திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு கலப்பு சர்ச்சை - ஆய்வக முடிவு கூறுவது என்ன?
செப்டம்பர் மாதம் 19ம் தேதி அன்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு திருமலா திருப்பதியில் வழங்கப்படும் லட்டுவில் பயன்படுத்தப்படும் நெய்யில் மாமிசக் கொழுப்பு கலக்கப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியின் கீழ் போடப்பட்ட ஒப்பந்தத்தின் கீழ், இந்த கலப்பட நெய் கோடிக்கணக்கான பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டுவில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்ற பகிரங்கர குற்றச்சாட்டை முன்வைத்தார்.
மதம் சார்ந்த விவகாரம் என்பதால் இந்தியா முழுவதும் இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சர்ச்சை குறித்து திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி ஷியாமளா ராவ் பதிலளித்துள்ளார்.
கடந்த ஜூன் 16 அன்று அவர் பொறுப்பேற்றதில் இருந்து நெய்யின் தரம் குறித்து தகவல்கள் சேகரித்து வந்ததாதவும், முதல்வர் சந்திரபாபு உத்தரவுப்படிதான் நெய்யின் தரம் குறித்த ஆய்வுகள் செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.
"லட்டுகளின் தரம் குறித்து, பக்தர்களிடம் இருந்து சில நாட்களாக தொடர்ந்து புகார்கள் வருகின்றன. இதனை அடுத்து, சமையலறை ஊழியர்களுடன் பொருட்களின் தரம், குறிப்பாக பயன்படுத்தப்படும் நெய்யின் தரம் குறித்து பேசியிருக்கிறேன். இதற்கு தீர்வு காண நெய்யின் மாதிரிகள் ஆய்வகப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது", என்று கூறினார்.
"கோயில் நிர்வாகத்தில் சோதனை வசதிகள் இல்லாததை நெய் நிறுவனங்கள் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனர். இந்த ஆய்வக முடிவுகள் அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது", என்று செய்தியாளர் சந்திப்பின் போது கூறினார்.
ஆய்வக முடிவுகள் கூறுவது என்ன?
தெலுங்கு தேசம் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அனம் வெங்கட ரமண ரெட்டி, குஜராத்தில் அமைந்திருக்கும் தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்திற்கு திருமலா திருப்பதி தேவஸ்தானத்தின் உணவு மாதிரிகளை அனுப்பியதாகத் தெரிவித்தார்.
ஆய்வகத்தில் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட உணவுகளில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
எஸ் என்ற மதிப்பீட்டில் குறிப்பிடப்பட்ட அளவுக்கு மேல் கொழுப்பு இருந்தால் அது வெளிப்புற கொழுப்பு என்று அறிவிக்கப்படும். எஸ்-இன் மதிப்பானது 95.68 முதல் 104.32-க்குள் இருக்க வேண்டும்.
சோயா, சூரியகாந்தி, ஆலிவ், மீன் எண்ணெய் அல்லது பாமாயில் போன்றவை வெளிப்புற கொழுப்பு என்று கருதப்படுகிறது.
இருப்பினும், இந்த ஆய்வக முடிவு தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்தால்தான் வழங்கப்பட்டது என்பதை பிபிசியால் உறுதி செய்ய இயலவில்லை.
தேவஸ்தான சங்கத் தலைவர்கள் கூறுவது என்ன?
திருமலா திருப்பதி தேவஸ்தான ஊழியர்கள் சங்கத்தின் கௌரவ தலைவர் கந்தரபு முரளி, முதல்வரின் கருத்தை விமர்சனம் செய்தார்.
லட்டுவில் விலங்கு கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாகக் கூறுவது திருமலை தேவஸ்தான ஊழியர்களை அவமதிக்கும் செயல் என்று கூறினார்.
தேவஸ்தானத்தில் இருக்கும் ஆய்வகத்தில் அனைத்து விதமான உணவுப் பொருட்களும் முறையாக சோதிக்கப்பட்டே எந்தவிதமான பிரசாதமும் தயாரிக்கப்படுகிறது. பரிசோதனைகள் முடிவுற்ற பிறகே பயன்பாட்டிற்கும் வைக்கப்படுகிறது என்றும் அவர் கூறினார்.
மத்திய அரசின் குழுவால் சோதிக்கப்படும் உணவுப் பொருட்கள் முறையாகப் பரிசோதிக்கப்பட்ட பிறகே பிரசாதத்திற்கு வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
முழுமையான தகவல்களை இந்த காணொளியில் காணலாம்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



