காணொளி: சாட்ஜிபிடி-யிடம் மனநல ஆலோசனை கேட்பது ஆபத்தா?

காணொளிக் குறிப்பு, மனநல உதவிக்கு ஏ.ஐ- பலனளிக்குமா அல்லது ஆபத்தில் முடியுமா?
காணொளி: சாட்ஜிபிடி-யிடம் மனநல ஆலோசனை கேட்பது ஆபத்தா?

பணி சார்ந்து ஏ.ஐ செயலிகளை பயன்படுத்தி வந்த இளம் தலைமுறையினர் தற்போது தங்களின் தனிப்பட்ட உளவியல் பிரச்னைகளுக்கும் அதனை பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.

ஆனால், இது பலனளிக்குமா? அல்லது ஆபத்தில் முடியுமா? மனநலன், உறவுகள் சார்ந்து பிரச்னைகளுக்கு ஏ.ஐ-யின் உதவி பெறுவது என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும்? இந்த காணொளியில் பார்க்கலாம்.

ஏ.ஐ-யின் வளர்ச்சிக்குப் பிறகு பெரும்பாலானோர் தங்கள் அன்றாட வாழ்வில் ஏ.ஐ-ஐ பயன்படுத்தி வருகின்றனர். அதில், உளவியல் தொடர்பான பயன்பாடும் அடங்கும்.

பெரும்பாலும் உடனடித் தீர்வைத் தேடியே ஏ.ஐ செயலிகளை இளைஞர்கள் நாடுகின்றனர் என்று துறை சார்ந்த நிபுணர்கள் கூறுகின்றனர்.

இது தொடர்பாக பெங்களூருவில் உள்ள மனநல ஆலோசகர் ஆர்.அர்ச்சனா கூறும்போது, "இளைஞர்கள் பெரும்பாலும், நேர மேலாண்மை, காதல் பிரச்னைகள், வேலையில் கவனக்குறைவு போன்ற காரணங்களுக்காக ஏ.ஐ செயலிகளை பயன்படுத்துகின்றனர். சில சமயங்களில் அது உண்மையில் உதவியாக இருக்கும்." என்கிறார்.

ஏ.ஐ உதவியை நாட காரணம் என்ன?

உலகம் இணையத்தால் இணைந்திருந்தாலும், தனிமை இன்னும் ஒரு பெரிய பிரச்னையாகவே உள்ளது. ஆனாலும் இளைஞர்கள் ஏ.ஐ-யை நாடுவதற்கு காரணம் தனிமை மட்டும் அல்ல.

இது பற்றி மனநல ஆலோசகர் அர்ச்சனா பேசும்போது, "நினைத்ததை எந்தத் தயக்கமுமின்றி ஏ.ஐ-யிடம் பகிர முடிகிறது. உடனடியாக உணர்வுகளுக்கு மதிப்பளிக்கப்படுகிறது. அதனால் அவர்கள் பாதுகாப்பாக உணர்கிறார்கள்" என குறிப்பிடுகிறார்.

இங்கு கட்டணமும் ஒரு முக்கிய விஷயமாக உள்ளது. "மனநல ஆலோசகரிடம் தெரபி பெற்றுக்கொள்வது ஒரு நீண்ட முயற்சியாக அவர்களுக்கு தோன்றலாம்" என்று கூறும் அர்ச்சனா, "ஒவ்வொரு வாரமும் அல்லது மாதமும் மனநல ஆலோசகரை இடைவிடாமல் சந்திக்க வேண்டும். கண்டிப்பாக அதற்கான கட்டணங்கள் சாதாரண மக்கள் கொடுக்கக்கூடியதாக இருக்காது" என்றும் சுட்டிக்காட்டுகிறார்.

ஏ.ஐ ஆலோசனைக்கும் மனநல ஆலோசனைக்குமான வித்தியாசம்

ஆறுதலாக பேசுவது, நாம் செய்வதை சரி என கூறுவது நமக்கு எப்போதும் பிடித்தமானதாக இருக்கும் அல்லவா? பெரும்பாலனவர்கள் ஏ.ஐ-யை நாடுவதற்கும் இது ஒரு காரணமாக உள்ளது என்று சொன்னால் நம்ப முடிகிறதா?

இது பற்றி பேசிய அர்ச்சனா, "ஏ.ஐ செயலிகள் எப்போதும் உங்கள் உணர்ச்சிகளை சரி என்றே கூறும். ஆனால் மனநல ஆலோசகர் உங்களது சிந்தனைகளை சவாலுக்குள்ளாக்கி, புதிய கோணத்தில் அணுக கற்றுக் கொடுப்பார்" என்கிறார்.

மனநல மருத்துவரான நித்யா இது குறித்து பேசும்போது, "ஏ.ஐ உங்களது எண்ணங்களை சரிபார்க்காது, உடனடித் தீர்வை மட்டுமே தரும். ஆனால் தெரபி ஆழமான சிந்தனையை உருவாக்கும்" என்கிறார்.

முழு விவரம் காணொளியில்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு