தடுமாறிய இந்திய அணியை இஷான் கிஷனின் ஆட்டம் கரை சேர்த்தது எப்படி?

காணொளிக் குறிப்பு, தடுமாறிய இந்திய அணியை இஷான் கிஷனின் ஆட்டம் கரை சேர்த்தது எப்படி?
தடுமாறிய இந்திய அணியை இஷான் கிஷனின் ஆட்டம் கரை சேர்த்தது எப்படி?

பாகிஸ்தானுக்கு எதிரான டி20 உலகக் கோப்பை போட்டியில் 61 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் ஆண்கள் டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானை எட்டாவது முறையாக வீழ்த்தியது இந்தியா. பெரும் எதிர்பார்ப்புடன் நடந்த இந்த போட்டியில் இந்தியா ஆதிக்கம் செலுத்தியது எப்படி?

டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்ய இந்தியா முதலில் பேட் செய்தது. இந்திய அணியின் இந்த வெற்றியில் இஷான் கிஷனின் பேட்டிங் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதே என்றே குறிப்பிடலாம். அதிரடியாக விளையாடிய அவர், 40 பந்துகளில் 77 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

முதல் ஓவரின் முடிவில் இந்தியா 1 ரன்னுக்கு 1 விக்கெட் என்ற நிலையில் இருந்தது. ஆனால், எந்தவித நெருக்கடியையும் உணராமல் தன் வழக்கமான அதிரடி பாணியில் ஆடினார் இஷான் கிஷன். அபிஷேக் ஷர்மா ஆட்டமிழந்த அடுத்த பந்தே, ஷஹீன் அப்ரிடி பந்துவீச்சில் சிக்ஸர் அடித்தார்.

அப்ரார் அஹமது பந்துவீச வந்தபோதும் அதே போல அவரின் முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்தார் இஷன். சதாப் கான் வந்தபோதும் அதுவே நடந்தது.

அதேசமயம் இஷான் வெறுமனே அடித்து மட்டும் ஆடவில்லை. அடிக்கவேண்டிய பந்துகளை நேர்த்தியாக தேர்ந்தெடுத்து ஆடினார். அவர் எதிர்கொண்ட முதல் 37 பந்துகளில், ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வீசப்பட்ட பந்துகளில் அவர் வைத்திருந்த ஸ்டிரைக் ரேட் 120 தான். அதே சமயத்தில் லெக் ஸ்டம்புக்கு வெளியே வீசப்பட்ட பந்துகளில் அவர் வைத்திருந்த ஸ்டிரைக் ரேட் 257. இப்படி தன்னுடைய 'லைன்'-ஐ தேர்ந்தெடுத்து ஆடினார் இஷான்.

இந்தப் போட்டியில் இந்திய பேட்டர்களுக்கு பாகிஸ்தான் ஆஃப் ஸ்பின்னர் சயிம் அயூப் பெரும் சவால் கொடுத்தார். 4 ஓவர்களை வீசிய அவர் 25 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இஷான் கிஷன், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா என அவர் காலி செய்த அனைத்துமே பெரிய விக்கெட்டுகள்.

பெரும்பாலும் 'அரௌண்ட் தி ஸ்டம்ப்' வந்து ஸ்டம்ப் லைனில் சீராக வீசிக்கொண்டே இருந்தார் சயிம் அயூப். அதன் பலனாக ரன்கள் கட்டுக்குள் இருந்ததோடு விக்கெட்டுகளும் கிடைத்தன.

சயிம் அயூப் எடுத்த விக்கெட்டுகளின் காரணமாக இந்தியாவின் ரன்ரேட் வெகுவாக வீழ்ச்சியடைந்தது. இவர் கிஷனை வெளியேற்றியபோது இந்தியாவின் ரன்ரேட் 10.15 ஆக இருந்தது. ஆனால், அவரது 4 ஓவர்கள் முடிவடைந்தபோது இந்தியாவின் ரன்ரேட் 8.47 ஆக குறைந்தது.

மொத்தத்தில் 20 ஓவர் முடிவில் இந்தியா 7 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் குவித்தது. 176 ரன்கள் இலக்குடன் இன்னிங்ஸை தொடங்கிய பாகிஸ்தானுக்கு தொடக்கமே சொதப்பலாக அமைந்தது.

முதல் ஓவரின் நான்காவது பந்தில் சாஹிப்சாதா ஃபர்ஹான் ஒரு ரன் கூட எடுக்காமல் ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரிலேயே சயிம் அயூப் மற்றும் சல்மான் அகா விக்கெட்டை பும்ரா வீழ்த்தினார். அடுத்து வந்த பாபர் ஆஸமும் 5 ரன்களுக்கு ஆட்டமிழக்க 6 ஓவர் முடிவில் 4 விக்கெட்டை இழந்து 38 ரன்கள் மட்டுமே பாகிஸ்தான் எடுத்தது. அந்த இடத்திலேயே பெருமளவு பின்தங்கியது பாகிஸ்தான் அணி. அதிலிருந்து அவர்களால் கடைசி வரை மீளவே முடியவில்லை.

பாகிஸ்தான் பேட்டர்களில் உஸ்மான் கான் மட்டுமே ஓரளவு பெரிய இன்னிங்ஸ் ஆடினார். அவர் 34 பந்துகளில் 44 ரன்கள் எடுத்தார். மிடில் ஓவர்களில் இந்திய ஸ்பின்னர்கள் சிறப்பான லைன் மற்றும் லென்த்தில் தொடர்ச்சியாக வீச ரன் எடுப்பது அவர்களுக்கு சிரமமாக இருந்தது. அதனால், பெரிய ஷாட்கள் அடிக்க முற்பட்டனர். ஆட்டம் நடந்த பிரமதேசா ஸ்டேடியத்தில் பவுண்டரி மிகவும் பெரியது என்பதால் அந்த ஷாட்களில் பெரும்பாலானவை இந்திய ஃபீல்டர்களின் கைகளிலேயே விழுந்தன.

சீரான இடைவெளியில் தொடர்ந்து விக்கெட் விழ 18 ஓவர் முடிவில் 114 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது பாகிஸ்தான்.

இந்தப் போட்டி தொடங்குவதற்கு முன்பே ஆடுகளத்தில் ஸ்பின்னர்களின் ஆதிக்கம் அதிகம் இருக்கும் என்று பேசப்பட்டது. அதற்கு ஏற்றார்போல் இரு அணிகளுமே ஸ்பின்னர்களாக பிளேயிங் லெவனில் அதிகம் எடுத்துவைத்திருந்தன.

இந்தியா பேட்டிங் செய்தபோது பாகிஸ்தான் அணி 18 ஓவர்களை ஸ்பின்னர்களை வைத்தே பயன்படுத்தியது.

ஆனால், இந்திய அணி பாகிஸ்தானின் பாணியில் பயணிக்கவில்லை. எப்போதும் போல் ஹர்திக் பாண்டியா, ஜஸ்ப்ரித் பும்ரா இருவருமே ஸ்பெல்லைத் தொடங்கினார்கள். ஆனால், அதற்கும் பலன் கிடைத்தது என்றே சொல்லலாம்.

இந்த வெற்றியின் மூலம், 6 புள்ளிகள் பெற்ற இந்திய அணி சூப்பர் 8 வாய்ப்பை உறுதி செய்தது. இந்தியா அடுத்த போட்டியில் 18-ஆம் தேதி நெதர்லாந்து அணியுடன் மோதுகிறது. மூன்று போட்டிகளில் இரண்டு வெற்றிகளைப் பெற்றிருக்கும் பாகிஸ்தான், அதே நாளில் நமீபியாவுக்கு எதிராக ஆடுகிறது. அந்தப் போட்டியை வென்றால் பாகிஸ்தான் சூப்பர் 8 சுற்றுக்குள் நுழைவதை உறுதி செய்ய முடியும்.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு