காணொளி: யுக்ரேனுக்கு பாதுகாப்பு வழங்குகிறதா அமெரிக்கா? டிரம்ப் சொன்னது என்ன?
யுக்ரேன் அதிபர் வொலோதிமிர் ஸெலென்ஸ்கி உடன் இணைந்து கொடுத்த செய்தியாளர் சந்திப்பின் போது அமெரிக்க அதிபர் டொனால்ட் கூறிய வார்த்தைகள் இவை. மேலும் இந்த சந்திப்புக்கு பிறகு ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் இடையேயான சந்திப்பின் போது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடனும் தொலைப்பேசியில் டிரம்ப் பேசியுள்ளார். திங்கிழமை வெள்ளை மாளிகையில் டிரம்ப் மற்றும் ஸெலென்ஸ்கி இடையே நடைபெற்ற சந்திப்பில் நடந்தது என்ன? விரிவாகப் பார்க்கலாம்.
யுக்ரேனில் ரஷ்யா முன்னெடுத்துள்ள போரை முடிவுக்குக் கொண்டு வரும் முயற்சியில் கடந்த வாரம் அலஸ்காவில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சந்தித்தார். அதைத் தொடர்ந்து, திங்கட்கிழமை டிரம்ப் யுக்ரேன் அதிபர் வொலோதிமிர் ஸெலென்ஸ்கியை வெள்ளை மாளிகையில் சந்தித்துப் பேசினார்.
மேலும், ஜெலன்ஸ்கியுடன் பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, பின்லாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களும் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர்.
பிப்ரவரியில் நடைபெற்ற சந்திப்பை போல இல்லாமல், இந்த முறை ஸெலென்ஸ்கியிடம் மாற்றம் தெரிந்தது. இம்முறை ஸெலென்ஸ்கி கோட்-சூட் அணிந்து வந்திருந்தார். டிரம்ப் - ஜெலன்ஸ்கி சந்திப்பு மிகவும் நட்பு ரீதியான ஒன்றாக இம்முறை அமைந்திருந்தது.
யுக்ரேன் போரை முடிவுக்கு கொண்டு வருவது பற்றிய விவாதத்தின் போது சில தருணங்களில் இருவருமே அவ்வப்போது சிரித்துக் கொண்டனர்.
இந்த முறை சில குடும்ப ரீதியிலான உறவுகளை ஏற்படுத்தவும் ஸெலென்ஸ்கி முயன்றார். யுக்ரேனின் முதல் பெண்மணியான தனது மனைவி ஒலெனா ஜெலன்ஸ்கா (Olena Zelenska), அமெரிக்க முதல் பெண்மணி மெலனிய டிரம்புக்கு (Melania Trump) எழுதிய கடிதத்தைக் கொடுத்தார். "இது உங்களுக்கு அல்ல, உங்கள் மனைவிக்கு" என்று அவர் டிரம்பிடம் கூறினார்.
வெள்ளை மாளிகை சந்திப்புகளுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், ஸெலென்ஸ்கி மற்றும் புதினுடன் முத்தரப்பு சந்திப்புக்கு ஏற்பாடு செய்ய முயல விரும்புவதாகக் கூறினார். அவர்கள் "ஏதாவது ஒன்றைச் செய்வார்கள்" என்ற உள்ளுணர்வு தனக்கு இருப்பதாகவும் அவர் கூறினார்.
"நாம் அனைவரும் ஒரு நீடித்த அமைதிக்காகப் பாடுபடும் போது உடனடி போர் நிறுத்தத்தை விரும்புவோம், ஒருவேளை அது போன்ற ஏதாவது நடக்கலாம். இந்த தருணத்தில் அது நடக்கவில்லை" என்று டிரம்ப் கூறினார்.
மற்ற போர்களில், முதலில் போர் நிறுத்தம் எதுவும் ஏற்படவில்லை என்றும், அது அவசியமா என்று தனக்குத் தெரியாது என்றும் டிரம்ப் தெரிவித்தார். முத்தரப்பு சந்திப்பு ஒப்புக் கொள்ளப்பட்டால், கைதிகள் பரிமாற்றங்களும் இருக்கும் என்றார் டிரம்ப்.
இரு தலைவர்களும் செய்தியாளர்களைச் சந்தித்த போது, யுக்ரேனுக்கு பாதுகாப்பு உத்தரவாதத்தை வழங்குவீர்களா? என டிரம்பிடம் கேள்வி முன்வைக்கப்பட்டது.
இதற்குப் பதிலளித்த டிரம்ப் "அது தற்போது வரையிலும் விவாதிக்கப்படவில்லை. ஆனாலும் நல்ல பாதுகாப்பை வழங்குவோம் " என கூறினார்.
வெள்ளை மாளிகையில் யுக்ரேன் மற்றும் ஐரோப்பியத் தலைவர்களுடனான பேச்சுவார்த்தைகளுக்கு நடுவே ரஷ்ய அதிபர் புதினை டிரம்ப் தொடர்பு கொண்டதாகத் தகவல்கள் வெளியாயின.
இதுகுறித்து வெள்ளை மாளிகை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. ஆனால், வெள்ளை மாளிகையில் ஸெலென்ஸ்கி மற்றும் ஐரோப்பியத் தலைவர்களுடனான பேச்சுவார்த்தைக்கு நடுவே புதினுடன் டிரம்ப் சுமார் 40 நிமிடங்கள் தொலைப்பேசியில் பேசினார் என்று ரஷ்ய அதிபர் மாளிகையான கிரெம்ளின் உறுதிப்படுத்தியுள்ளது.
டிரம்புடனான சந்திப்பை மிகவும் ஆக்கப்பூர்வமானது மற்றும் குறிப்பிடத்தக்கது என குறிப்பிட்ட ஜெலன்ஸ்கி, டிரம்ப் முத்தரப்பு சந்திப்பை நடத்த முயற்சி செய்து வருகிறார், அது நடைபெற்றால், யுக்ரேன் மகிழ்ச்சியடையும் என்று தெரிவித்தார்.
புதினுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைக்கும் நாங்கள் தயாராக இருப்பதாகவும் கூறிய அவர், போர்க்கள வரைபடத்தில் உள்ள பல விவரங்களை டிரம்புக்கு காட்டியதாகவும் கூறினார்.
ஒரு முழு அளவிலான அமைதி ஒப்பந்தத்தை விட ஒரு போர் நிறுத்தம் சற்று எளிதாக இருக்கலாம் என டிரம்ப் கூறியதை ஐரோப்பியத் தலைவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை.
ஜெர்மன் சான்சலர் ஃப்ரெட்ரிக் மெர்ஸ் "ஒரு போர் நிறுத்தம் ஏற்படாமல் அடுத்த சந்திப்பு நடைபெறும் என்பதை என்னால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை" என்று கடுமையாகப் பேசியிருந்தார். "எனவே அதை நோக்கி நமது வேலைகளை முடுக்கிவிடுவோம், ரஷ்யா மீது அழுத்தம் கொடுக்க முயல்வோம்" என்றும் அவர் கூறினார்.
இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி இதற்கு முன் ரஷ்யா அமைதியை நோக்கி நகர்வதற்கான எந்த அறிகுறியும் இல்லாத போது, இப்போது "ஏதோ ஒரு மாற்றம் நிகழ்ந்துள்ளது" டிரம்புக்கு நன்றி என்றார்.
இந்த வார்த்தைகளைப் பேசினாலும், ரஷ்யா ஆக்கிரமிப்புக்கு எதிர்காலத்தில் தாங்களும் உள்ளாகலாம் என்று நினைப்பதை ஐரோப்பியத் தலைவர்கள் வெளிப்படுத்தினர்.
"பாதுகாப்பு உத்தரவாதம் குறித்துப் பேசும் போது, ஐரோப்பியக் கண்டத்தின் பாதுகாப்பு குறித்தும் நாங்கள் பேசுகிறோம்" என்று பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோங் பிற ஐரோப்பியத் தலைவர்களிடம் பேசினார்.
வாஷிங்டன் டிசிக்கு வோலோடிமிர் ஸெலென்ஸ்கி சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களைப் பார்க்கும்போது, அலாஸ்காவில் விளாடிமிர் புதினுக்குக் கொடுக்கப்பட்ட வரவேற்புடன் ஒப்பிடும்போது ஸெலென்ஸ்கிக்கான வரவேற்பு மட்டுப்பட்டதாக இருப்பதாகவே தோன்றுகிறது என பிபிசி ரஷ்ய செய்தியாளர் லிஸா ஃபோக் எழுதுகிறார்.
மூன்று நாட்களுக்கு முன்பு, தனது விமானத்தில் இருந்து இறங்கிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு கொடுத்து டொனால்ட் டிரம்ப் நேரில் வரவேற்றார். இந்த வரவேற்பின்போது, அமெரிக்கப் போர் விமானங்கள் வானில் பறந்தன. இந்தக் காட்சி உலகம் முழுவதும் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.
ஆனால், இதற்கு நேர்மாறாக, ஸெலென்ஸ்கி விடியற்காலை நேரத்தில் வாஷிங்டனுக்கு வந்தபோது, அவருக்கான வரவேற்பு ஒப்பீட்டளவில் மட்டுப்பட்டதாகவே இருந்தது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



