்சேரி கலைஞரான ஜான் சுந்தர் சுசீலாவைப் பற்றிக் கூறுகையில், ''தமிழ்ச்சினிமா மெல்லிசைக்கலைஞர்களின் உலகத்தில் டி.எம்.செளந்தரராஜன் ராஜா என்றால் சுசீலா அம்மாதான் ராணி.'' என்கிறார்.

''திருமணம், திருவிழா கச்சேரி என்றாலே சுசீலா அம்மாவின் சரவணப்பொய்கையில் நீராடி பாடலில்தான் துவங்குவோம். அந்தப் பாடலைப் பாடியதுமே அந்த இடமே மங்களகரமாகி விடும் ஓர் உணர்வு தோன்றும். அடுத்து ஆலயமணியின் ஓசை பாடுவோம்.

அடுத்து வரும் விருப்பச்சீட்டுகளில் 'மாலைப்பொழுதின் மயக்கத்திலே', 'உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல!', 'உன்னை ஒன்று கேட்பேன்', 'கண்ணா கருமை நிறக்கண்ணா!' என்று வரிசையாக வரும்.'' என்கிறார் ஜான்சுந்தர்.

கோவையில் இசைக்குழுவை நடத்தும் ஜான் சுந்தர், பி.சுசீலா பாடியவற்றில், தமக்கு விருப்பமான 15 பாடல்களை பட்டியலிட்டார்.

1. ''நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா...!''

சிவாஜி கணேசன்–வாணிஸ்ரீ நடிப்பில் வெளியான 'உயர்ந்த மனிதன்' படத்தில் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் வாலியின் வரிகளில் உருவான பாடல் இது. தனிமையிலுள்ள காதலியின் காதல் உணர்வுகளைச் சொல்லும் மென்மையான இந்தப் பாடல், 'பால் போலவே வான் மீதிலே...!' என்று மொட்டு விரிவது போல சுசீலாவின் இனிய குரலில் மென்மெட்டு வார்த்தைகளாகத் துவங்கி, பாடலாக மலரும்.

''மங்கையே உன் கண்கள் இன்று மயக்கம் கொண்டதேன்..மயக்கம் கொண்டதேன்!'' என்று நின்று நிதானித்து, ஒவ்வொரு வார்த்தையையும் ரசித்து ரசித்து, தனிமையிலுள்ள ஒரு பெண்ணின் உணர்வை தன் குரலுக்குள் இழைத்துக் குழைத்து பி.சுசீலா பாடிய விதம், இந்தப் பாடலை என்றென்றும் இனிமையாக்கிய மந்திரம் என்று சொல்லலாம்.

2. ''நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா...!''

எம்.ஜி.ஆர்–தேவிகா இணையாக நடித்த ஆனந்தஜோதி படத்திற்காக எம்.எஸ்.விஸ்வநாதன்–ராமமூர்த்தி இசையில் கண்ணதாசனின் கவித்துவமான காதல் வரிகளில் பி.சுசீலா பாடிய மற்றொரு சூப்பர்ஹிட் பாடல். இதுவும் காதலின் பிரிவைச் சொல்லும் மெல்லிய சோகமான பாடல்தான்.

சரணத்தில் ''கொதிக்கத் தெரிந்த நிலவே உனக்குக்குளிரத் தெரியாதா'' என்று சின்ன கோபத்தோடு வேகத்தோடு பாடத்துவங்கி, ''பிரிக்க தெரிந்த இறைவா உனக்கு இணைக்க தெரியாதா…!'' என்று படிப்படியாக அந்த வேகத்தைக் குறைத்து, ''இணைய தெரிந்த தலைவா உனக்கு என்னை புரியாதா…தலைவா என்னை புரியாதா…!''என்று ஏக்கமான குரலில் முடிப்பதற்குள் சுசீலாவின் குரலில் வெளிப்படும் பன்மயமான உணர்வுகள், அவருக்கு மட்டுமேயான தனித்துவம்.

பாடகி சுசிலா, பி.சுசிலா

3. ''நெஞ்சம் மறப்பதில்லை....அது நினைவை இழப்பதில்லை!''

ஸ்ரீதர் இயக்கத்தில் வெளியான 'நெஞ்சம் மறப்பதில்லை' படம், தற்போது வருகிற அமானுஷ்யமான படங்களுக்கு முன்னோடிப்படம் என்று விமர்சனம் எழுதியது தாய் வாரஇதழ்.

அந்தப் படத்தில் வரும் 'நெஞ்சம் மறப்பதில்லை' பாடலை பி.பி.ஸ்ரீனிவாசுடன் இணைந்து சுசீலா பாடியிருப்பார். அந்தப் படத்துக்கு விஸ்வநாதன்–ராமமூர்த்தி கூடுதலான சிரத்தை எடுத்து இசையமைத்திருப்பதாகச் சொல்லும் அந்த விமர்சனம், இந்த பாடலை காதுகளுடன் கண்களையும் சற்றே மூடும் விதமாக லயித்துக் கேட்க வைக்கும் வகையில் இருவரும் பாடியிருப்பதாகக் கூறியிருக்கும்.

4. ''பருவம் எனது பாடல்...பார்வை எனது ஆடல்!''

எம்.ஜி.ஆர்.–ஜெயலலிதா இணைந்து நடித்த ஆயிரத்தில் ஒருவன், அந்தக் காலத்தின் வெற்றிப் படங்களில் ஒன்று. அதில் விஸ்வநாதன்–ராமமூர்த்தி இசையில் வாலியின் வரிகளில் சுசீலா பாடிய இந்தப் பாடலும் 70களில் திருவிழா துவங்கி கல்யாணம், காதுகுத்து என எல்லா விழாக்களிலும் தெருத்தெருவாக மீண்டும் மீண்டும் ஒலித்த பாடல் என்று சொல்லலாம்.

பாடல், ஆடல், கோயில், காதல் என்று பல்லவியில் ஒவ்வொரு வார்த்தையையும் முடிக்கும் வாலி, சரணத்தில் இதயம் எனது ஊராகும், இளமை எனது தேராகும் என்று ஒரே சீராக முடித்திருப்பார். அந்த வார்த்தைகளை அழுத்தந்திருத்தமாக சுசீலா உச்சரிக்கும் விதம், இந்த வார்த்தைகளையும் பாடலையும் இன்னுமோர் உயரத்துக்குக் கொண்டு போயிருக்கும்.

5. ''இரவுக்கு ஆயிரம் கண்கள்...பகலுக்கு ஒன்றே ஒன்று!''

கே.வி.மகாதேவனின் இசையில் சுசீலா ஏராளமான பாடல்களைப் பாடியுள்ளார். இந்தப் பாடல் இடம் பெற்ற குலமகள் ராதை படத்தில் சுசீலாவுக்கு 4 தனிப்பாடல்கள் கொடுத்திருப்பார் மகாதேவன். அதில் அனைவரையும் ஒருசேர ஈர்த்த பாடல் என்று இந்தப் பாடலைச் சொல்லலாம்.

நட்சத்திரங்களை இரவின் கண்களாகவும், சூரியனை பகலின் கண்ணாகவும் சித்தரிக்கும் அர்த்தம் பொதிந்த கண்ணதாசனின் இந்தப் பாடல் வரிகளை சுசீலா, இரவில் யாருக்கும் தொந்தரவு தராமல் மெதுவாகப் பேசுவது போன்றே மெதுவாக மென்மையாக பாடியிருப்பார். பகலை விட இரவில் கேட்கும்போது இந்தப் பாடல் இன்னும் இனிதாயிருக்கும்.

6. ''அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி...சேரும் நாள் பார்க்கச் சொல்லடி!''

ஜெய்சங்கர்–கே.ஆர்.விஜயா ஜோடியாக நடித்த பட்டணத்தில் பூதம் படத்திற்காக கோவர்த்தனம் இசையில் உருவான இந்தப் பாடலில், அதிர்வூட்டும் தபேலாவின் இசையும், கம்பீரமாய் வந்திறங்கும் டி.எம்.எஸ் குரலும், மயிலிறகாய் வருடும் சுசீலாவின் மென்மையான குரலும் இணைந்து வெளிப்படும் ஒலிக்கலவை, மீண்டும் மீண்டும் இதைக் கேட்கத்துாண்டும்.

அதற்கேற்ப இந்தப் பாடலும் மெகா ஹிட் அடித்தது. இன்றும் இரவுப்பொழுதுகளில் பண்பலைகளில் அடிக்கடி ஒலிக்கிறது இந்தப் பாடல்.

7. ''இயற்கை என்னும் இளைய கன்னி...ஏங்குகிறாள் துணையை எண்ணி!''

டிஎம்எஸ் உடன் பாடும்போது, சுசீலா குரலின் மென்மை தனியாக வெளிப்படும். இந்தப் பாடலில் இளமையான எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் குரலுக்கும், சுசீலாவின் குரலுக்கும் எது இனிமை, எது மென்மை என்று ஒரு மென்மையான போட்டி இருக்கும். அந்தளவுக்கு இருவருமே இந்தப் பாடலை அவ்வளவு அழகாகப் பாடியிருப்பார்கள்.

அதிலும் ''தாமரையாள் ஏன் சிரித்தாள்...தலைவனுக்கே தூது விட்டாள்!'' என்ற வார்த்தைகளில் சுசீலாவின் குரலில் வெளிப்படும் பெண்மையும் மென்மையும் இணையற்ற இணையாயிருக்கும். சாந்தி நிலையம் படத்துக்காக எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் கண்ணதாசன் வரிகளில் இருவரும் இணைந்து பாடிய இந்தப் பாடல், இயற்கையை நோக்கிப் பயணிக்கும் அனைவருக்குமான ஒரு பயணப்பாடலாக ஒலிப்பதுண்டு.

பாடகி சுசிலா, பி.சுசிலா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 2008-ஆம் ஆண்டு பாடகி பி.சுசிலாவுக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது

8. ''நான் உன்னை வாழ்த்திப் பாடுகிறேன்...நீ வரவேண்டும்!''

பாலச்சந்தரின் இயக்கத்தில் வெளியான வித்தியாசமான கதைக்களம் கொண்ட நுாற்றுக்கு நுாறு படத்தில், வி.குமார் இசையில் புத்தாண்டுப் பாடலாக ஒலிக்கும் இந்தப் பாடலை இளமைத்துள்ளலுடன், புத்தாண்டின் உற்சாகத்துடனும் சுசீலா பாடியிருப்பார். பாடலுக்கு இடையில் 'ஹேப்பி நியூ இயர்' என்ற கோரஸ் ஒலிக்கும்.

புதிய ஆண்டைத் துவங்கும்போது நம்பிக்கை ஏற்படுத்தும் விதமான வரிகள், சுசீலாவின் குரலில் ஒலிக்கும்போது, பாடலைக் கேட்போருடைய இதயத்திற்குள் ஒரு விதமான அமைதியையும் மகிழ்வையும் ஏற்படுத்துவதை உணரமுடியும். கமலின் சகலகலாவல்லவனில் 'இளமை இதோ இதோ' பாடல் வரும் வரை, புத்தாண்டுப் பாடலாக எங்கும் ஒலித்து வந்தது இந்தப் பாடல்தான்.

9. ''கண்ணன் ஒரு கைக்குழந்தை...கண்கள் சொல்லும் பூங்கவிதை!''

சிலருக்கு சில பாடல்கள் பிடிக்கும்; சில பாடல்கள் பிடிக்காது. இந்தப் பாடலை யாருக்குதான் பிடிக்காது என்று கேட்கும் வகையிலான ஓர் அற்புதமான இசைக்கலவை இந்தப் பாடல். பத்ரகாளி படத்துக்காக இளையராஜா இசையில் கே.ஜே.ஜேசுதாசுடன் இணைந்து சுசீலா பாடிய இந்தப் பாடலில் இளையராஜாவின் இசையா, வாலியின் வரிகளா, இவர்களில் குரல்களா எது அதீத இனிமை என்று கேட்கும் விதத்தில் இருக்கும்.

''இளையராஜாவின் இசையில் சுசீலா பாடிய இரண்டாவது பாடல் இது. இந்த பாடலில் ஜேசுதாசும் சுசீலாவும் கண்ணன் எனும் கைக்குழந்தையை மாறி மாறி தாலாட்டி சீராட்டி, கொஞ்சி குலவி ஆஹா என்ன ஒரு அற்புதமான பாடல்.'' என்று மதியின் பாடல் வரிகள் என்ற இணையத்தில் இதை ஒருவர் விமர்சித்திருந்தார்.

தனியார் தொலைக்காட்சிக்காக இளையராஜா நடத்திய ஓர் இசைக்கச்சேரியில் இந்தப் பாடலை ஜேசுதாசுடன் இணைந்து சித்ரா பாடியிருந்தார். அப்போது பேசிய இளையராஜா, ''இந்தப் பாடல் ஷோபா சந்திரசேகரின் தாயார் நடத்திய நாடகத்துக்காக நான் இசைத்த பாடல்.'' என்று கூறி, ''மூன்று தமிழ் காவியமும் முருகனுக்கு தொட்டிலடி..முத்தமிழின் சங்கமும் முருகனுக்கு கட்டிலடி...!'' என்று பாடிக்காட்டினார்.

''கண்ணன் ஒரு கைக்குழந்தை என்று சுசீலாம்மா பாடலைப் பாடிக் கொண்டிருந்தபோது, ஜேசுதாஸ் எல்லோருக்கும் ஸ்வீட் வாங்கிக் கொடுத்தார். காரணம், அன்றைக்கு கோகுலாஷ்டமி!'' என்றார் இளையராஜா.

பாடகி சுசிலா, பி.சுசிலா

பட மூலாதாரம், PS Tamil Songs

படக்குறிப்பு, என் கண்மணி உன் காதலி பாடலில் வரும் காட்சி

10. என் கண்மணி உன் காதலி...!

பாடல் வடிவத்தில் இளையராஜா புதுப்புது யுக்திகளை புகுத்திக் கொண்டேயிருப்பார் என்பதற்கு இந்தப் பாடல் ஆகச்சிறந்த ஓர் உதாரணம். சிட்டுக்குருவி படத்தில் இடம் பெற்ற இந்தப் பாடல், ஆண்டுகள் பல கடந்தும் இன்றும் புத்தம்புதுப்பாடல் போலவே பண்பலைகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. ஒரு பேருந்து பயணத்தில் காதலர்கள், பயணிகள் கூட்டத்தில் இடைவெளியோடு பயணிக்கும்போது, அசரீரீயாக ஒலிக்கும் இந்தப் பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியத்துடன் இணைந்து சுசீலா பாடியிருப்பார்.

காதலர்கள் இருவரின் பார்வைப்பரிமாற்றங்களுக்கு இடையில் 'தேனாம்பேட்டை, சூப்பர் மார்க்கெட் இறங்கு!', 'இந்தம்மா கருவாட்டுக்கூடை முன்னாடி போ' என்று நடத்துநரின் இடையூறுகள் வரும். அதைக் கடந்து காதலை வெளிப்படுத்தும் வகையில் பாடல் வடிவமைக்கப்பட்டிருக்கும். அதில் ''என் மன்னவன்...உன் காதலன்...எனைப்பார்த்ததும்...ஓராயிரம்...கதை சொல்கிறான்!'' என்று வார்த்தைக்கு வார்த்தை சற்று இடைவெளி விட்டு சுசீலா பாடியிருப்பது, இந்த பாடலின் இனிமைக்கு மேலும் இனிமை சேர்த்திருக்கும்.

11. ''காளிதாசன் கண்ணதாசன் கவிதை நீ...!''

பிரபு–சில்க் ஸ்மிதா நடித்த சூரக்கோட்டை சிங்கக்குட்டி படத்திற்காக இளையராஜா இசையில் வாலியின் வரிகளில் ஜெயச்சந்திரனுடன் சுசீலா பாடிய பாடல் இது. இன்றைய தலைமுறையினருக்கு சுசீலாவின் குரல் இனிமையை உணர வைக்கிற இந்தப் பாடலும் தினந்தோறும் ஒரு முறையாவது பண்பலைகளில் ஒலிக்கத் தவறுவதில்லை.

''ஓடை பாயும் தண்ணீரில் ஆடைகள் நனைய...ஊஞ்சலாடும் நெஞ்சோடு ஆசைகள் விளைய!'' என்ற இரு வார்த்தைகளுக்கும் இடையில் சுசீலா பயன்படுத்தும் 'ஹோய்' என்ற சின்ன சிணுங்கல், எந்தச் சூழ்நிலையில் எங்கே கேட்டாலும் பெரும் சுகமாயிருக்கும்.

12. ''கண்ணுக்கு மை அழகு...கவிதைக்கு பொய் அழகு!''

ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் 'சின்னச்சின்ன ஆசை' பாடலை சுசீலாதான் பாடுவதாக இருந்தது என்று ஒரு தகவல் உண்டு. ஆனால் ரஹ்மானின் இசையில் சுசீலா பாடிய முதல் பாடல் இதுதான். வைரமுத்து எழுதிய கவிதைக்கு ரஹ்மான் மெட்டமைத்த பின், ''இந்தப் பாடலை பி.சுசீலா அம்மாதான் பாடவேண்டும்.'' என்று வைரமுத்து கட்டாயமாகச் சொல்லி விட்டதாக ஒரு தகவல் உண்டு.

அதற்கேற்பவே, வைரமுத்துவின் கவித்துவமான வரிகள், சுசீலாவின் தெளிவான அழகான உச்சரிப்பாலும் குரலாலும் எல்லோருடைய செவிகளுக்குள்ளும் புகுந்து இதயங்களுக்குள் நிறைத்தது.

பாடகி சுசிலா, பி.சுசிலா

பட மூலாதாரம், Facebook/AR Rahman

13. ''உன் நெஞ்சைத்தொட்டுச் சொல்லு என் ராசா...என் மேல் ஆசையில்லையா?''

ரஜினியின் ராஜாதிராஜா படத்துக்காக இளையராஜா இசையில் சித்ராவுடன் இணைந்து சுசீலா பாடிய இந்தப் பாடலும் சூப்பர் ஹிட் அடித்த பாடல். சுசீலாவின் குரலில் துவங்கும் இந்தப் பாடலில் சித்ராவின் குரலும் இணையும் போது பாடல் இன்னும் மெருகேறும். படத்தில் இடம் பெறும் இரு கதாநாயகிகளின் (ராதா, நதியா) சோக உணர்வையும் இவர்களிருவரும் தங்கள் குரல்களில் அற்புதமாக வெளிப்படுத்தியிருப்பார்கள்.

சுசீலாவுக்கும் சித்ராவுக்கும் இடையிலான தலைமுறை இடைவெளி, குரல்களில் துளியும் வெளிப்படாத அளவில் சுசீலாவின் குரலும் மென்மையாகவும் இளமையாகவும் இருப்பதை நன்கு அறியமுடியும்.

14. ''காலைத்தென்றல் பாடிவரும் ராகம் ஒரு ராகம்!''

இதுவும் இளையராஜா இசையில் சுசீலா பாடிய சூப்பர் ஹிட் பாடல்களில் ஒன்று. அதிகாலையின் ரம்மியத்தையும், இளம் வெயிலின் மகத்துவத்தையும், தென்றலின் மென்மையையும் வெளிப்படுத்தும் வார்த்தைகளை தன்னுடைய இனிமைக்குரலுக்குள் பொதிந்து காற்றில் மிதக்க விட்டிருப்பார் சுசீலா.

''உறங்கும் மானுடனே உடனே வா...போர்வைச்சிறையை விட்டு வெளியே வா!'' என்று சுசீலாவின் குரலில் பாடலைக் கேட்கும்போது, எல்லோருக்குமே அதிகாலையில் எழ வேண்டுமென்ற ஆசையும் எழும். சுசீலாவின் தனிப்பாடல்களில் இந்தப் பாடலுக்கென்று எப்போதும் தனி இடமுண்டு.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

15. ''ராசாத்தி மனசுல இந்த ராசாவின் நெனப்புத்தான்!''

மனோவுடன் இணைந்து சுசீலா பாடிய அற்புதமான காதல் பாடல் இது. கிராமியப் பின்புலத்தில் எடுக்கப்பட்ட படம் என்பதால் இந்தப் பாடலையும் கிராமத்தன்மையைப் பிரதிபலிக்கும் விதத்தில் இளையராஜாவே எழுதியிருப்பார். அதற்கேற்ப கிராமத்துப் பெண்ணின் உச்சரிப்போடு இந்தப் பாடலை சுசீலா பாடியிருப்பார்.

''வீதியிலே நீ நடந்தா...கண்களெல்லாம் உன் மேல தான்...முள்ளு தச்சா தாங்கும் நெஞ்சம் கண்கள் தச்சா தாங்காதையா!!'' என்று சுசீலாவின் குரல், பாடல் வெளியான நாளிலிருந்து இப்போது வரையிலும் ஆயிரக்கணக்கான தமிழக கிராமப்புறங்களின் திருமணங்களிலும் திருவிழாக்களிலும் கச்சேரிகளிலும் ஒலித்துக்கொண்டேயிருக்கிறது. பல லட்சம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு