ஐரோப்பிய நாடுகளின் ஆதரவை பெரும் யுக்ரேன் - உச்சி மாநாட்டுக்குப்பின் பிரிட்டன் பிரதமர் கூறியதென்ன?
போரை முடிவுக்கு கொண்டு வரவும், ரஷ்யாவிடம் இருந்து யுக்ரேனை பாதுகாக்கவும் யுக்ரேனுடன் இணைந்து செயல்பட பிரிட்டன் பிரதமர் ஸ்டார்மர் நான்கு அம்ச திட்டத்தை அறிவித்துள்ளார்.
பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் பிற நாடுகளை உள்ளடக்கிய கூட்டணியை அமைத்து முயற்சிகளை முன்னெடுப்போம் என்றும், யுக்ரேனுக்கு சார்பாக அமெரிக்காவையும் இருக்கச் செய்ய முயல்வோம் என்றும் அவர் கூறினார்.
"நாம் இன்று வரலாற்றில் ஒரு முக்கிய கட்டத்தில் இருக்கிறோம்" என்று 18 தலைவர்கள் பங்கேற்ற மாநாட்டின் முடிவில் ஸ்டார்மர் கூறினார். அந்த மாநாட்டில் யுக்ரேன் அதிபர் ஸெலன்ஸ்கி உள்ளிட்ட பெரும்பாலும் ஐரோப்பாவைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர்.
யுக்ரேன் ஒரு "வலுவான ஆதரவை" உணர்ந்ததாகவும், இந்த மாநாடு " பல காலமாக பார்த்திராத வகையில், ஐரோப்பிய ஒற்றுமையை மிக உயர்ந்த மட்டத்தில் காட்டியது" என்றும் ஸெலன்ஸ்கி கூறினார்.
வெள்ளை மாளிகையில் யுக்ரேன் அதிபருக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கும் இடையே வாக்குவாதம் நடந்த 2 நாட்களுக்குப் பிறகு லண்டனில் இந்த மாநாடு நடைபெற்றுள்ளது.
"உண்மையான அமைதி மற்றும் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்த அமெரிக்காவுடன் ஒத்துழைப்பதற்கான அடிப்படையைக் கண்டறிய நாங்கள் அனைவரும் ஐரோப்பாவில் ஒன்றிணைந்து செயல்படுகிறோம்" என்று மாநாட்டுக்குப் பிறகு ஸெலன்ஸ்கி கூறினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



