யுக்ரேன் முதல் ஜானி டெப் வரை: 2022இல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட நிகழ்வுகள் என்ன?

ஜானி டெப், ஆம்பர் ஹெர்ட்

பட மூலாதாரம், Getty Images

2022 ஆம் ஆண்டு கூகுள் தேடுபொறியில் உலகம் முழுவதும் தேடப்பட்டவற்றில் முதல் மூன்று இடங்களில் முறையே வோர்டல் (Wordle), யுக்ரேன், ஜானி டெப் ஆகிய வார்த்தைகள் இடம்பெற்றுள்ளன.

2022ஆம் ஆண்டு கூகுளில் நாம் அதிகமாகத் தேடியது எது என்பதன் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.

அதிகமாக தேடப்பட்டவை எது என்பதை ஆராயும்போது நமக்கு சில சுவாரஸ்யமான தகவல்கள் கிடைக்கின்றன.

வோர்டல்

பட மூலாதாரம், Getty Images

வோர்டல் (Wordle) மற்றும் கிரிக்கெட்

வேல்ஸ் நாட்டை சேர்ந்த மென்பொருள் பொறியாளர் ஜோஸ் வோர்டல் என்பவர், தமது பார்ட்னருக்கு வித்தியாசமான பரிசு தரும் வகையில் இணைய அடிப்படையிலான வார்த்தை விளையாட்டு ஒன்றை உருவாக்கினார். இதைப்பற்றி அறிந்து கொள்வதற்காக 2022ஆம் ஆண்டில் வோர்டல் என்ற வார்த்தை கூகுளில் அதிகம் பேர் தேடிய வார்த்தைகளில் முதலிடத்தைப் பிடித்திருக்கிறது.

வோர்டல், 2021ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அந்த விளையாட்டை உருவாக்கியதிலிருந்தே வைரல் ஆக தேடப்பட்டு வருகிறது. வோர்டலை நியூயார்க் டைம்ஸ் நிறுவனம் இந்த ஆண்டு ஜனவரி 31ஆம் தேதி அதனை உருவாக்கியவரிடமிருந்து வாங்கியது முதல் இந்த விளையாட்டுக்கான ஆர்வம் அதிகரித்து வருகிறது. இது வெளியில் சொல்லப்படாத ஏழு இலக்க தொகை கொண்டு வாங்கப்பட்டது என்றும் சொல்லப்படுகிறது.

நியூயார்க் டைம்ஸ் வாங்கிய பிறகு அந்த விளையாட்டை விளையாடுவது எப்படி என்பதற்கான வழிகளை இணையத்தில் பலரும் தேடியதால் இந்த வார்த்தை அதிக தேடுதல் பட்டியலில் இடம்பிடித்துள்ளது.

2022ஆம் ஆண்டின் தேடுதல் பட்டியலில் அதிகமாக நடப்பு நிகழ்வுகள் இடம்பிடித்திருந்தாலும், ஒரு விளையாட்டு போட்டி குறித்து அதிகமாக தேடப்பட்டுள்ளது. அது தேடுதல் பட்டியலில் இரண்டாம் இடம்பிடித்துள்ளது. இதனைத் தொடர்ந்து யுக்ரேன், இரண்டாம் எலிசபெத் ராணி மரணம் ஆகியவை இந்த பட்டியலில் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.

செய்திகளில்...

செய்திகள் பிரிவில் யுக்ரேன் மீது ரஷ்யா படையெடுத்தது குறித்த தேடல் ஆதிக்கம் பெற்றிருந்தன. ராணி இரண்டாம் எலிசபெத் மரணம் குறித்த செய்தி யுக்ரேனுக்கு அடுத்த இடத்தைப் பிடித்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அமெரிக்க இடைத்தேர்தல், பிரேசில் மற்றும் பிலிப்பைன்ஸில் தேர்தல்கள் குறித்தும் அதிகமாக தேடப்பட்டுள்ளன.

குரங்கம்மை நோய் குறித்த கவலைகள் பரவலாக இருந்ததால் தேடுதலில் முதல் ஐந்து இடத்தை பெற்றுள்ளது. கோவிட் 19 குறித்த தேடுதல் என்பது முதல் 10 வரிசையில் கூட இடம்பிடிக்கவில்லை.

வில் ஸ்மித்

பட மூலாதாரம், Getty Images

பிரபலங்களுக்கு இடையேயான மோதல்

திரைப் பிரபலங்களை பொறுத்தவரை 2022ஆம் ஆண்டு வழக்கில் சிக்கியவர்கள், துயரத்தில் மூழ்கியவர்கள் பற்றியே மக்கள் அதிக அளவுக்கு தேடினர்.

ஜானி டெப், மற்றும் அவரது முன்னாள் மனைவியும் நடிகையுமான ஆம்பர் ஹார்ட் இடையே நடந்த நீதிமன்ற வழக்கு விசாரணை குறித்து கூகுளில் அதிகம் தேடப்பட்டுள்ளது.

இவருக்கு அடுத்த இடத்தைப் பிடித்தவர் வில் ஸ்மித். இவர், இந்த ஆண்டின் ஆஸ்கர் விருது விழாவில் அதிகம் பேசப்பட்ட நபராக இருந்தார். விழாவை தொகுத்து வழங்கிய கிறிஸ் ராக்கை கன்னத்தில் அறைந்ததால் சர்ச்சைக்கு உள்ளானார்.

சூப்பர் ஹீரோ படங்கள் இன்னும் முதலிடத்தில் சூப்பர் ஹீரோ திரைப்படங்கள் 2022 இல் சிறிது பின்னடைவை சந்தித்துள்ளன - அவை இந்த ஆண்டு அதிக வசூல் செய்த படங்களின் பட்டியலில் முதலிடம் பெறத் தவறிவிட்டன. மார்ட்டின் ஸ்கோர்செஸி மற்றும் குவென்டின் டொரோன்டினோ போன்ற புகழ்பெற்ற இயக்குனர்களால் இந்த வகை படங்கள் விமர்சிக்கப்பட்டன. எனினும் அவை, தேடுதலில் ஆதிக்கம் செலுத்தின.

Thor: Love and Thunder, பிளாக் ஆடம் ஆகியவை கூகுளில் மிகவும் தேடப்பட்ட படங்கள் வரிசையில் இடம்பிடித்தன. அதேபோல டாம் க்ரூஸ் நடித்த Top Gun: Maverick திரைப்படம் சூப்பர் ஹீரோ படங்களை காட்டிலும் அதிகம் பார்க்கப்பட்டது.

புதிய தோர்

பட மூலாதாரம், Marvel Studios

பாடல் தேடல் 2022ஆம் ஆண்டு கூகுளின் இசைத்தேடலுக்கான அம்சமான "hum to search" (இசையை அடையாளம் காண AI பயன்படுத்துகிறது) எனும் தேடு பொறியில் பாகிஸ்தான் பாடகர்கள் ஷே கில் மற்றும் அலி சேத்தி ஆகியோர் எழுதிய ‘பசூரி’ அதிகம் தேடப்பட்டது. இதனால் இது BTSஐ முந்தியது.

டிஸ்னி ப்ளஸ் நிகழ்ச்சியான மிஸ் மார்வெலின் எபிசோடில் இடம்பெற்ற பாடலுக்குப் பிறகு, கொரிய பாப் இசைக்குழுவின் சிங்கிள் பட்டரை விட அதன் புகழ் அதிகரித்தது. பாரம்பரிய பாடல் தேடல் பட்டியலில் பசூரி இரண்டாவது இடத்தையும் பெற்றது. இது தவிர இந்தப்பட்டியலில் தக் இங்கின் உசாய் என்ற பாடலை எழுதிய இந்தோனேசிய பாப் நட்சத்திரமான கெய்ஸ்யா லெவ்ரோன்கா என்ற ஆசிய வெற்றியாளரும் இடம் பெற்றார்.

பதின்பருவ தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பதின்பருவ வயதினருக்கான தொடரான Euphoria குறிப்பிடத்தக்க வகையில் பெரும் வெற்றியை பெற்றது. டீன் டிவி வகை தேடல்களில் முன்னிலையும் பெற்றிருந்தது. டீன் ஏஜ் வாழ்க்கையின் சவால்களை அவர்களின் உள்ளுணர்வுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்த தொடர் இந்த ஆண்டு இரண்டாவது சீசனில் நுழைந்தது. எனவே இது குறித்த தேடல்கள் அதிகரித்தது. HBO தொடரான ‘ஹவுஸ் ஆஃப் தி டிராகன்’, ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ தொடரால் இரண்டாம் இடத்துக்குப் பின்னுக்குத் தள்ளப்பட்டது. அமேசானின் காவியமான (பெரிய பட்ஜெட்டில் தயாரானது) லார்ட் ஆஃப் தி ரிங்க்ஸ்: தி ரிங்க்ஸ் ஆஃப் பவர் சீரிஸ் முதல் 10 இடங்களில் கூட இடம் பெறவில்லை.

காணொளிக் குறிப்பு, இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா பேட்டி: பாபா யூட்யூபிலும் கிடையாது; ஓடிடியிலும் கிடையாது

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: