விளக்கப்படம்: இந்தியா மீதான டிரம்பின் இறக்குமதி வரிவிதிப்பை விமர்சிக்கும் அமெரிக்க ஊடகங்கள்

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்
பிரதமர் மோதி, அமெரிக்கா, இந்தியா

பட மூலாதாரம், JIM WATSON/AFP via Getty

இந்தியாவில் இருந்து அமெரிக்கா இறக்குமதி செய்வதற்கான வரியை அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் 50 சதவிகிதம் உயர்த்தியுள்ளார்.

இந்தியா, ரஷ்யா-யுக்ரேன் போரை தூண்டிவிடுவதால் அதிக வரிகளை விதிப்பதாக டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். அதாவது, ரஷ்யாவிடமிருந்து அதிக அளவில் எண்ணெய் வாங்குவதன் மூலம், யுக்ரேனில் போரைத் தொடர இந்தியா உதவி செய்கிறது என்று அவர் கூறுகிறார்.

50 சதவிகித வரிவிதிப்பை நியாயமற்றது என்று கூறும் இந்தியா, அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்கின்றன என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது.

தனது நலன்களைப் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கவிருப்பதாக இந்தியா கூறியுள்ளது.

இந்தியாவுக்கு எதிரான டிரம்பின் நிலைப்பாடு, சர்வதேச நாடுகளில், குறிப்பாக அமெரிக்க ஊடகங்களில் அதிகம் விவாதிக்கப்பட்டு வருகிறது.

மூலோபாய கூட்டாளி நாடுகளில் ஒன்றாக கருதப்பட்ட இந்தியா மீதான டொனால்ட் டிரம்பின் அணுகுமுறை ஏன் இவ்வாறு மாறியது என்று அமெரிக்க ஊடகங்களில் கேள்விகள் கேட்கப்படுகின்றன.

டொனால்ட் டிரம்ப்

பட மூலாதாரம், Getty Images

ரஷ்யாவின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியான சீனா, இந்தியாவை விட ரஷ்யாவிலிருந்து அதிக எண்ணெயை இறக்குமதி செய்கிறது. அமெரிக்க ஊடகங்களில் இது குறித்து நிறைய விவாதங்கள் நடந்து வருகின்றன.

டிரம்பின் இந்த முடிவால் இந்தியா-அமெரிக்க உறவுகளில் ஏற்படும் தாக்கம் குறித்தும் அமெரிக்க ஊடகங்களில் விவாதிக்கப்படுகிறது.

இது, இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவை மூலோபாய ரீதியாக சவால் செய்வதிலும் தடைகளை உருவாக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்தியப் பொருளாதாரம் குறித்த டிரம்பின் கருத்துக்களை அமெரிக்க ஊடகங்கள் விமர்சிக்கின்றன. மேலும், உலகின் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரம் இந்தியா என்றும் அமெரிக்க ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

வால் ஸ்ட்ரீட் ஜர்னல்: "இந்தியா மீது 50 சதவிகித இறக்குமதி வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அச்சுறுத்தியுள்ளார். ஆனால், இந்தியாவை விட அதிகமாக, ரஷ்ய எண்ணெயை வாங்கும் சீனாவுக்கு ஏன் அந்த அளவு வரி விதிக்கப்படவில்லை?"

வாஷிங்டன் போஸ்ட்: "டிரம்பின் வரிவிதிப்பு முடிவால், இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவுகள், கடந்த பத்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகவும் மோசமான நிலையை எட்டியுள்ளது."

நியூயார்க் டைம்ஸ்: "இந்தியா மீதான டிரம்பின் வரி என்பது பொருளாதாரப் போர்"

ப்ளூம்பெர்க்: "பிரேசில் அதிபர் லூலாவுடனான மோதியின் பேச்சுவார்த்தைகளும், சீனாவுக்கான மோதியின் பயணமும் ஏற்கெனவே திட்டமிடப்பட்டிருந்தாலும், டிரம்ப் இந்தியா மீது 50 சதவிகித வரியை விதித்த பிறகு இது முக்கியத்துவம் பெற்றன."

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு