காணொளி: போட்டியாளரை அறையும் போட்டியில் ரஷ்ய வீரரை வீழ்த்திய இந்தியர்
பஞ்சாப்பைச் சேர்ந்த ஜூஜர் சிங், இவர் தான் ‘ஸ்லாப்களின் சாம்பியன்’ இவர் அபுதாபியில் நடந்த ‘பவர் ஸ்லாப்’ போட்டியில் ரஷ்ய வீரரை வீழ்த்தியுள்ளார். பவர் ஸ்லாப் போட்டி என்பது வீரர்கள் ஒருவரையொருவர் அறைந்து கொள்ளும் ஒரு விளையாட்டு.
அக்டோபர் 24 அன்று அபுதாபியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் அவர் பெற்ற வெற்றியும், அவரது தனித்துவமான கொண்டாட்ட பாணியும் வைரலாகி வருகிறது.
டைகர் சிங் என்றும் அழைக்கப்படும் ஜுஜர் சிங், ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக உள்ளார். இந்த விளையாட்டு மற்றும் அதில் உள்ள ஆபத்துகள் குறித்தும் ஜுஜர் சிங் பேசினார்.
“மற்ற எல்லா சண்டை விளையாட்டுகளையும் போலவே, இந்த விளையாட்டும் எடைப் பிரிவுகளைக் கொண்டுள்ளது. 3 சுற்றுகள் இருக்கும், ஒவ்வொரு வீரருக்கும் மூன்று முறை அறைய வாய்ப்பு கிடைக்கும். நீங்கள் எதிராளியை நாக் அவுட் செய்ய வேண்டும். நாக் அவுட் இல்லையென்றால், புள்ளி முறை முடிவை தீர்மானிக்கும்.” என்றார் ஜுஜர் சிங்.
மேலும், “எதிராளி ஒரு ஃபவுல் அறை அறைந்தால் அது ஆபத்தில் முடியும். இது செவிப்பறையில் காயம் அல்லது சேதம், கண் காயம், மூளையில் ரத்தக்கசிவு, கழுத்து அல்லது முதுகெலும்பு காயம் ஆகியவற்றை ஏற்படுத்தும். சிறந்த விளையாட்டு உணர்வுடன் ஆடினால், இது பாதுகாப்பானது மற்றும் அவ்வளவு ஆபத்தான ஒன்று அல்ல.” என்றும் அவர் தெரிவித்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.



