'இந்திய பெருங்கடலில் நீர்மூழ்கி தாக்குதல் மூலம் மூழ்கடிக்கப்பட்ட இரான் கப்பல்' - அமெரிக்கா கூறியது என்ன?
பட மூலாதாரம், Mashregh News / File Photo
- எழுதியவர், தினுக் ஹேவாவிதரனா
- பதவி, பிபிசி சிங்கள மொழி சேவை
- வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்
இரானின் கடற்படை கப்பல் ஒன்று இலங்கையின் காலி துறைமுகத்திலிருந்து 40 கடல் மைல் தொலைவில் மூழ்கியது.
இரானிய கப்பல் மூழ்கியதற்கான உண்மையான காரணம் தெரியவில்லை என, இலங்கை பாதுகாப்பு இணை அமைச்சர் அருணா ஜெயசேகரா பிபிசி சிங்கள மொழி சேவையிடம் தெரிவித்துள்ளார்.
எனினும், அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்சேத் தற்போது நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், "சர்வதேச கடலில் பாதுகாப்பாக இருப்பதாக கருதப்பட்ட இரானிய போர்க்கப்பல் ஒன்றை இந்திய பெருங்கடலில் அமெரிக்கா மூழ்கடித்ததாக" தெரிவித்தார்.
"அக்கப்பல் நீர்மூழ்கிக் குண்டால் மூழ்கடிக்கப்பட்டது" என அவர் தெரிவித்தார்.
ஆனாலும், தாக்குதலுக்கு உள்ளான இரானிய கப்பலின் பெயரை அவர் குறிப்பிடவில்லை.
இந்த நிலையில், அமெரிக்க தாக்குதலில் மூழ்கிய இரான் கப்பலில் இருந்த 80 பேரின் உடல்கள் கண்டறியப்பட்டதாக, பாதுகாப்பு துறை செயலாளர் சம்பத் துய்யகொந்தா பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
மீட்கப்பட்ட உடல்கள் காலி தேசிய மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டதாக களத்தில் இருக்கும் பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார்.
அமெரிக்காவின் அறிவிப்பு தொடர்பில் இலங்கை கடற்படையிடம் பிபிசி தமிழ் வினவியது. கடலுக்குள் அடியில் அவதானிக்கும் வசதி இலங்கையிடம் கிடையாது என கடற்படை செய்தித் தொடர்பாளரான கமாண்டர் புத்திக்க சம்பத் தெரிவிக்கின்றார்.
அதே சமயம், இலங்கையில் நீர்மூழ்கிக் கப்பல் தாக்குதலால் கப்பல் மூழ்கியதாக வெளியான செய்திகளை நிராகரிப்பதாகவும், மூழ்கியதற்கான காரணம் தெரியவில்லை என்றும் இலங்கை கடற்படை செய்தித் தொடர்பாளர் புதிகா சம்பத் முன்னர் தெரிவித்திருந்தார்.
இலங்கையின் பாதுகாப்பு துறை செயலாளர் ஏர் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா பிபிசி சிங்கள மொழி சேவையிடம் இதனை உறுதி செய்தார்.
காயமடைந்த 32 பேர் காலி தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், கப்பலில் இருந்த 140-க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை என, சம்பத் துய்யகொந்தா பிபிசியிடம் தெரிவித்தார்.
"கடலுக்குள் அவதானிக்கும் வசதி இலங்கையிடம் இல்லை"
''தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க தரப்பு கூறுகின்றது. எனினும், எங்களுக்கு விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளதாகவே தகவல் கிடைத்தது. விபத்து தொடர்பிலான நடவடிக்கைகளையே நாங்கள் முன்னெடுத்தோம்.'' என அவர் குறிப்பிட்டார்.
நீர்மூழ்கி கப்பலைக் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் வெளியிட்ட செய்தியை கடற்படை நிராகரித்திருந்தமை தொடர்பிலும், பிபிசி தமிழ், இலங்கை கடற்படை பேச்சாளரிடம் வினவியது.
''நீர்மூழ்கி கப்பலைக் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டதை இலங்கை கடற்படை உறுதிப்படுத்தியதாக, வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. அந்தச் சந்தர்ப்பத்தில் கடற்படை அவ்வாறான தகவலொன்றை வெளியிட்டிருக்கவில்லை. இலங்கை கடற்படையை மேற்கோள்காட்டி தெரிவித்த கருத்தையே நான் நிராகரித்தேன். நாங்கள் தாக்குதல் நடத்தப்பட்டதாக எந்தவொரு இடத்திலும் தகவல் வெளியிடவில்லை. நான் விபத்து என்றே கூறியிருந்தேன். கடற்படை கூறியதாக பரவிய கருத்தையே நான் நிராகரித்தேன்.'' என அவர் தெளிவுப்படுத்தினார்.
அத்துடன், இலங்கையை அண்மித்த கடற்பரப்பிற்குள் நீர்மூழ்கி கப்பலொன்று ஊடுருவுவதை அவதானிக்கும் தொழில்நுட்ப வசதி இலங்கையிடம் இல்லை என பிபிசி தமிழ், கடற்படை ஊடகப் பேச்சாளரிடம் வினவியது.
''எந்தவொரு படகையும் அவதானிக்க முடியும். எனினும், எமது கடல் பரப்பிற்குள் வருவதில் தான் பிரச்னை உள்ளது. எமது கடல் பரப்புக்கு வருகைத் தர வேண்டும் என்றால் மாத்திரமே அறிவிக்க வேண்டும். சர்வதேச கடலில் பயணிக்க எங்களிடம் அறிவிக்க தேவையில்லை. முழு இலங்கையையும் அவதானிக்கும் திட்டமொன்று இல்லை. ஏதேனும் தகவல் கிடைத்தால் அந்த இடத்தை மாத்திரமே அவதானிக்க முடியும். கடலுக்குள் அவதானிக்கும் வசதி இலங்கையிடம் இல்லை.'' என அவர் குறிப்பிட்டார்.
நீர்மூழ்கி தாக்குதல் என்பதை மறுத்த இலங்கை கடற்படை
இரான் கப்பல் மூழ்கியதற்கு நீர்மூழ்கி தாக்குதல் தான் காரணம் என்கிற செய்தியை தாங்கள் முற்றிலும் மறுப்பதாக இலங்கை கடற்படையின் செய்தித் தொடர்பாளர் புத்திக்க சம்பத் தெரிவித்தார்.
இன்று செய்தியாளர் சந்திப்பின்போது வெளிநாட்டு ஊடகங்களை மேற்கோள்காட்டி, இரானிய கப்பல் நீர்முழ்கி தாக்குதலுக்கு உள்ளானதாக கடற்படை தெரிவித்துள்ளதா என்கிற கேள்வி அவரிடம் முன்வைக்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், "கடற்படை தரப்பிலிருந்து இந்தக் கூற்றை முழுவதுமாக நிராகரிக்கிறோம்." என்றார்.
''விபத்து நேர்ந்த விதம் தொடர்பில் பின்னரான காலத்தில் நடத்தப்படும் விசாரணைகளின் ஊடாகவே உறுதிப்படுத்த முடியும். விசேட நிபுணத்துவத்துடனான விசாரணை குழு, தொழில்நுட்ப விசாரணைகள் குழுவின் ஊடாக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும். அதற்காக அதிகாரம் உள்ள நிறுவனங்கள் தொடர்புப்பட வேண்டும். வெளிநாட்டு ஊடகங்கள் வெளியிட்ட தகவலை நிராகரிக்கின்றோம்." என்று கூறினார்.
இரானிய கப்பலின் நிலை பற்றி பிபிசி சிங்களா விசாரித்தபோது, கடற்படை சென்ற சமயத்தில் கப்பல் முழுவதும் மூழ்கியதாக அவர் தெரிவித்தார்.
"அபயக் குரல்கள் எங்களுக்கு கிடைத்தபோது சம்பவம் நடந்த இடத்திற்கு கடற்படை கப்பல் சென்றடைந்தன, ஆனால் அங்கு எண்ணெய் படலங்கள், சில உயிர்காக்கும் படகுகளை மட்டுமே கண்டோம். அங்கு எந்த இரானிய கப்பலும் இல்லை. அது மூழ்கியிருந்தது." என்றும் தெரிவித்தார்.
கப்பல் மூழ்கியதற்கான காரணத்தை தற்போது வரை இலங்கை ராணுவத்தால் உறுதிசெய்ய முடியவில்லை.
தொடர்ந்து பேசிய அவர், "விபத்துக்குள்ளான கப்பலில் காணாமல் போயுள்ளவர்களை மீட்கும் பணிகள் தற்போதும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.32 பேரை பாதுகாப்பாக மீட்டெடுத்துள்ளோம். தொடர்ந்தும் தேடுதல்கள் முன்னெடுக்கப்படுகின்றன." என்றார்.
கப்பல் மூழ்கி வரும் இடத்திலிருந்து சில உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். "'இந்தச் சந்தர்ப்பத்தில் குறித்த கடலை அண்மித்த பகுதியிலிருந்து உயிரிழந்த சில மனித உடல்களை நாங்கள் மீட்டுள்ளோம். இந்த சடலங்கள் கப்பலில் கடமையாற்றிய ஊழியர்களுடையதாக இருக்கலாம் என நாங்கள் சந்தேகிக்கின்றோம். எனினும், எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளின் ஊடாகவே இந்த சடலங்கள் இந்த கப்பலில் பணியாற்றியவர்களுடையதா என்பது உறுதிப்படுத்தப்படும்.'' என அவர் குறிப்பிடுகின்றார்.
கப்பல் மூழ்கியதற்கான காரணம் தெரியவில்லை - பாதுகாப்பு இணை அமைச்சர்
இரானிய கப்பல் விபத்தில் சிக்கியதற்கான உண்மையான காரணம் தெரியவில்லை என, பாதுகாப்பு இணை அமைச்சர் அருணா ஜெயசேகரா பிபிசி சிங்கள மொழி சேவையிடம் தெரிவித்துள்ளார்.
"கடற்படை இதனை விசாரித்து வருகிறது. காரணம் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. அதே நேரத்தில், உறுதியான காரணத்தை எங்களால் கண்டறிய முடியவில்லை," என்று அவர் கூறினார்.
கப்பலின் நிலை பற்றி தற்போது கருத்து தெரிவிக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
காயமடைந்தவர்களின் நிலை என்ன?
கப்பலில் இருந்தவர்களில் காயமடைந்த 32 பேர் காலி தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, மருத்துவமனையின் இயக்குநர் மருத்துவர் எஸ்.டி.யு.எம் ரங்கா பிபிசியிடம் தெரிவித்தார்.
"32 நோயாளிகள் உள்ளனர். பலருக்கு வெட்டுக் காயங்களும், தீக்காயங்களும் எலும்பு முறிவும் ஏற்பட்டுள்ளது. அதில் ஒருவரின் நிலை மோசமான நிலையில் உள்ளது. 7 பேருக்கு மிதமான அளவிலும் மற்றவர்களுக்கு சிறிய அளவிலும் காயங்கள் ஏற்பட்டுள்ளன. காயம் ஏற்பட்டதற்கான காரணத்தை உறுதியாக கூற முடியவில்லை" என்றும் அவர் தெரிவித்தார்
அந்தக் கப்பல் குழுவினரை மீட்க இலங்கை கடற்படை மற்றும் விமானப்படை கூட்டாக இணைந்து செயல்பட்டதாகவும் சம்பத் துய்யகொந்தா தெரிவித்தார்.
இலங்கையின் கடல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் அந்தக் கப்பல் ஆபத்தில் இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
கப்பலில் உள்ள குழுவினரை மீட்க இலங்கை கடற்படை கப்பல் ஒன்று அனுப்பப்பட்டதாக, கடற்படை செய்தித் தொடர்பாளர் புத்திக்க சம்பத் தெரிவித்தார். சம்பவம் நிகழ்ந்த பகுதியில் கண்காணிப்பு மேற்கொள்ள இலங்கை விமானப் படையின் விமானம் இன்று (மார்ச் 4) அனுப்பப்பட்டதாக, விமானப் படை செய்தித் தொடர்பாளர் நலின் வெவாகும்புரா தெரிவித்தார்.
காலை 5 மணிக்கு கிடைத்த தகவல்
இரானிய கடற்படைக்குச் சொந்தமான ஐஆர்ஐஎஸ் டேனா "விபத்துக்கு உள்ளானதாக" இலங்கை வெளியுறவு அமைச்சர் விஜிதா ஹெராத் நாடாளுமன்றத்தில் கூறினார்.
இன்று காலை 05:08 மணிக்கு கப்பல் மூழ்குவதாக கடற்படைக்கும் கடலோரக் காவல் படைக்கும் தகவல் கிடைத்தது என்றும் அவர் தெரிவித்தார்.
காலை 6 மணிக்கு இலங்கை கடற்படை மற்றும் விமானப்படை தலையிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
"6 மணிக்கு முதல் கடற்படை கப்பல் சென்றது, 7 மணிக்கு இரண்டாவது கப்பல் சென்றது. இந்த மீட்புப் பணியில் விமானப்படையும் கடற்படையும் ஈடுபட்டது," என்றார் விஜிதா ஹெராத்.
கப்பலில் 180 பேர் வரை இருந்ததாகவும் 30 பேர் தீவிர ஆபத்தில் இருந்ததாகவும் தகவல் கிடைத்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஐஆர்ஐஎஸ் டேனா கப்பல்
ஐஆர்ஐஎஸ் டேனா கப்பல் இரானிய கடற்படையின் 86 பிரிவைச் சேர்ந்தது. மிகவும் பேசப்பட்ட இந்தக் கப்பல் 2022-2023 ஆண்டுகளில் இரானிய கடற்படையின் பலத்தைக் காட்டுவதற்காக உலகம் முழுவதும் 65,000 கிமீ கடல் பயணத்தை மேற்கொண்டது.
இந்தக் கப்பல் முழுவதும் இரானால் உருவாக்கப்பட்டது. இரானின் பண்டர் அப்பாஸில் உள்ள ஷாஹித் டார்விஷ் கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்பட்டது. 1,500 டன் எடை கொண்ட இந்தக் கப்பல் 95 மீட்டர் நீளம் கொண்டது.
இந்தக் கப்பலில் நூர் அல்லது காதர் என்று அழைக்கப்படும் கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள், 76 மிமீ ஃபஜர்-27 கடற்படை துப்பாக்கி, 30மிமீ ஆயுத அமைப்பு, ஆயுதங்கள் மற்றும் தளத்திலிருந்து வான் நோக்கிச் செலுத்தும் ஏவுகணைகள் ஆகியவை உள்ளன.
உலகளாவிய வர்த்தகத்தை காப்பதிலும் கடற்கொள்ளையை எதிர்கொள்வதிலும் மற்றும் நீண்ட தூர கடற்சார் திட்டங்களை நடத்துவதிலும் இரானின் திறன்களை மேம்படுத்துவதற்காக இந்தக் கப்பல் வடிவமைக்கப்பட்டுள்ளது என இரான் கடற்படை தெரிவிக்கிறது.
இந்தியா வந்திருந்த கப்பல்
இந்தக் கப்பல் கடந்த பிப்ரவரி 17-ஆம் தேதி இந்தியாவில் விசாகப்பட்டினம் வந்திருந்தது.
இந்திய கடற்படையின் எக்ஸ் தளப் பதிவின் படி, இந்த கப்பல் கடற்படை பயிற்சியில் கலந்துகொள்வதற்காக வந்திருந்தது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
முக்கிய செய்திகள்
சிறப்புச் செய்திகள்
மனதை தொட்டவை
தகவல் இல்லை