நேயர்களுக்கு நன்றி!
இன்றைய நேரலை இத்துடன் நிறைவு பெறுகிறது. இன்று நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு இதோ:
- சர்வதேச சதுரங்கப் போட்டியான 44ஆவது செஸ் ஒலிம்பியாடில் இந்திய அணி வீரர்கள் முன்னணி வகிக்கின்றனர்.
- காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் இந்தியா டேபிள் டென்னிஸ் விளையாட்டில் தங்கம் வென்றுள்ளது. இதுவரை 4 தங்கம் வென்றிருந்த நிலையில், இத்துடன் சேர்த்து தங்கப்பதக்கங்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
- காமன்வெல்த் போட்டியில் ‘லான்பவுல்’ விளையாட்டில் இந்திய பெண்கள் அணி முதல்முறையாக தங்கம் வென்றுள்ளது.
- "மாநிலங்கள் தங்கள் வருவாயைப் பெருக்க போதுமான வாய்ப்புகள் இல்லையென்பதால் மத்திய அரசுதான் வரிகளைக் குறைக்க வேண்டுமென்றும் தமிழ்நாடு அரசு இதுவரை பெட்ரோலுக்கு ரூ 4.95 குறைத்துள்ளதாகவும்" இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு தன் அறிக்கை மூலம் மறுமொழி அளித்துள்ளார் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.
- பாகிஸ்தான் ராணுவத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டரில் பயணித்த, லெப்டினன்ட் ஜெனரல், ராணுவ அதிகாரிகள் உட்பட 6 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
- டெல்லியில் வசிக்கும் நைஜீரிய நபர் ஒருவருக்கு குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஏ.என்.ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது. அத்துடன், டெல்லியில் இது மூன்றாவது தொற்று என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
- இலங்கையின் அரசியலமைப்பில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் தீர்மானித்துள்ளது.இதன்படி, அரசியலமைப்பின் 22வது திருத்தத்தை மேற்கொள்வதற்கு நேற்றைய தினம் கூடிய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக, நீதி அமைச்சர் சட்டத்தரணி விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவிக்கின்றார்.
- சினிமா ஃபைனான்சியர் அன்புச்செழியன், தயாரிப்பாளர்கள் கலைப்புலி தானு,எஸ்.ஆர்.பிரபு, ஞானவேல் ராஜா ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை
- கனமழை காரணமாக கேரளாவில் 7 மாவட்டங்களுக்கு 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளதாகவும் 2 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாகவும் அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்






