நன்றி நேயர்களே
இன்றைய நேரலைப்பக்கம் இத்துடன் நிறைவு பெறுகிறது. இன்றைய நாள் நிறைவின் செய்தித்துளிகள் இதோ...
- திருவரங்கத்தில் உள்ள தந்தை பெரியார் சிலையை உடைக்க வேண்டுமென பேசிய சினிமா ஸ்டண்ட் மாஸ்டரும் இந்து முன்னணியின் கலை இலக்கிய மாநிலச் செயலாளருமான கனல் கண்ணன் மீது சென்னை சைபர் க்ரைம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
- வைகை அணையிலிருந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால், ஐந்து மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- அமெரிக்காவின் மூத்த அரசியல்வாதியும் நாடாளுமன்ற சபாநாயகருமான நான்சி பெலோசி தைவானுக்கு சென்றுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து தைவானின் கிழக்கு கடற்கரையை நோக்கி சீனா ஏவுகணை வீசியுள்ளதாகவும், அது இலக்கை துல்லியமாக தாக்கியதாகவும் சீன அரசு ஊடகம் உறுதிப்படுத்தியுள்ளது.
- முன்னறிவிப்பின்றி அணைகளில் அதிக நீர் திறப்பு கூடாது என, முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
- தங்கள் வழக்கை விசாரிக்கும் நீதிபதியை மாற்ற வேண்டுமென ஓ. பன்னீர்செல்வம் கோரியது நீதித்துறையைக் களங்கப்படும் கீழ்த்தரமான செயல் என சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
- "நரேந்திர மோதியைக் கண்டு எனக்கு பயமில்லை. என்ன செய்ய முடியுமோ செய்யுங்கள்" - காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேச்சு
- உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக நீதிபதி உதய் உமேஷ் லலித்தின் (யு.யு.லலித்) பெயரை தற்போதைய தலைமை நீதிபதி என்.வி.ரமணா பரிந்துரைத்துள்ளார்.
- சினிமா ஃபைனான்சியரான 'கோபுரம் பிலிம்ஸ்' அன்புச் செழியன் தொடர்பான சுமார் 40 இடங்களில் மூன்று தினங்களாக நடைபெற்று வந்த வருமான வரித்துறை சோதனை நிறைவடைந்தது.











