காணொளி: இரான் மற்றும் அமெரிக்கா, இஸ்ரேல் இடையிலான மோதலின் தற்போதைய நிலை என்ன?
இரான் மீது சனிக்கிழமை தொடங்கிய அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல் இன்று 5வது நாளை எட்டியுள்ளது.
இடைப்பட்ட நாட்களில் இரான், இஸ்ரேல் மீதும் அமெரிக்க தளங்கள் உள்ள மத்திய கிழக்கு நாடுகள் மீது பதில் தாக்குதல்களை நடத்தியது.
இதற்கிடையில், இரானின் அடுத்த அதி உயர் தலைவர் யார் என்பது பற்றிய தகவலும் வெளியாகியுள்ளது.
இரான் மற்றும் அமெரிக்கா, இஸ்ரேல் இடையிலான மோதலின் தற்போதைய நிலை என்ன? அடுத்த அதி உயர் தலைவர் யார்? இந்த காணொளியில் பார்க்கலாம்.
காமனெயி இறுதிச்சடங்கு எப்போது?
கடந்த சனிக்கிழமை நடந்த தாக்குதலில் கொல்லப்பட்ட இரான் முன்னாள் அதி உயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயியின் இறுதிச்சடங்கு இன்று நடக்கவுள்ளதாக, அந்நாட்டின் அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இரான் அரசு ஊடகங்களின் தகவலின்படி, காமனெயியின் இறுதிச்சடங்கு உள்ளூர் நேரப்படி மாலை 6.30 மணிக்கு தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த அதி உயர் தலைவர் யார்?
மறைந்த காமெனெயின் மகன் மொஜ்தபா காமெனெயி புதிய அதி உயர் தலைவராக உருவெடுத்து வருவதாக, இரானிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், இந்த முடிவு இன்றே எடுக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி பேசிய இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ், "இஸ்ரேலை அழிக்க திட்டமிடுவது, அமெரிக்காவை அச்சுறுத்துவது மற்றும் இரான் மக்களை அடக்குவது போன்ற செயல்களை தொடர்ந்தால் அடுத்து வரும் எந்த தலைவரும் இலக்காக கருதப்படுவார்" எனத் தெரிவித்துள்ளார்.
தொடரும் தாக்குதல்கள்
கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி தாக்குதல் தொடங்கியதில் இருந்து இரானில் 1,097 பேர் உயிரிழந்ததாக அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட மனித உரிமை செயற்பாட்டாளர்கள் செய்தி நிறுவனம் (HRANA) தெரிவித்துள்ளது.
அதில் 10 வயதுக்கு உட்பட்ட 181 குழந்தைகளும் அடங்குவர். மேலும் 5,402 பேர் காயமடைந்துள்ளனர்.
தற்போது இரானில் உள்ள ராணுவ இலக்குகளை இஸ்ரேல் பாதுகாப்புப் படை தாக்கியுள்ளதாக, அதன் அரபு செய்தித் தொடர்பாளர் அவிச்சே அட்ரே அறிவித்துள்ளார்.
இந்த தாக்குதல்கள், பாசிஜ் தலைமையகத்தை குறிவைத்ததாக கூறப்படுகிறது. பசிஜ் என்பது இஸ்லாமிய புரட்சிக்கர காவல்படை உடன் உடன் தொடர்புடைய ஒரு துணை ராணுவப்படையாகும்.
மேலும், ஏவுகணை ஏவுதளங்கள், பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் தளவாட இயக்குநரகம் ஆகியவவையும் இலக்காக கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரான் அரசின் உட்கட்டமைப்புகளை குறிவைத்து தாக்குதல்கள் மேலும் தீவிரப்படுத்தப்படும் என இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
ஏற்கெனவே தொடரும் பதற்றமான சூழலுக்கு மத்தியில் அண்மையில், கத்தார் மீது இரான் இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியுள்ளதாக கத்தாரின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதில் ஒன்றை கத்தாரின் வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் தடுத்துள்ளன. மற்றொரு ஏவுகணை, அந்த பகுதியில் உள்ள மிகப்பெரிய அமெரிக்க ராணுவத் தளமான அல் உதெய்த் அமெரிக்க விமானப்படைத் தளத்தை தாக்கியுள்ளது. இதில் எந்த உயிரிழப்புகளும் இல்லை என்பதையும் கத்தார் உறுதிப்படுத்தியுள்ளது.
இதற்கு மத்தியில் லெபனானில் இருந்தும் ஏவுகணைகள் மற்றும் பிற ஏவுதளங்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
மறுபுறம் இஸ்ரேல் மீண்டும் லெபனானில் வான்வழித் தாக்குதல்களை தொடங்கியுள்ளது.
இந்நிலையில், துபையில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு அருகே டிரோன் தாக்குதலுக்குப் பிறகு தீ விபத்து ஏற்பட்டது.
அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ, தூதரக கட்டடத்துக்கு அருகிலுள்ள கார் நிறுத்துமிடத்தை ஒரு ட்ரோன் தாக்கியதை உறுதிப்படுத்தினார்.
சமீபத்திய தகவலின்படி சௌதி அரேபியாவின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமாக கருதப்படும் ராஸ் டனுரா (Ras Tanura Refinery) மீது டிரோன் தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முதற்கட்ட தகவலின்படி, "இந்த தாக்குதல் டிரோன் மூலம் மேற்கொள்ளப்பட்டது. இதில் எந்த சேதமும் ஏற்படவில்லை" எனவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
டிரம்ப் மீது குற்றச்சாட்டு
அடுத்தடுத்து தொடரும் தாக்குதல்களுக்கு மத்தியில் இரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி தனது சமூக வலைதளத்தில் அதிபர் டிரம்ப் மீது குற்றம்சாட்டி கருத்து பதிவிட்டுள்ளார். அதில் அணு பேச்சுவார்த்தைகளை ஒரு ரியல் எஸ்டேட் ஒப்பந்தம் போல நடத்துவதாக டிரம்ப் மீது குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், "பெரிய பொய்கள், உண்மைகளை மறைக்கும் போது, யதார்த்தமற்ற எதிர்பார்ப்புகள் எப்போதும் நிறைவேற முடியாது. "இதன் விளைவு? கோபத்தால் பேச்சுவார்த்தைக்கான இடத்தை குண்டுவீசி சிதைப்பதே." என அவர் தெரிவித்துள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு