இரான்: பள்ளி தாக்குதலில் உயிரிழந்த மாணவிகளுக்கு இறுதிச்சடங்கு - தாய், தந்தையர் கண்ணீர்
பட மூலாதாரம், ISNA/WANA via Reuters
- எழுதியவர், கேப்ரியலா போமராய்
- வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்
தெற்கு இரானில் உள்ள ஒரு பள்ளியின் மீது அமெரிக்கா -இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக இரானிய அதிகாரிகள் கூறும் நிகழ்வில் கொல்லப்பட்ட மாணவிகள் மற்றும் ஊழியர்களுக்கு இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்டுள்ளன.
மினாப் நகரில் உள்ள பெண்கள் பள்ளி ஒன்றின் மீது சனிக்கிழமை தாக்குதல் நடத்தப்பட்டதில் 160-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக இரானிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இரானின் ராணுவத் தளங்கள் மற்றும் தலைமையை இலக்காகக் கொண்டு அமெரிக்காவும் இஸ்ரேலும் பரவலான தாக்குதல்களை நடத்தியபோது இச்சம்பவம் நிகழ்ந்தது.
இரானிய அதிகாரிகள் தெரிவித்துள்ள உயிரிழப்பு எண்ணிக்கையை பிபிசி நியூஸால் சுயாதீனமாக சரிபார்க்க முடியவில்லை.
அந்தப் பள்ளி இஸ்லாமிய புரட்சிகர காவல்படை தளத்திற்கு அருகில் அமைந்திருந்தது.
இந்தச் சம்பவம் குறித்த அறிக்கைகளை ஆய்வு செய்து வருவதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.
அதே சமயம், அந்தப் பகுதியில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாகத் "தெரியவில்லை" என்று இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது.
இரானிய அரசுத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட இந்த இறுதிச் சடங்கில், நூற்றுக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்த வீதிகளில் திரண்டனர்.
தங்கள் மகள்களை இழந்த தாய்மார்கள் மற்றும் தந்தையரின் துயரத்தை பின்னணியில் ஒருவர் விவரித்துக் கொண்டிருக்க, இஸ்லாமியக் குடியரசின் தேசியக் கொடி போர்த்தப்பட்ட சவப்பெட்டிகள் கூட்டத்திற்கு நடுவே சுமந்து செல்லப்பட்டன.
பட மூலாதாரம், Shutterstock
ஐஆர்ஜிசி தளத்திற்கு அருகே பள்ளி இருந்தது
சனிக்கிழமை காலை பள்ளியை மூன்று ஏவுகணைகள் தாக்கியதாக இரானிய அதிகாரிகள் தெரிவித்தனர். இது ஒரு ஐஆர்ஜிசி தளத்திலிருந்து சுமார் 600 மீட்டர் (1970 அடி) தொலைவில் அமைந்திருந்தது.
இரானில் சனிக்கிழமை முதல் வியாழக்கிழமை வரையிலான ஆறு நாட்கள் வேலை நாட்களாகும், வெள்ளிக்கிழமை மட்டுமே அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாகும். அப்படி என்றால், தாக்குதல் நடந்தபோது பள்ளியில் மாணவர்கள் இருந்திருக்கக் கூடும்.
இந்தச் சம்பவத்தை "காட்டுமிராண்டித்தனமான செயல்" என்றும், "ஆக்கிரமிப்பாளர்கள் செய்த எண்ணற்ற குற்றங்களின் பதிவில் மற்றொரு கருப்புப் பக்கம்" என்றும் இரானிய அதிபர் மசூத் பெசெஷ்கியன் அழைத்தார்.
நாட்டின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி, 160 பேருக்காகக் கல்லறைகள் தோண்டப்படும் புகைப்படத்தை சமூக ஊடகங்களில் பதிவிட்டு, " டிரம்ப் வாக்குறுதி அளித்த 'மீட்பு' என்பது உண்மையில் இப்படித்தான் இருக்கிறது" என்று கருத்துத் தெரிவித்துள்ளார்.
வெடிப்புச் சம்பவத்திற்குப் பிந்தைய காட்சிகளை பிபிசி உறுதிப்படுத்தியுள்ளது.
அந்த வீடியோக்களில், மக்கள் பீதியில் அலறிக் கொண்டிருக்க, ஒரு கட்டிடத்திலிருந்து புகை எழுவதும் அதன் அருகே மக்கள் கூடி நிற்பதும் தெரிகிறது.
பட மூலாதாரம், Mehr News/WANA via Reuters
பள்ளியை அமெரிக்க ஏவுகணை தாக்கியதா? ரூபியோ பதில்
சர்வதேச செய்தி நிறுவனங்கள் இரானுக்குள் சென்று தகவல்களைச் சேகரிப்பதை, அந்நாடு விசா வழங்க மறுப்பது கடுமையாகக் மட்டுப்படுத்துகிறது.
திங்களன்று, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோவிடம், அந்தப் பள்ளி கட்டடம் அமெரிக்க ஏவுகணையால் தாக்கப்பட்டதா என்று பிபிசி கேள்வி எழுப்பியது.
அதற்கு பதிலளித்த ரூபியோ, "அமெரிக்கா வேண்டுமென்றே ஒரு பள்ளியை இலக்கு வைக்காது. பொதுமக்களின் உள்கட்டமைப்புகளை இலக்கு வைப்பதில் எங்களுக்கு எந்த ஆர்வமும் இல்லை, சொல்லப் போனால் அதற்கான தூண்டுதலும் இல்லை," என்று கூறினார்.
"எதனால் இது நடந்தது என்பது குறித்த விவரங்கள் என்னிடம் இல்லை, ஆனால் அமெரிக்கா ஒரு பள்ளியை இலக்கு வைக்காது என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது," என்றும் அவர் தெரிவித்தார்.
அமெரிக்க ஊடகங்களில் வெளியான அறிக்கையின்படி, அமெரிக்க ராணுவத்தின் மத்திய கட்டளை மைய செய்தித் தொடர்பாளர் டிம் ஹாக்கின்ஸ் கூறுகையில், "இந்த அறிக்கைகளை நாங்கள் தீவிரமாக எடுத்துக்கொள்கிறோம்" என்றார்.
"பொதுமக்களை பாதுகாப்பது மிக முக்கியமானது, எதிர்பாராத பாதிப்புகளை குறைக்கத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க நாங்கள் தொடர்ந்து செயல்படுவோம்"எனவும் அவர் கூறினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
முக்கிய செய்திகள்
சிறப்புச் செய்திகள்
மனதை தொட்டவை
தகவல் இல்லை