காணொளி: இஸ்லாமாபாத் தாக்குதல் - பாகிஸ்தான் கருத்தும் இந்தியாவின் பதிலும்
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் செவ்வாயன்று நிகழ்ந்த தற்கொலைத் தாக்குதலில் குறைந்தது 12 பேர் பலியாகினர்.
இந்தியா ஆதரிக்கும் பயங்கரவாத குழுக்கள் இந்த தாக்குதலின் பின்னணியில் இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் குற்றஞ்சாட்டிய நிலையில், இந்தியா அதனை மறுத்துள்ளது. முன்னதாக, இந்த தாக்குதலுக்கு ஆப்கானிஸ்தான் காரணம் என அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் கூறியது குறிப்பிடத்தக்கது.
இந்த விவகாரத்தில் இந்தியா பற்றி பாகிஸ்தான் கூறியது என்ன? இந்தியா இதற்கு அளித்த பதில் என்ன?
என்ன நடந்தது?
பாகிஸ்தானின் தலைநகரான இஸ்லாமாபாத்தில் செவ்வாயன்று நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே தற்கொலைத் தாக்குதல் நடந்தது.
இதில் ஈடுபட்ட தற்கொலை குண்டுதாரர் மாவட்ட நீதிமன்றத்தின் உள்ளே நுழையத் திட்டமிட்டதாகவும், ஆனால் அவரால் உள்ளே செல்ல முடியவில்லை என்றும் பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி கூறினார்.
"நீதிமன்றத்தில் மதியம் 12:39 மணிக்கு தற்கொலை தாக்குதல் நிகழ்ந்தது. இந்த தாக்குதல் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியது. காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையான சிகிச்சை வழங்க வேண்டும் என பிரதமர் தெரிவித்துள்ளார்." என்றார் மொஹ்சின் நக்வி.
வெடிகுண்டு தாக்குதல் நடத்தியவரை அடையாளம் காண்பதற்கு அதிகாரிகள் முன்னுரிமை அளிப்பார்கள் என்றும், இந்தத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
தாக்குதல் நடத்தியவர் சுமார் 15 நிமிடங்கள் காத்திருந்து, ஒரு போலீஸ் காருக்கு அருகில் குண்டை வெடிக்கச் செய்ததாகவும் நக்வி மேலும் தெரிவித்தார்.
தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ள பாகிஸ்தான் தாலிபன் குழு, பாகிஸ்தானின் இஸ்லாமிய விரோத சட்டங்களின் கீழ் தீர்ப்புகள் வழங்கிய நீதிபதிகள், வழக்கறிஞர்கள் மற்றும் அதிகாரிகளை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது" என தாங்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளனர்.
இந்தியா மீது விமர்சனம்
"இந்தியா தீவிரமாக ஆதரிக்கும்" பயங்கரவாதக் குழுக்கள் இஸ்லாமாபாத் தாக்குதலில் ஈடுபட்டதாகப் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் அலுவலகம் குற்றம்சாட்டியது.
பிபிசி உருதுவின் படி, பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், "இந்தியாவின் பயங்கரவாத பிரதிநிதிகளால் பாகிஸ்தானின் ஆயுதமற்ற பொதுமக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் கண்டிக்கத்தக்கவை." எனத் தெரிவிக்கப்படுள்ளது.
மேலும், "பாகிஸ்தான் பிராந்தியத்தில் தன்னுடைய பிரதிநிதிகள் மூலம் பயங்கரவாதம் பரப்பும் தீய செயலில் இருந்து இந்தியா விலகி இருக்க வேண்டும்" என அந்த அறிக்கையில் கூறப்பட்டது.
இந்தியாவின் பதில் என்ன?
பாகிஸ்தானின் இந்த குற்றச்சாட்டுகள் ஆதராமற்றவை என இந்தியா மறுத்தது.
"பாகிஸ்தானால் கூறப்படும் அடிப்படையற்ற மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைச் சந்தேகத்திற்கு இடமின்றி இந்தியா நிராகரிக்கிறது," என வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகிறார்.
இந்தியாவிற்கு எதிராக பொய்யான கதைகளைப் புனைந்து, தனது நாட்டிற்குள் நடந்து வரும் ராணுவத்தால் ஈர்க்கப்பட்ட அரசமைப்புச் சீர்குலைவு மற்றும் நாட்டிற்குள் வெளிப்படும் அதிகாரப் பறிப்பு முயற்சியிலிருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்பும் செயல் என ரந்தீர் ஜெய்ஸ்வால் விமர்சித்துள்ளார்.
உலக சமூகத்துக்கு உண்மைகள் நன்கு தெரியும். பாகிஸ்தானின் தீவிரமான திசைதிருப்பல் சூழ்ச்சிகளால் தவறாக வழிநடத்தப்படாது. என்று அவர் கூறினார்.
மறுபுறம் இந்த தாக்குதலின் பின்னணியில் ஆப்கானிஸ்தான் இருப்பதாக பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா கூறினார்.
செவ்வாய்க்கிழமை இரவு ஜியோ நியூஸ் ஊடகத்திடம் பேசிய பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப், சமீபத்திய தாக்குதல்களுக்குப் பிறகு ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நடவடிக்கையை பாகிஸ்தான் எடுக்குமா என்ற கேள்விக்கு "ஆம், நிச்சயமாக எடுக்கும்" என்று தெரிவித்ததாக பிபிசி உருது கூறுகிறது.
"இந்தத் தாக்குதல்கள், எதிர்காலத்தில் ஆப்கானிஸ்தானிலிருந்து நடைபெறவுள்ள தாக்குதல்களின் தொடக்கமாகக் கருதப்படலாம்." எனக் கூறிய அவர், "உண்மையில், அவை இந்தியாவால் திட்டமிடப்பட்டவை. ஆப்கானிஸ்தான் வழியாக எங்கள் நாட்டில் மேற்கொள்ளப்படுகின்றன." என கூறியதாக பிபிசி உருது கூறுகிறது.
பாகிஸ்தானில் செயல்படும் தீவிரவாத குழுக்களை இந்தியாவும் ஆப்கானிஸ்தானும் ஆதரிப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டை இருநாடுகளுமே மறுத்துள்ளன.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



