காணொளி: டிரம்பின் காஸா போர் நிறுத்த திட்டம் - இஸ்ரேல் ஊடகங்கள் கூறுவது என்ன?

காணொளிக் குறிப்பு, டிரம்பின் காஸா போர் நிறுத்த திட்டம் - இஸ்ரேல் ஊடகங்கள் கூறுவது என்ன?
காணொளி: டிரம்பின் காஸா போர் நிறுத்த திட்டம் - இஸ்ரேல் ஊடகங்கள் கூறுவது என்ன?

காஸா போர் நிறுத்தம் பற்றி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்வைத்த புதிய காஸா அமைதி திட்டத்தை பெஞ்சமின் நெதன்யாகு ஏற்றுக்கொண்டார். ஹமாஸும் இதனை ஏற்றுக்கொண்டாலும், நிபந்தனைகள் பற்றி பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாக கூறியுள்ளது.

இஸ்ரேல் - ஹமாஸ் இரு தரப்புக்கு இடையிலான பேச்சுவார்த்தைகள் திங்கட்கிழமை முதல் எகிப்தில் நடந்து வருகின்றன.

பெஞ்சமின் நெதன்யாகு இந்த திட்டத்தை ஏற்றுக்கொண்டது பற்றியும், டிரம்பின் புதிய காஸா அமைதி திட்டம் பற்றியும் இஸ்ரேலிய ஊடகங்கள் அதிக முக்கியத்துவம் அளித்து விவாதிக்கின்றன.

காஸா விவகாரத்தில் டிரம்ப் எடுக்கும் முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் நெதன்யாகு இருக்கிறாரா? இஸ்ரேலிய ஊடகங்கள் கூறுவது என்ன?

டிரம்புக்கு பாராட்டு

டிரம்ப் காஸா அமைதித் திட்டத்தை செயல்படுத்துவதில் முழு உறுதியுடன் உள்ளார் என ஹாரெட்ஸ் செய்திதாள் கூறுகிறது.

அமைதித் திட்டத்தை விரைவில் செயல்படுத்த இஸ்ரேலையும் ஹமாஸையும் பேச்சுவார்த்தை நடத்துமாறு டிரம்ப் கேட்டுக் கொண்டார்.

"காஸா மீதான தனது அதிகாரத்தையும் கட்டுப்பாட்டையும் ஹமாஸ் கைவிட மறுத்தால், அது முற்றிலுமாக அழிக்கப்படும்" என்று அமெரிக்க செய்தி சேனலான சிஎன்என்-க்கு அளித்த பேட்டியில் டிரம்ப் கூறியிருந்தார்.

"முதல்கட்ட பேச்சுவார்த்தை இந்த வாரம் தொடங்கும்" என்று டிரம்ப் கூறியதற்கு இஸ்ரேலிய ஊடகங்கள் முக்கியத்துவம் அளித்தன.

பல இஸ்ரேலிய செய்தித்தாள்கள் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையேயான இந்த பேச்சுவார்த்தை காஸா போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான மிகவும் நேர்மையான செயல்பாடு என கூறின.

நடுநிலை செய்தித்தாளான மாரிவ், எகிப்தின் தலைநகரில் பேச்சுவார்த்தை நடந்து வருவதைக் குறிப்பிட்டு, கெய்ரோவிலிருந்து நம்பிக்கை என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டது.

மிகவும் பரவலாக விநியோகிக்கப்படும் செய்தித்தாளான யெடியட் அக்ரோனோட், அதன் முதல் பக்கத்தில், 'அமெரிக்க அமைதித் திட்டத்தின் 90 சதவிகிதம் ஏற்கெனவே இறுதி செய்யப்பட்டுள்ளது' என்று கூறியது.

"இன்னும் பல சிரமங்கள் உள்ளன, ஆனால் நீண்ட காலத்திற்குப் பிறகு, போர் முடிவுக்கு வரும் என்ற நம்பிக்கை காணப்படுகிறது" என்று லிபரல் செய்தித்தாளான ஹாரெட்ஸ் எழுதியது.

விரிவாக காணொளியில்...

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு