ஐஎம்டிபி ரேட்டிங்: தனுஷ் டாப் 10 பிரபலங்கள் வரிசையில் இடம் பிடித்தது எப்படி?

பட மூலாதாரம், Getty Images
ஐஎம்டிபியின் இந்த ஆண்டின் அதிக புகழ்பெற்ற 10 சினிமா பிரபலங்களின் பட்டியலில் முதலிடத்தை பெற்றுள்ளார் நடிகர் தனுஷ். இரண்டாம் இடத்தை இந்தி நடிகை ஆலியா பட்டும், மூன்றாம் இடத்தை நடிகை ஐஸ்வர்யா ராயும் பெற்றுள்ளனர்.
இந்த வருடம் தனுஷ் நடிப்பில் தமிழில் செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன், மித்ரன் ஆர் ஜவஹர் இயக்கத்தில் திருச்சிற்றம்பலம், கார்த்திக் நரேன் இயக்கத்தில் மாறன் ஆகிய படங்கள் வெளியாயின. இதில் திருசிற்றம்பலம் வர்த்தக ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.
அதுமட்டுமின்றி ஹாலிவுட்டில் ‘தி க்ரே மேன்’ படத்திலும் நடித்திருந்தார் தனுஷ்.
‘கொலவெறி’ பாடலின் மூலம் தனுஷ் இந்தி திரைப்பட ரசிகர்களுக்கு ஏற்கெனவே அறிமுகமாகியிருந்தாலும், அவரின் படங்களும் இந்தி ரசிகர்கள் மத்தியில் அவருக்கு நல்ல வரவேற்பை அளித்துள்ளது.
இந்தியில் தனுஷ், சோனம் கபூருடன் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் 'ராஞ்சனா', அமிதாப் பச்சனுடன் இணைந்து ஆர் பால்கி இயக்கத்தில் 'ஷமிதாப்', 2021ஆம் ஆண்டு மீண்டும் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் சாரா அலி கான், அக்ஷய் குமாருடன் அட் ராங்கி ரே ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
இந்தியில் பல சவாலான கதாபாத்திரங்களில் நடித்து வரும் ஆலியா பட், இந்த வருடம் கங்குபாய் கத்தியாவாடி படத்தில் கங்குபாயாக நடித்திருப்பார்.
அவரின் நடிப்பு விமர்சகர்கள் மத்தியில் பெரும் பாராட்டுக்களை பெற்றது. அதுமட்டுமல்லாமல் ராஜமெளலி இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர், டார்லிங்க்ஸ், கணவர் ரன்பிர் கபூருடன் பிரமாஸ்திரா ஆகிய படங்களிலும் நடித்திருந்தார்.
மூன்றாவது இடத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய் இடம் பிடித்துள்ளார். இத்தனை ஆண்டுகளுக்கு பிறகும் ஐஸ்வர்யா ராயின் புகழ் குறையாமல் உள்ளது என இது குறித்து சமூக வலைத்தளத்தில் அவரது ரசிகர்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
இந்த ஆண்டு தமிழ் உட்பட ஐந்து மொழிகளில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற பொன்னியின் செல்வன் படத்தில் ஐஸ்வர்யா ராய் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பட்டியலில் நடிகை சமந்தா ஐந்தாவது இடத்தை பெற்றிருக்கிறார்.
2022 ஆம் ஆண்டு தமிழில் சமந்தா நடிப்பில் விஜய் சேதுபதியுடன் காத்துவாக்குல ரெண்டு காதல் மற்றும் யஷோதா ஆகிய படங்கள் வெளியாகியிருந்தன.
இதேபோல அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா தி ரைஸ் படத்தில் இடம்பெற்ற ‘ஹூ சொல்றியா’ பாடலும் சமந்தாவை மேலும் பிரபலமாக்கியது.
இது அனைத்தையும் தாண்டி தான் ‘மயோசிடிஸ்’ என்ற நோயால் பாதிக்கப்பட்டதை சமந்தா தனது சமூக ஊடக பக்கங்களில் பகிர்ந்திருந்தார். அவர் அவ்வாறு வெளிப்படையாக பகிர்ந்தது குறித்து பலரும் நேர்மறையான கருத்துக்களை தெரிவித்திருந்தனர்.
நான்காவது இடத்தில் ராம் சரண் தேஜாவும், ஆறாவது இடத்தில் பாலிவுட் நடிகர் ஹ்ரித்திக் ரோஷனும், ஏழாவது இடத்தில் பாலிவுட் நடிகை கியாரா அத்வானியும், எட்டாவது இடத்தில் தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆரும், ஒன்பதாவது இடத்தில் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனும், பத்தாவது இடத்தில் கேஜிஎஃப் பட கதாநாயகன் யஷ்ஷும் இடம் பிடித்துள்ளனர்.
ஜூனியர் என் டிஆர், ராம் சரண் தேஜா ஆகியோர் நடித்த ஆர்ஆர்ஆர், யஷ் நடிப்பில் வெளியான ஜேபிஎஃப் 1 மற்றும் 2, புஷ்பா தி ரைஸ் ஆகிய படங்கள் பாலிவுட்டில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் ஐஎம்டிபி பட்டியலில் இடம்பெற்றுள்ள 10 பேரில் ஆறு பேர் தென் இந்திய சினிமாத் துறையை சேர்ந்தவர்களாக உள்ளனர்.
அதேபோல தமிழில் 2017ஆம் ஆண்டு வெளியான விக்ரம் வேதா திரைப்படத்தின் இந்தி ரீமேக்கில் நடிகர் ரித்திக் ரோஷன் வேதா கதாபாத்திரத்தில் நடித்து, படம் இந்த ஆண்டு வெளியாகி அவரை இந்த பட்டியலில் சேர்த்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images
பட்டியல் வரிசை எவ்வாறு கணக்கிடப்பட்டது?
2022ஆம் வருடம் முழுவதும் ஐஎம்டிபியின் ரேங்கிங் பட்டியலில் இந்த பிரபலங்கள் தொடர்ந்து முன்னிலை வகித்து வந்ததை வைத்து இந்த பட்டியல் தயாரிக்கபப்ட்டுள்ளது என்றும் உலகம் முழுவதும் ஐஎம்டிபி பக்கத்திற்கு வாரம்தோறும் வந்த ‘200 மில்லியன் ரசிகர்களை அடிப்படையாக கொண்டும் இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது,' என்று ஐஎம்டிபி தெரிவித்துள்ளது.
ஐஎம்டிபி ரேட்டிங் என்றால் என்ன?
ஐஎம்டிபி என்பது ஆங்கிலத்தில் ‘இன்டர்நெட் மூவி டே பேஸ்’ என்பதன் சுருக்கமே ஆகும். இதில் படங்கள், அவை ரிலீசாகும் தேதி, அதன் நடிகர்கள் மற்றும் பிற தகவல்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், விருது நிகழ்ச்சிகள், திரைப்பட விழாக்கள் ஆகியவற்றின் தகவல்கள் இடம் பெற்றிருக்கும்.
ஐஎம்டிபியில் பதிவு செய்யப்பட்ட பயன்பாட்டாளர்கள் கொடுக்கப்பட்ட தலைப்புகளுக்கு தங்களின் 1 – 10 வரையான ரேட்டிங்கை வழங்கலாம். இதன்மூலம் மொத்தமாக அந்த படத்திற்கான அல்லது தலைப்புக்கான ரேட்டிங் தொகுக்கப்படும். அது ஐஎம்டிபி தளத்தில் வெளியிடப்படும்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












