புதுச்சேரியில் பிள்ளையார் சிலை வைக்க அனுமதி: துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்

டோக்யோ பாராலிம்பிக்ஸ் போட்டியில் இந்திய வீரர் மணீஷ் நர்வால் துப்பாக்கி சுடுதலில் தங்கப் பதக்கம் வென்றார்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. நன்றி நேயர்களே!

    பிபிசி தமிழின் புதிய நேரலைப் பக்கம் நாளை காலை மீண்டும் தொடங்கும். மேலதிகச் செய்திகளுக்கு முகப்பு பக்கம் செல்லவும்.

    பிபிசி தமிழின் பேஃஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப் பக்கங்கள் வாயிலாகவும் செய்திகளை அறியலாம்.

    உங்களுக்கு இந்த இரவு இனிதாகட்டும்.

  2. கிலானி உடல் மீது பாகிஸ்தான் தேசியக் கொடி

    சமீபத்தில் மரணமடைந்த காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் சையது அலி ஷா கிலானியின் உடல் வியாழனன்று ஜம்மு - காஷ்மீர் காவல் துறையால் அடக்கம் செய்யப்பட ஒப்படைக்கப்படும் முன், அவரது உடல் மீது பாகிஸ்தான் தேசியக் கொடி போர்த்தப்பட்டிருந்த காணொளி சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது.

    இது தொடர்பாக சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யபட்டுள்ளது என்று காவல்துறை தெரிவிக்கிறது.

    காஷ்மீரின் முக்கிய பிரிவினைவாதத் தலைவரான சையது அலி ஷா கிலானி ஸ்ரீநகரில் உள்ள அவரது இல்லத்தில் வியாழன்று காலமானார். அவருக்கு வயது 92. நீண்டகாலமாக அவர் நோய்வாய்ப்பட்டிருந்தார்.

    காஷ்மீரில் இந்திய ஆட்சிக்கு எதிராக நீண்ட காலமாகக் குரல் எழுப்பி வந்தவர் கிலானி. கடந்த 11 ஆண்டுகளில் பெரும்பாலான காலத்தை வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டிருந்தார்.

    கிலானியின் வீட்டைச் சுற்றி இந்திய அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. சாலைத் தடுப்புகள் வைக்கப்பட்டிருந்தன. கம்பி வேலிகள் அமைக்கப்பட்டிருந்தன.

    கிலானி உடல் மீது பாகிஸ்தான் தேசியக் கொடி

    பட மூலாதாரம், AFP

  3. ஐபோனில் ஆவணங்களை ஏற்க அமெரிக்காவில் திட்டம்

    ஐபோனில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் ஓட்டுநர் உரிமம் போன்ற அடையாள அட்டைகளை அமெரிக்காவில் உள்ள எட்டு மாகாணங்கள் ஏற்றுக் கொள்ள இருப்பதாக ஆப்பிள் நிறுவனம் அறிவித்திருக்கிறது.

    ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களில் ஆப்பிள் வேலட் செயலியில் அடையாள அட்டைகள் சேமித்து வைக்கப்படுவது தொடர்பாக கடந்த ஜூன் மாதம் விளக்கக் காட்சி ஒன்றில் அறிவிக்கப்பட்டது.

    காவலர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஸ்மார்ட்ஃபோன்களை கொடுப்பது குறித்து தனியுரிமை சிக்கள்களை சிலர் வெளிப்படுத்தினர்.

    பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் காவலர்களிடம் ஆப்பிள் ஐபோன்களைக் கொடுக்க வேண்டிய அவசியமில்லை எனக் கூறியுள்ளது ஆப்பிள்.

    அவ்வளவு ஏன் ஐபோனை அன்லாக் கூட செய்ய வேண்டாம் என கூறுகிறது. விமான நிலையத்தில் பாதுகாப்பு பரிசோதனைகளுக்கு ஆப்பிள் நிறுவனம் கூறியது போல ஐபோனை அன்லாக் செய்யவோ, அதிகாரிகளிடம் கொடுக்கவோ அவசியம் இல்லை.

    ஆனால் சாலையில் காவலர்களால் நிறுத்தப்பட்டால் அப்போது இந்த பாதுகாப்பு நடைமுறைகள் எப்படி செயல்படும், காவலர்கள் எப்படி அந்த நபரின் அடையாள அட்டைகளைப் பார்ப்பார்கள் என்கிற கேள்விக்கு இன்னும் தெளிவான பதில் கிடைக்கவில்லை.

    iphone

    பட மூலாதாரம், Getty Images

  4. இந்தியா vs இங்கிலாந்து: அத்துமீறி நுழைந்த ஜார்வோ யார்?

    இந்தியா vs இங்கிலாந்து: மீண்டும் மீண்டும் களத்தில் அத்துமீறி நுழைந்த ஜார்வோ யார்?

    ஜார்வோ என்ற பெயருடைய அந்த நபர் போட்டியின் போது மைதானத்திற்குள் நுழைந்து இந்திய வீரர் உமேஷ் யாதவைப்போல பந்துவீச ஓடிவந்து இங்கிலாந்து வீரர் ஜானி பேர்ஸ்டோவை தள்ளினார்.

    இவர் யார் என விளக்குகிறது பிபிசி தமிழின் சிறப்புக் காணொளி.

    YouTube பதிவை கடந்து செல்ல
    Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது YouTubeபதிவில் விளம்பரங்கள் இருக்கக்கூடும்

    YouTube பதிவின் முடிவு

  5. உத்தர பிரதேசத்தில் குழந்தைகளை தாக்கும் `மர்மக் காய்ச்சல்`

    இந்தியாவை உலுக்கிய கொரோனா வைரசின் இரண்டாவது அலை முடிவுக்கு வந்துவிட்டதா, மூன்றாவது அலை தொடங்கிவிட்டதா என்றே புரிந்துகொள்ளவிடாமல் தினசரி தொற்று எண்ணிக்கை கண்ணாமூச்சி காட்டிவருகிறது.

    இதற்கிடையே உத்தரப் பிரதேசத்தில் குழந்தைகளிடையே தோன்றும் ஒரு வகை மர்மக் காய்ச்சலுக்கு பல குழந்தைகள் பலியாகி வருகின்றனர்.

    uttar pradesh
  6. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க சிறப்பு சட்டம் - ஆதரவாளர்கள் கோரிக்கை, பிரபுராவ் ஆனந்தன்

    ஸ்டெர்லைட்

    பட மூலாதாரம், Vedanta

    படக்குறிப்பு, ஸ்டெர்லைட்

    தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என்று ஆலை ஆதரவாளர்கள் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ஆலையால் சுற்றுச்சூழல் மாசுபாடு ஏற்படுவதாகவும், நிலத்தடி நீர் மாசுபடுவதாகவும், இதனால் மக்களுக்கு உடல் நலக் கோளாறுகள் ஏற்படுவதாகவும் கூறி அப்பகுதி மக்கள் நீண்டகாலம் போராடிவந்தனர். 2018 மே மாதம ்நடந்த ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் போலீஸ் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 14 பேர் கொல்லப்பட்டனர்.

    இதையடுத்து தமிழ்நாடு அரசு அந்த ஆலையை மூடியது. கொரோனா வைரசின் இரண்டாவது அலையின்போது ஏற்பட்ட ஆக்சிஜன் பற்றாக்குறையை சமாளிக்க, ஸ்டெர்லைட் ஆலை ஆக்சிஜன் உற்பத்தி செய்ய முன்வந்தது. இதையடுத்து அந்த ஆலையைத் திறக்க அனுமதிக்கப்பட்டது. ஆனால், ஆக்சிஜன் பற்றாக்குறை சிக்கல் தீர்ந்த நிலையில் மீண்டும் ஆலை மூடப்பட்டுள்ளது.

    அதே நேரம், இந்த ஆலையைத் திறக்கவேண்டும் என்று மறுபுறம் ஒரு சாரார் கோரி வருகின்றனர்.

    இந்தப் பின்னணியில், ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலை ஆதரவாளர்கள் இன்று தூத்துக்குடியில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசினர். "ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை செயல்பட்ட காலத்திலிருந்து மக்களுக்கு பல நன்மைகளை செய்து வருகிறது. 2018 போராட்டத்திற்கு பிறகு ஆலை மூடப்பட்டிருந்த நிலையிலும் சமூக வளர்ச்சிக்காக பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன்மூலம், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் உதவிகள் மற்றும் சுயதொழில் பயிற்சி போன்ற பல நன்மைகள் பெண்களுக்கு கிடைத்து வந்தது. ஆனால் தற்போது அந்த செயல்பாடுகளும் தடைபட்டிருப்பதால் பொதுமக்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்" என்று அவர்கள் குறிப்பிட்டனர்.

    ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட பின் வேலையின்றி பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பதாகவும், ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்களுக்கு கிடைக்கும் மரியாதை ஆதரவாளர்களுக்கு கிடைப்பதில்லை. எதிர்ப்பாளர்களை அழைத்து கருத்துக்களை கேட்பது போல் ஆலை ஆதரவாளர்ளை அழைத்து கருத்து கேட்கவேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

    தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை திறக்க சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

  7. பாராலிம்பிக்ஸ்: இந்தியாவின் பிரமோத் பகத் பேட்மிண்டன் ஒற்றையர் தங்கம் வென்றார், ஒரே நாளில் இரண்டாவது தங்கம்.

    டோக்யோ பேராலிம்பிக்ஸ் போட்டியில் பேட்மிண்டன் ஒற்றையர் SL3 போட்டியில் இந்தியாவின் பிரமோத் பகத் தங்கப் பதக்கம் வென்றார். இதே போட்டியில் இந்தியாவின் மனோஜ் சர்க்கார் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.

    இதன் மூலம் இந்தியாவுக்கு சனிக்கிழமை ஒரே நாளில் இரண்டாவது தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது. அது தவிர ஒரு வெள்ளி, ஒரு வெண்கலப் பதக்கங்கள் கிடைத்துள்ளன.

  8. புதுவையில் பிள்ளையார் சிலை வைக்க அனுமதி

    தமிழிசை சௌந்தரராஜன்.
    படக்குறிப்பு, தமிழிசை சௌந்தரராஜன்.

    பிள்ளையார் சதுர்த்தியை ஒட்டி புதுவையில் எல்லா இடத்திலும் பிள்ளையார் சிலைகள் வைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.

    புதுச்சேரியில் 25-வது முறையாக கொரோனா மேலாண்மை ஆலோசனைக் கூட்டம் ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. இதில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் தடுப்பூசி போடுவது அதிகப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், "கொரோனா பாதிப்பு கடந்த 2 நாள்களாக அதிகரித்து வருகிறது, இது குறித்து மக்கள் அஞ்சத் தேவையில்லை. எச்சரிக்கையுடன் இருந்து அனைவரும் தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும்," என்றார்.

    இதையடுத்து தமிழ்நாட்டில் பிள்ளையார் சிலை வைப்பதற்கு தடை இருக்கின்ற சூழலில் புதுச்சேரியில் அனுமதி வழங்கப்படுமா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

    அதற்கு பதிலளித்த தமிழிசை, "இன்னொரு மாநிலத்தின் முடிவு பற்றி என்னால் கூற முடியாது. ஆனால் தெலுங்கானா மாநிலத்தில் எல்லா இடங்களிலும் பிள்ளையார் சிலை வைக்க அனுமதி அளித்துள்ளனர்.‌ அதைப் போன்று புதுச்சேரி மாநிலத்திலும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    இறைவனை வணங்குவோருக்கு விழிப்புணர்வு உள்ளது. அவர்கள் வழிபாடு செய்யும்போது விழிப்புணர்வோடு நடந்து கொள்வார்கள். மக்கள் விழிப்புணர்வுடன் இருக்கும்போது எதற்கு தடைவிதிக்க வேண்டும்? என்று அவர் கேட்டார். கொரோனா பற்றிய விழிப்புணர்வும், அதில் எவ்வாறு பாதுகாப்பாக இருப்பது என்பது பற்றியும் மக்களுக்கு தெரிகிறது. கட்டுப்பாட்டோடு மக்கள் ஒரு சூழலை அணுகும்போது அரசாங்கம் சில நடவடிக்கைகளை எடுக்கலாம். மற்றொரு மாநில நடவடிக்கையைப் பற்றி சொல்வதற்கு எனக்கு உரிமையில்லை. ஆனால் நான் தொடர்புடைய இரு மாநிலத்திலும் திருவிழாக்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

    பிள்ளையார் சிலை வைக்க எந்த தடையும் இல்லை. தெலுங்கானா மாநிலத்தில் சிலை உயரத்திற்கு இருந்த கட்டுப்பாடு கூட இந்த ஆண்டு நீக்கப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தி அன்று மிக உயரமான விநாயகர் சிலையை தெலுங்கானா மாநிலத்தில் நான் திறந்து வைக்கவுள்ளேன்," என்றார் தமிழிசை சௌந்தரராஜன்.

  9. மேற்கு வங்கம் பவானிபூரில் செப்டம்பர் 30 இடைத் தேர்தல் - மம்தா போட்டியிடுவார்

    மேற்கு வங்க மாநிலம் பவானிபூர் சட்டமன்றத் தொகுதிக்கு செப்டம்பர் 30-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று சனிக்கிழமை அறிவித்துள்ளது இந்திய தேர்தல் ஆணையம். கடந்த சட்டமன்றத் தேர்தலில் மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ் அபார வெற்றி பெற்று மேற்கு வங்கத்தில் ஆட்சியைப் பிடித்தது. ஆனால், மம்தா பானர்ஜி தாம் போட்டியிட்ட நந்திகிராம் தொகுதியில் தமது முன்னாள் தளபதியான சுவேந்து அதிகாரியிடம் நூலிழையில் தோற்றுப் போனார்.

    தற்போது சட்டமன்ற உறுப்பினராக இல்லாத மம்தா பானர்ஜி தமது முதல்வர் பதவியில் தொடரவேண்டுமானால் ஏதாவது ஒரு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெல்லவேண்டும். எனவே, அவர் பவானிபூரில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை அக்டோபர் 3-ம் தேதி நடைபெறும். பவானிபூர் தவிர மேற்கு வங்கத்திலேயே சாம்சர்கஞ்ச், ஜாங்கிபூர் ஆகிய தொகுதிகளுக்கும் ஒடிஷாவில் பிப்லி தொகுதியிலும் செப்டம்பர் 30-ம் தேதியே இடைத் தேர்தல் நடக்கும்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  10. கொடநாடு கொலை கொள்ளை: மர்ம முடிச்சுகள் உள்ளன, விசாரணை தேவை - மார்க்சிஸ்ட்

    கே.பாலகிருஷ்ணன்

    பட மூலாதாரம், K.Balakrishnan/Facebook

    படக்குறிப்பு, கே.பாலகிருஷ்ணன்

    கொடநாடு கொலை கொள்ளை விவகாரத்தில் பல்வேறு மர்ம முடிச்சுகள் உள்ளன. எனவே, ஒருவர் விசாரணை செய்ய கூடாது என்று கூறுவதற்காக விசாரணை செய்யாமல் இருக்க முடியாது என்று கூறியுள்ளார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன். அந்த வழக்கில் உள்ள மர்ம முடிச்சுகள் அவிழ்க்கப்படவேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

    புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசியபோது இந்தக் கருத்துகளைத் தெரிவித்துள்ளார் அவர்.

    அரசு ஊழியர்கள் கோரிக்கை தொடர்பாக தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறிய கருத்துக்கள் ஏற்புடையவை அல்ல என்றும் அவர் தெரிவித்தார்.இந்தக் கருத்துகளை முதல்வர் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரிய அவர், திமுக அரசின் செயல்பாடுகள் தற்போது வரை நன்றாக உள்ளதாகவும் தெரிவித்தார்.அதே நேரம் அரசு ஊழியர்கள் கோரிக்கைகள் உள்ளிட்ட விஷயங்களில் தங்களுடைய நிலைப்பாட்டை அரசு மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.

  11. டோக்யோ பாராலிம்பிக்ஸ் - தங்கம் சுட்டார் இந்தியாவின் மணீஷ் நர்வால்

    மணீஷ் நர்வால்

    பட மூலாதாரம், Narendra Modi/Twitter

    படக்குறிப்பு, மணீஷ் நர்வால்.

    டோக்யோ பாராலிம்பிக்ஸ் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் பதக்கங்கள் வந்தவண்ணம் உள்ளன.

    P4 கலப்பு 50 மீட்டர் பிஸ்டல் SH1 போட்டியில் இந்திய துப்பாக்கி சுடும் வீரர் மணீஷ் நர்வால் தங்கப்பதக்கம் வென்றார்.

    இதே போட்டியில் இந்திய வீரர் சிங்ராஜ் அதானா வெள்ளிப்பதக்கம் வென்றார்.

    மணீஷ் நர்வால் தங்கம் வென்றது இந்திய விளையாட்டுக்கு சிறப்பான தருணம் என்று பிரதமர் நரேந்திர மோதி டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். சிங்ராஜ் அதானாவையும் அவர் பாராட்டியுள்ளார்.

    இதனிடையே பாராலிம்பிக்சில் இந்திய பாரா பேட்மிண்டன் வீரர் கிருஷ்ணா நாகர் SH6 ஆண்கள் ஒற்றையர் பாட்மிண்டன் இறுதிப் போட்டியில் நுழைந்துள்ளார்.

  12. வணக்கம் நேயர்களே!

    தமிழ்நாடு, இந்தியா மற்றும் உலக நாடுகள் தொடர்பான செய்திகள், விளையாட்டு மற்றும் பொழுது போக்கு செய்திகளை, இந்த நேரலைப் பக்கத்தில் வழங்குகிறோம். எங்களோடு இணைந்திருங்கள்.