சென்னை எண்ணூரில் அமோனியா கசிந்து காற்றில் கலந்தது எப்படி?

காணொளிக் குறிப்பு, சென்னை எண்ணூரில் ஆலையில் இருந்து கசிந்த அம்மோனியா காற்றில் கலந்ததால் மக்கள் பாதிப்பு.
சென்னை எண்ணூரில் அமோனியா கசிந்து காற்றில் கலந்தது எப்படி?

சென்னை எண்ணூர் பகுதியில் உள்ள கோரமண்டல் இன்டர்நேஷனல் லிமிடெட் எனும் ஒரு உர உற்பத்தி ஆலையிலிருந்து நேற்று நள்ளிரவு அமோனியா வாயு கசிவு ஏற்பட்டுள்ளது. இந்த அமோனியாவை சுவாசித்து மக்களுக்கு மூச்சுத் திணறல், கண் எரிச்சல் ஏற்பட்டுள்ளது.

பலர் பயத்தில் அந்த பகுதிகளை விட்டு வெளியேறினர். எண்ணூர் பகுதியில் மிக்ஜாம் புயல் ஏற்படுத்திய வெள்ளத்தினால் எண்ணெய்க் கழிவுகள் வெள்ள நீரில் கலந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை சமீபத்தில் ஏற்படுத்தியது. அப்பாதிப்பிலிருந்து பகுதி மக்கள் மீள்வதற்குள் இந்த சம்பவம் நடந்துள்ளது.

கோரமண்டல் ஆலைக்கான அமோனியா, எண்ணூர் துறைமுகத்திற்கு கப்பல்கள் மூலம் கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து கடலுக்கு அடியில் போடப்பட்டுள்ள 2.5 கி.மீ நீளமுள்ள பைப்லைன் வழியாக அந்த ஆலைக்கு அனுப்பப்படுகிறது.

நேற்று இரவு 11.30 மணிக்கு அந்த குழாயிலிருந்து அமோனியா கசிவு ஏற்பட்டது. அமோனியா கசிவு குறித்த தகவல் கிடைத்தவுடன், கோரமண்டல் ஆலையைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் குழுவினர் அங்கு விரைந்து சென்று கசிவை சரி செய்துவிட்டதாக கோரமண்டல் ஆலை சார்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நேற்று நள்ளிரவு ஊரைவிட்டு வெளியேறிய மக்கள், இன்று காலை மீண்டும் தங்கள் ஊருக்கு வந்து, கோரமண்டல் ஆலையின் நுழைவாயிலில் அமர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர். பிபிசியிடம் பேசிய லட்சுமி ஆலையை நிரந்தரமாக மூடினால் மட்டுமே தங்களது போராட்டத்தை கைவிடுவோம் என்றார்.

“இயல்பு நிலை திரும்பிவிட்டதாகக் கூறினர். ஆனால், நாங்கள் காலை வீட்டிற்கு திரும்ப வந்து, கதவைத் திறந்ததும், அதே புகை வாசம் இருந்தது. தற்போதும், அந்த வாசம் காற்றில் உள்ளது. இப்படி இருக்கையில், நிலைமை இயல்பாகிவிட்டதாக எப்படிக் கூற முடியும்,” எனக் கேட்டார்.

மாநில அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள குழு ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்தபின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. அதுவரையில், ஆலையின் செயல்பாடு தற்காலிகமாக நிறுத்தி வைக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

முழு விவரம் காணொளியில்...

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)