காணொளி: முழு இலங்கைக்கும் அவசரநிலை - மண்சரிவில் தமிழர்கள் பாதிப்பு
இலங்கையில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
'திட்வா' புயலால் மழை, வெள்ளம், நிலச்சரிவு என இலங்கை முழுவதும் பெரும் இயற்கைப் பேரிடரை எதிர்கொண்டுள்ளது. குறைந்தது 153பேர் உயிரிழந்த நிலையில் 191 பேரை காணவில்லை என பேரிடர் மேலாண்மை மையம் கூறுகிறது.
பேரிடர் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு தேவையான சேவைகள் தடையின்றி நடைபெறுவதற்காக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அவசர நிலையை அறிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பொது இயக்குநர் பிரசன்ன பெரேரா தெரிவித்துள்ளார்.
இலங்கையின் தற்போதைய நிலை என்ன? 'திட்வா' புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் என்ன? இந்த காணொளியில் பார்க்கலாம்.
வெள்ளப்பெருக்கு, மண்சரிவு மற்றும் புயலால் இன்று பிற்பகல் 2 மணி வரை நாடளாவிய ரீதியில் சுமார் 153 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 191 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அனார்த்த முகாமைத்துவ நிலையம் கூறுகிறது.
சுமார் ஒரு லட்சத்து 79 ஆயிரம் குடும்பங்களும், 6.46 லட்சம் தனி நபர்களும் இந்த இடரால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குடியிருப்பு பகுதிகளில் சிக்கிய மக்களை விமானப்படை வீரர்கள் ஹெலிகாப்டர் மூலம் மீட்டனர்.
சமீபத்திய தகவலின்படி, பன்னாலாவில் உள்ள முதியோர் இல்லத்தில் வெள்ளம் தாக்கியதில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 14 பேர் மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
கந்தளாய் பகுதியைச் சுற்றியுள்ள 10,000 ஏக்கருக்கும் அதிகமான நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.
இலங்கையின் பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக துல்ஹிரியா, அலவதுகோட, ரம்போடா ஆகிய பகுதிகளில் இன்று கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் ரம்போடாவில் மட்டும் 14 பேர் உயிரிழந்ததாக போலீசார் கூறுகின்றனர்.
சுமார் 60-70 கிலோமீட்டர் வேகத்துடன் வடக்கு மாகாணம் நோக்கி நகர்ந்த புயலானது, வன்னி மாவட்டத்தில் குறிப்பாக கிளி நொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் மாவட்டத்தில் குறிப்பிடத்தக்க பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், வட மாகாணத்தின் மிகப்பெரிய நீர்த்தேக்கமாகக் கருதப்படும் கிளிநொச்சியில் அமைந்திருக்கும் இரணைமடு நீர்த்தேக்கத்தின் பக்கவாட்டு சுவர் உடைந்ததாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது.
வெள்ளப்பெருக்கால் இதன் நீர் கொள்ளளவு 36 அடியைத் தாண்டியதால் அனைத்து வான் கதவுகளும் இன்று காலை திறக்கப்பட்டதாக நீர்ப்பாசன அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி நீர்த்தேக்கம் பாதுகாப்பற்றதாக மாறினால், பரந்தனில் இருந்து முல்லைத்தீவு வரையிலான பிரதான பாதை வெள்ளத்தில் மூழ்கும் என அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது.
கொழும்பு- யாழ்ப்பாணத்தை இணைக்கும் முக்கிய சாலையான A9 வீதியானது, தாண்டிக்குளத்திற்கும் ஓமந்தைக்கும் இடைப்பட்ட நொச்சிமோட்டையிலிருந்து போக்குவரத்து முற்றாக முடக்கப்பட்டு வீதி மூடப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
வவுனியா மாவட்டத்தில் தற்போது மழை குறைந்திருப்பதாகவும், எனினும் வெள்ளம் தொரடரும் எனவும் மாவட்ட பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது.
இந்த மாவட்டத்தில் மட்டும் 1228 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 18 தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். நவம்பர் 30ம் தேதி முதல் மழை பெருமளவில் குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இந்திய அரசு விமானம் மூலம் நிவாரணப் பொருட்களை அனுப்பிவைத்துள்ளது.
கூடாரங்கள், போர்வைகள், உணவுப் பொருட்கள் உட்பட மொத்தம் 27 டன் எடைகொண்ட உதவிப்பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. இந்த பொருட்கள் அனைத்தும் இன்று காலை இலங்கை வந்தடைந்துள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிக்கை வெளியிட்டுள்ளது.
மேலும் இந்தியாவில் இருந்து 88 மீட்பு படையினர் இலங்கை விரைந்துள்ளனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு