"ஸ்பெயினுடன் அனைத்து வர்த்தகத்தையும் நிறுத்துகிறோம்" - டிரம்பின் அச்சுறுத்தலுக்கான எதிர்வினை என்ன?

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், டேனியல் கேய்
    • பதவி, வணிக செய்தியாளர்
  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

இரான் மீதான நடவடிக்கையின் ஒரு பகுதியாக அதன் ராணுவ தளங்களைப் பயன்படுத்துவதை அமெரிக்காவுக்கு தடை செய்ததை அடுத்து, ஸ்பெயினுடனான அனைத்து வர்த்தகத்தையும் நிறுத்துவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அச்சுறுத்தியுள்ளார்.

இதனிடையே, அமெரிக்க தாக்குதலுக்கு எதிரான தன் நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ள ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், டிரம்பின் அச்சுறுத்தல் "சர்வதேச சட்டத்தை முறிப்பதாகும்" என்று தெரிவித்தார்.

வெள்ளை மாளிகையில் டிரம்ப் இது குறித்து தெரிவிக்கையில், ஸ்பெயின் "மிகவும் மோசமாக" இருந்தது என்றும் "நாங்கள் ஸ்பெயினுடனான அனைத்து வர்த்தகத்தையும் துண்டிக்கப் போகிறோம்" என்றும் கூறினார். "ஸ்பெயினுடன் எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை," என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

இந்த அச்சுறுத்தலை டிரம்ப் நிர்வாகம் பின்பற்றுமா அல்லது ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளுடனான வர்த்தகத்தைத் தடுக்க அதிகாரிகள் எவ்வாறு நடவடிக்கை எடுப்பார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

நேட்டோ நட்பு நாடுகள் தங்கள் பாதுகாப்புக்கான செலவினங்களை உயர்த்த வேண்டும் என்ற டிரம்பின் வலியுறுத்தலுக்கு ஸ்பெயின் அரசு எதிர்ப்பு தெரிவிப்பது உட்பட, இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் பதற்றங்களை டிரம்பின் கருத்துக்கள் மேலும் அதிகரிக்கின்றன.

மன்னிக்கவும், குறைந்த இணையத்தை பயன்படுத்தும் இந்த பக்கத்தில் கட்டுரையின் இந்த பகுதியை காணவியலாது.

"இன்று அல்லது நாளை, ஸ்பெயினுடனான அனைத்து வணிகங்களையும் எங்களால் நிறுத்த முடியும்" என்று டிரம்ப் செவ்வாய்கிழமை ( பிப்ரவரி 3) கூறினார்.

ஸ்பெயினிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் அமெரிக்கா சட்டப்பூர்வமாக தடை விதிக்க முடியும் என்று டிரம்ப் மற்றும் கருவூல செயலாளர் ஸ்காட் பெசென்ட் இருவரும் கூறினர்.

ஆனால் இந்தத் திட்டம் குறித்து அதிபர் கருத்து கேட்டபோது, அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி ஜேமிசன் கிரேர் உறுதியான பதிலை வழங்கவில்லை. "நாங்கள் அதைப் பற்றி உங்களுடன் (டிரம்பிடம்) பேசுகிறோம்," என்று கூறினார்.

"உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்திய வலுவான அதிகாரம் உங்களிடம் உள்ளது. நீங்கள் அதைப் பயன்படுத்த முடியும் என்பது எங்களுக்குத் தெரியும். மேலும், தேசிய மற்றும் பொருளாதார பாதுகாப்பை உறுதி செய்ய நீங்கள் அதைப் பயன்படுத்த வேண்டியிருந்தால், நாங்கள் அதைச் செய்வோம்." என்றார் அவர்.

வர்த்தக அச்சுறுத்தல் குறித்து கருத்து கேட்டபோது வெள்ளை மாளிகை உடனடியாக பதிலளிக்கவில்லை.

பட மூலாதாரம், La Moncloa Handout

படக்குறிப்பு, ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ்

செவ்வாய்கிழமையன்று , ஸ்பெயின் அரசாங்கம் தனது பாதுகாப்பு செலவினங்களை அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5% ஆக அதிகரிக்க மறுத்ததற்காக, டிரம்ப் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். இது பல ஐரோப்பிய நாடுகள் மேல் விதிக்கப்பட்ட வரி போல இல்லாமல், ஸ்பெயின் பொருளாதார தண்டனைகளை எதிர்கொள்ள வேண்டும் என்று டிரம்ப் பரிந்துரைத்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியம், பொருளாதாரக் குழுவில் உள்ள 27 நாடுகளுக்கு இடையே பொருட்களை சுதந்திரமாக நகர்த்த அனுமதிக்கிறது, இது ஒரு தனி உறுப்பு நாட்டின் மீது வர்த்தகக் கட்டுப்பாடுகளை விதிக்கும் எந்தவொரு முயற்சியையும் சிக்கலாக்கும்.

அமெரிக்க நிர்வாகம் ஸ்பெயினுடனான அதன் வர்த்தக உறவை மறுபரிசீலனை செய்ய விரும்பினால், அது தனியார் நிறுவனங்களின் சுயாட்சி, சர்வதேச சட்டம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான இருதரப்பு ஒப்பந்தங்களை மதிக்க வேண்டும் என்று ஸ்பெயின் அரசாங்கம் கூறியது.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

செவ்வாய்கிழமை (பிப்ரவரி 03) டிரம்பைச் சந்தித்த ஜெர்மன் சான்சலர் பிரீட்ரிக் மெர்ஸ், ஸ்பெயின் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒரு பகுதி என்றும், அந்த ஒன்றியத்துடனான எந்தவொரு வர்த்தக ஒப்பந்தத்திலும் ஸ்பெயினும் இருக்க வேண்டும் என்றும் அதிபரிடம் கூறியதாக தெரிவித்தார்.

2025-ஆம் ஆண்டில், அமெரிக்கா ஸ்பெயினுக்கு சுமார் 26 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்களை ஏற்றுமதி செய்தது, மேலும் அந்த நாட்டிலிருந்து சுமார் 21 பில்லியன் டாலர் மதிப்புக்கு இறக்குமதி செய்யப்பட்டது என்று அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவுக்கு ஸ்பெயினின் சிறந்த ஏற்றுமதிகளில் மருந்துப் பொருட்கள் மற்றும் ஆலிவ் எண்ணெய் ஆகியவை அடங்கும்.

ஐரோப்பாவின் இடதுசாரி சார்பு கொண்ட சில தலைவர்களில் ஒருவரான ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், ஞாயிற்றுக்கிழமை, இரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களை சர்வதேச சட்டத்தை மீறும் "நியாயமற்ற, ஆபத்தான ராணுவத் தலையீடு" என்று விமர்சித்தார்.

இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக தெற்கு ஸ்பெயினில் உள்ள ராணுவ தளங்களை அமெரிக்கா பயன்படுத்துவதைத் தடுப்பதாக மாட்ரிட்டில் உள்ள அதிகாரிகள் தெரிவித்தனர், அவ்வாறு செய்வது ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தை மீறுவதாகும் என்று வாதிட்டனர்.

இரான் மீது தாக்குதல் நடத்த ராணுவ தளங்களைப் பயன்படுத்துவதற்கான தனது முயற்சியில் பிரிட்டன் "ஒத்துழைக்கவில்லை" என்றும் டிரம்ப் விமர்சித்தார். ஆனால், அந்நாட்டின் மீது வர்த்தகக் கட்டுப்பாடுகளை விதிக்கப் போவதாக அவர் வெளிப்படையான அச்சுறுத்தலை விடுக்கவில்லை.

ஸ்பெயின் பிரதமர் கூறியது என்ன?

ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், 10 நிமிட தொலைக்காட்சி உரையில், யுக்ரேன் மற்றும் காஸா போர்கள் மற்றும் 20 ஆண்டுகளுக்கு முன்பு இராக் போர் பற்றி பேசினார். மேலும் "போர் வேண்டாம்" என்பதுதான் ஸ்பெயின் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்று கூறினார்.

ஸ்பெயின் மக்கள் மீது டிரம்பின் அச்சுறுத்தல் ஏற்படும் தாக்கத்தை எதிர்கொள்வதற்கான பொருளாதார நடவடிக்கைகளை தன் அரசு ஆய்வு செய்வதாகவும் தெரிவித்தார்.

"நாம் ஆயதுல்லாக்களின் பக்கம் இருக்கிறோமா என்பது கேள்வி அல்ல. நாம் அமைதி மற்றும் சர்வதேச சட்டங்களை ஆதரிக்கிறோமா என்பதுதான் கேள்வி."

அரசாங்கத்தின் நிலைப்பாடு யுக்ரேன் மற்றும் காஸா மீதான அதன் நிலைப்பாட்டுக்கு ஒப்பானது என்று அவர் விளக்கினார். 2023-இல் ஹமாஸ் தாக்குதல்களுக்கு இஸ்ரேலின் ராணுவ பதிலை அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

காஸா விவகாரம் குறித்து ஐரோப்பாவில் மிகவும் வெளிப்படையாகப் பேசும் அரசாங்கங்களில் ஸ்பெயினும் ஒன்றாகும். இஸ்ரேலின் நடவடிக்கைகளை "இனப்படுகொலை" என்று வர்ணித்து, பல ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் செய்வதற்கு முன்பே பாலத்தீன அரசை ஸ்பெயின் அங்கீகரித்தது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு